`இந்த தொழிற்சாலையால், எங்களால மூச்சுவிடவே முடியல...’- ஆலையை மூடச்சொல்லி மக்கள் போராட்டம்!

`இந்த தொழிற்சாலையால், எங்களால மூச்சுவிடவே முடியல...’- ஆலையை மூடச்சொல்லி மக்கள் போராட்டம்!
`இந்த தொழிற்சாலையால், எங்களால மூச்சுவிடவே முடியல...’- ஆலையை மூடச்சொல்லி மக்கள் போராட்டம்!

திருப்பூர் மடத்துக்குளம் அருகே கல் அரவை தொழிற்சாலைக்கு எதிராக நின்று, ஆலையை மூடுமாறு 50க்கும் மேற்பட்ட பெண்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

`இந்த ஆலையினால் மூச்சுத்திணறல், ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு உள்ளாகிறோம்’ என்றும், விளைநிலங்கள் நாசாமாகின்றன என்றும் குற்றஞ்சாட்டி, தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கோரிக்கை வைத்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே துங்காவியில் பகுதியில், கல்அரவை தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து ஒப்பந்த அடிப்படையில் மடத்துக்குளம் வழியாக செல்லும் பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழி சாலைக்கான பணிகளுக்கு ஜல்லி கற்களை விநியோகம் செய்து வருகினறனர். இந்நிலையில் இங்கு கற்கள் உடைத்து அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்போது வெளிவரும் துகள்களால், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளும், விளைநிலங்களும் பாதிக்கப்படுவதாக கூறி, அப்பகுதி மக்கள் லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிற்சாலையை சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகளுக்கும், குழந்தைகளுக்கும் மூச்சு திணறல், ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிப்பு ஏற்படுவதாகவும், விளைநிலங்களில் கல் துகள்கள் படிவதால் விளைச்சல் இல்லாமல் நஷ்டம் ஏற்படுவதாகவும், மேற்கொண்டு விவசாயம் பார்க்கமுடியவில்லை என்றும், விலை நிலங்களில் உள்ள கால்நடை தீவனங்களை உண்ணும் கால்நடைகளுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதாகவும் பல்வேறு புகார்களை தெரிவித்து அம்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரியிடம் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். நீதிமன்ற உத்தரவின்படி மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் செயல்படவில்லை எனவும், அடுக்கடுக்கான புகார்களை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து நம்மிடையே பேசிய அவர்கள், “எங்களின் அனைத்து முயற்சிகளும் பலன் அளிக்காமல் போனதால், கடைசி முயற்சியாக போராட்டத்தில் இறங்கியிருக்கிறோம். இதற்குபிறகும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், எங்களுடைய விளைநிலங்களை அவர்களே எடுத்துகொள்ளட்டும்” என வேதனையோடு தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com