Published : 03,Feb 2023 11:08 AM
அண்ணா 54-வது நினைவு தினம்: முதல்வர் தலைமையில் திமுக சார்பாக அமைதிப் பேரணி!

பேரறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு தினத்தையொட்டி அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினத்தை முன்னிட்டு, திமுக சார்பாக அமைதிப் பேரணி நடைபெற்றது.
சென்னை வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் வரையில் நடைபெற்ற அமைதி பேரணியை திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
பின் பேரணியாக அண்ணா நினைவிடம் வந்து மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார், அவரை தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், டி.ஆர் பாலு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து கலைஞர் நினைவிடம் சென்று மரியாதை செலுத்திவிட்டு சென்றார் அவர்.
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற அண்ணனின் முழக்கத்தை என்றும் மெய்ப்பிக்க உறுதியேற்போம்!
— M.K.Stalin (@mkstalin) February 3, 2023
தனயனாய் அவர் பெயரிட்ட தமிழ்நாட்டை மேதினியில் உயரக் கொண்டு செல்வோம்! (1/2) pic.twitter.com/LBOSlLVRRc
இதில் திமுகவின் பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர் பாலு, அமைச்சர்கள் பொன்முடி, மா.சுபிரமணியன், சேகர் பாபு, உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், திமுகவைச் சார்ந்த நிர்வாகிகள் என பல்லாயிர கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.