`அன்புருவாய் வந்து ஆட்கொண்ட குருபரன்...’ பழனி முருகனுக்கு தைப்பூசம் ஏன் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்?

`அன்புருவாய் வந்து ஆட்கொண்ட குருபரன்...’ பழனி முருகனுக்கு தைப்பூசம் ஏன் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்?
`அன்புருவாய் வந்து ஆட்கொண்ட குருபரன்...’ பழனி முருகனுக்கு தைப்பூசம் ஏன் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்?

தைப்பூச திருவிழாவின் சிறப்புகள், முருகனின் அறுபடை வீடுகளின் சிறப்புகள் ஆகியவற்றை பற்றி இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.

தைப்பூசத்தின் சிறப்புகள் தெரியுமா?

இந்த வருடம் தை பூசத்திருவிழா, வருகின்ற 05.02.2013 அன்று கொண்டாடப்படுகிறது.

தமிழ்க் கடவுளான முருகப்பெருமானுக்கு பல விஷேஷமான நாட்கள் இருந்தபோதிலும் தை மாதம் வருகின்ற தைப்பூசம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். பௌர்ணமி திதியும் பூச நட்சதிரமும் இணைந்து வருகின்ற நாள் தான் தைப்பூசம். அன்றையதினம் முருகனின் அறுபடை வீடான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆலயங்களில் முருகனுக்கு விஷேஷ பூஜையும், ஆராதனையும் நடைபெறும்.

தைப்பூச நேரத்தில் முருக பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறையவேறவும், நிறைவேறிய வேண்டுதல்களுக்காகவும் முருகனை நினைத்து விரதமிருந்து பாதயாத்திரை, அலகு குத்துதல் போன்ற வழிமுறைகளை செய்வர். பலரும் சர்க்கரை காவடி - தீர்த்தக் காவடி - பறவைக் காவடி - பால் காவடி - மச்சக்காவடி - மயில் காவடி போன்றவற்றையையும் ஏந்துவர். சிலர் விரதமிருந்து ஆலயங்களுக்கு சென்றும் கந்தசஷஷ்டி கவசம், கோளறு பதிகம், கந்தர் அலங்காரம், கந்தர் விபூதி, வேல் பதிகம் போன்ற முருகனின் மேல் பாடப்பட்ட பதிகத்தை பாடியும் கொண்டாடுவார்கள்.

தைப்பூசம் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

முருகன் தாய் தந்தையிடம் கோபித்துக்கொண்டு, பழனி மலையில் வீற்றிருக்கும் போது, தாராசுரன் என்னும் கொடிய அரக்கன் துன்பம் கொடுத்து வந்ததாகவும், அதனால் கோபம் கொண்ட முருகன், தந்தையாகிய சிவபிரானிடமிருந்து பதினோரு ஆயுதங்களும், தாய் உமையாளிடமிருந்து ஞானவேல் வேலையும் பெற்று, தாரகாசுரனை வென்று வீழ்த்திய நாள்தான் தைப் பூசம் என சொல்லப்படுகிறது. 

பழனியில் மட்டும் விமரிசையாக தைப்பூசம் கொண்டாடப்படுவது ஏன்?

அரக்கன் தாராசுரனை, முருகன் பழனியில்தான் வென்று வீழ்த்தினார் என்பதாலேயே அறுபடைவீடுகளில், மற்ற இடங்களை விட பழனி மலையில் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

முருகனின் அறுபடை வீடுகளின் வரலாறு:

திருப்பரங்குன்றம்: முருகபெருமானின் முதலாவது வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம்தான். இங்கு முருகன் தெய்வானை திருமணம் நடந்ததாகப் புராணங்களில் சொல்லப்பட்டு வருகிறது.

திருச்செந்தூர்: இது முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடு. இங்கு முருகன் சுப்பிரமணிய சுவாமியாக காட்சியளிக்கிறார். இங்கு முருகன், சூரபத்மன் என்ற அரக்கனை வதம் செய்ததாக கந்த புராணம் கூறுகிறது.

பழனி: இது முருகப்பெருமானின் மூன்றாம் படைவீடாகும். நாரதர் சிவனுக்கு அளித்த ஞானப்பழம் தனக்கு கிடைக்காததால், முருகன் கோபம் கொண்டு ஆண்டியின் கோலம் பூண்டு இந்த திருத்தலத்தில் தங்கிவிட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது.

சுவாமிமலை: இது முருகப்பெருமானின் நான்காம் படைவீடாகும். முருகன் தனது தந்தையான சிவனுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை கூறியதால், சுவாமிக்கு நாதனாக இங்கு அருள்பாளிக்கிறார். அதானாலேயே இது சுவாமிமலை என பெயர் பெற்றதாக சொல்லப்படுகிறது.

திருத்தணி: இது முருகப்பெருமானின் ஐந்தாம் படைவீடாகும். இங்கு அமைந்திருக்கும் குன்றில் தான், முருகன் வள்ளியை திருமணம் செய்து கொண்டதாக புராணங்கள் கூறுகின்றன.

பழமுதிர்சோலை: இது முருகப்பெருமானின் ஆறாம் படைவீடாகும். முருகப் பெருமான் தன் பக்தையான ஔவையாரை சோதிப்பதற்காக சிறுவனாய் வேடம் பூண்டு வந்து `சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ என்று கேட்ட இடம் இங்குதான் என நம்பப்படுகிறது.

புகழ்பெற்ற முருகனின் மற்ற ஸ்தலங்கள்

பத்து மலை, சென்னி மலை, தோரண மலை, கதிகாமம், குக்கி, குன்றக்குடி, மருதமலை, சிறுவாபுரி, பச்சைமலை, சிக்கல், திள்டல்மலை, வடபழனி, வள்ளிமலை, விராலிமலை, வயலூர், பூம்பாறை என பல ஸ்தலங்கள் முருகனுக்கு புகழ்பெற்ற ஸ்தலங்களாக உள்ளன. இதேபோல முருகனுக்கு விஷேஷமான மலராக செவ்வரளிப்பூ சொல்லப்படுகிறது. `செவ்வரளியில் மாலைத்தொடுத்து முருகனை பூஜித்து வர, தீராத துயர் தீரும்’ என்பது பலராலும் நம்பப்படும் ஐதீகமாகவும் உள்ளது.

தைப்பூச நாள், வேறு எதற்கெல்லாம் சிறப்பு தெரியுமா?

  • இந்த தினத்தில்தான், சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் என்றும் சொல்லப்படுகிறது.
  • இரணியவர்மன் என்னும் மன்னன் சிதம்பரத்திற்கு வந்து நடராஜருக்கு திருப்பணிகள் பலசெய்து, நடராஜரை நேருக்கு நேராகத் தரிசித்தது இந்த நாளில் என்று நம்பப்படுகிறது. இதனாலேயே சிவன் கோயில்களிலும் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
  • தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.
  • வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் தைப்பூச நட்சத்திரத்தன்று தான் ஒளியானார். அவர் ஒளியான வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில், தைப்பூசத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலாரை மனதால் துதிப்பர்

இத்தனை உயர்ந்த நன்னாளில் முருகப்பெருமானை வழிப்பட்டு அவரின் அருளைப் பெருவோம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com