Published : 01,Feb 2023 10:37 PM

தொடரை வென்றது இந்திய அணி! ஒரே சீரிஸில் சாதனை மேல் சாதனை படைத்த சுப்மன் கில்!

The-Indian-team-won-the-series-after-rolling-over-New-Zealand

நியூசிலாந்துக்கு எதிராக இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து, தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்தது.

கடைசி டி20 போட்டி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி, கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடியது. ஏற்கெனவே நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி முழுவதுமாக வென்றிருந்த நிலையில், தற்போது இவ்விரு அணிகளுக்கான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்று, இரு அணிகளும் சமநிலை வகித்தன. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று, அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இன்றையப் போட்டியில் வெற்றிபெறும் அணியே, தொடரைக் கைப்பற்றும் என்பதால், இவ்விரு அணிகளும் பலத்த எதிர்பார்ப்புடன் களமிறங்கின.

image

சுப்மன் கில் அதிரடி சதம்

அதன்படி, இந்திய அணியின் தொடக்க பேட்டர்களாக வழக்கம்போல் இஷான் கிஷனும், சுபமன் கில்லும் களமிறங்கினர். இதில் இஷான் கிஷன் 1 ரன்னில் வெளியேற, மறுமுனையில் நிலைத்து நின்ற சுப்மன் கில், நியூசிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்டார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த அவர், 63 பந்துகளில் 126 ரன்கள் எடுத்தார். அதில் 12 பவுண்டரிகளும், 7 சிக்ஸர்களும் அடக்கம். மறுபக்கம் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் அதிரடியாக ஆடி, 17 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். முன்னதாக அதிரடியாக விளையாடிய, ராகுல் திரிபாதி 44 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 24 ரன்களும் எடுத்தனர்.

மைதானத்தில் சாதனை படைத்த இந்தியா

இவர்களுடைய வலுவான பேட்டிங்கால், இந்திய அணி இந்தத் தொடரில் 200 ரன்களைக் கடந்தது. இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில், 4 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்துள்ளது. இந்த மைதானத்தில் டி20 போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகவும் இது பதிவாகியது. இதற்கு முன் இந்திய அணி கடந்த 2021இல் இங்கிலாந்துக்கு எதிராக எடுத்த 224 ரன்களே சாதனையாக இருந்தது. நியூசிலாந்து அணி தரப்பில், பிரேஸ்வெல், மிட்செல், சோதி, டிக்னர் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

image

நிலைகுலைந்த நியூசிலாந்து அணி

பின்னர், 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க விக்கெட்களை கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், அர்ஷ்தீப் சிங்கும் மாறிமாறி தங்களது பந்துவீச்சில் வெளியேற்றினர். பின்னர், உம்ரான் மாலிக்கும் தன் பங்குக்கு 1 விக்கெட் எடுக்க அந்த அணி, 4.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து பரிதவித்தது. அப்போது அந்த அணி வெறும் 21 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஆனால், அதற்குப் பின் களமிறங்கிய மிட்செல்லும், சாண்ட்னரும் கொஞ்ச நேரம் மிரட்டினர்.

தனி ஒருவனாய் ஜொலித்த மிட்செல்

என்றாலும் 13 ரன்கள் எடுத்திருந்த சாண்ட்னரை சிவம் மாவி பிரித்தார். தொடர்ந்து களமிறங்கிய சோதியையும் டக் அவுட்டாக்கி வெளியேற்றினார். அடுத்து களமிறங்கிய ஃபெர்குஷனையும் ஹர்திக் பாண்டியா டக் அவுட்டாக்கி வெளியேற்றினார். இப்படி, அடுத்தடுத்து விக்கெட்கள் சீட்டுக்கட்டுபோல் சரிந்தாலும் மிட்செல் மட்டும் இறுதிவரை நின்று தனி ஒருவனாகப் போராடினார். இறுதியில் அவரும் வீழ்ந்தபிறகு அந்த அணியின் தோல்விக்கு முடிவுக்கு வந்தது.

image

தொடரைக் கைப்பற்றிய இந்தியா

இறுதிவரை போராடிய அவர், 25 பந்துகளில் 1 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 35 ரன்கள் எடுத்தார். இறுதியில் அந்த அணி 12.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 66 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் தொடரையும் வென்றது. இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்களையும், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், சிவம் மாவி ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இந்திய அணிக்கு மிகப்பெரிய ரன் வித்தியாசத்திலான வெற்றி இதுதான். 

ஆட்ட நாயகன், தொடர் நாயகன்

126 ரன்கள் குவித்த சுப்மன் கில் ஆட்ட நாயகன் விருதினை தட்டிச் சென்றார். அதேபோல், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட கேப்டன் ஹர்திக் பாண்டியா தொடர் நாயகன் விருதினை பெற்றார். ஹர்திக் பாண்டியா இந்தப் போட்டியில் 4 விக்கெட் சாய்த்ததோடு 30 ரன்களையும் அடித்திருந்தார். மொத்தமாக 66 ரன்கள் மற்றும் 5 விக்கெட் சாய்த்துள்ளார். 

சர்வதேச போட்டிகளில் சுப்மன் கில்..

டி20, ஒருநாள், டெஸ்ட் என அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் விளாசியர்

மிக இளம் வயதில் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசியவர்

டி20 போட்டிகளில் இளம் வயதில் சதம் விளாசிய இந்தியர் - 23 வயது 146 நாட்கள் (சுரேஷ் ரெய்னா 23 வயது 156 நாட்கள்)

டி20 போட்டிகளில் ஒரு இன்னிங்சில் இந்திய அணிக்காக அதிக ரன் அடித்தவர் (126). விராட் கோலி 122.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக ரன் குவித்தவர் (360 ரன்)

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்