
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை முடித்துவிட்டு தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. நியூசிலாந்து தொடரை முடித்த கையுடன் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி மோதவுள்ளது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 9-ம் தேதி நாக்பூரில் தொடங்க உள்ளது
இந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்ற அவர், நியூசிலாந்து தொடரில் இருந்து முற்றிலுமாக விலகினார். அவரின் காயம் சரியாகி முழு உடற்தகுதி பெற இன்னும் 2 வாரங்கள் தேவைப்படும் என்பதால் முதல் டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.
உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே 2வது டெஸ்ட் போட்டியிலும் சேர்க்கப்படுவார். டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஃபார்மில் இருந்துவரும் ஸ்ரேயாஸ் ஐயர் விலகியிருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஸ்ரேயாஸ் ஐயரின் இடத்தை நிரப்புவதற்கு இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், கே.எஸ்.பரத் போன்ற வீரர்கள் அணியில் உள்ளனர்.