Published : 03,Feb 2023 12:38 PM

கோவை: ரயிலில் அடிபட்டு இரு மாணவர்கள் பலி - போலீசார் தீவிர விசாரணை

Coimbatore-College-student-dies-after-being-hit-by-a-train-Police-are-investigating

சூலூர் அருகே ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவன் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் சூலூர் அன்னமடை வீதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் அஜய் (19). இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். இந்நிலையில் இன்று அவரது நண்பர் ராஜ்குமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் ராசிபாளையம் வந்துள்ளார். இதையடுத்து ராசிபாளையம் ரயில்வே கேட் அருகே வந்தவுடன் கீழே இறங்கிக் கொண்ட அஜய், ஒருவரை சந்தித்து விட்டு வருவதாக ராஜ்குமாரிடம் கூறிவிட்டு தண்டவாளத்தை கடந்து சென்றுள்ளார்.

image

இதையடுதது இரண்டு மூன்று ரயில்கள் சென்ற பின்பும் அஜய் திரும்பி வராததால் சந்தேகமடைந்த அவரது நண்பர் ராஜ்குமார் ரயில்வே ட்ராக் உள்ள பகுதிக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு அஜய்யுடன் மற்றொரு பெண்ணும் ரயிலில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதையடுத்து ராஜ்குமார் வெளியே ஓடிவந்து கூச்சலிட்டுள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது இருவரும் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் ரயில்வே போலீசார் 2 சடலங்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அஜய்யுடன் இருந்த பெண் ராசிபாளையம் பகுதியைச் சேர்ந்த சுகனேஸ்வரன் என்பவரது மகள் கீர்த்தி என்பதும், இவர் சூலூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து கீர்த்தியின் பெற்றோர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தது தனது மகள் தான் என உறுதி செய்தனர்.

image

ஏற்கெனவே தந்தையை இழந்த கீர்த்தி, எதற்காக ரயில்வே ட்ராக் பகுதிக்கு வந்தார் என தெரியவில்லை. இது தொடர்பாக கீர்த்தியின் சின்னம்மா கூறுகையில்... கீர்த்தி நேற்று பள்ளியை விட்டு வழக்கம் போல் 5 மணிக்கு வீட்டிற்கு வந்து விட்டார். இரவு 7 மணியளவில் அவரது தோழி ஒருவர் வீட்டிற்கு வந்து, வா நோட்ஸ் எடுத்து வரலாம் எனக் கூறி அழைத்துச் சென்றார். ஆனால் கீர்த்தியை அழைத்துச் சென்ற தோழி வீட்டில் இருக்கும் நிலையில், கீர்த்தி தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

image

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது ரயில்வே டிராக்கில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது ரயில் வருவது தெரியாமல் விபத்தில் சிக்கி இறந்தார்களா? என்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்