'இந்திரா காந்தி, ராஜீவ் காந்திக்கு நேர்ந்தது விபத்துதான்; கொலை அல்ல'-பாஜக அமைச்சர் பேச்சு

'இந்திரா காந்தி, ராஜீவ் காந்திக்கு நேர்ந்தது விபத்துதான்; கொலை அல்ல'-பாஜக அமைச்சர் பேச்சு
'இந்திரா காந்தி, ராஜீவ் காந்திக்கு நேர்ந்தது விபத்துதான்; கொலை அல்ல'-பாஜக அமைச்சர் பேச்சு

'இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோருக்கு நேர்ந்தது விபத்துதான்; கொலை அல்ல' என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார் உத்தரகாண்ட் மாநில அமைச்சர் கணேஷ் ஜோஷி.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை இந்தியா முழுவதும் 13 மாநிலங்களில் மேற்கொண்டார். இந்தியாவின் இறையாண்மையும் அரசியலமைப்புச் சட்டமும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி குமரி முதல் காஷ்மீர் வரை இந்த நடைபயணத்தை 150 நாட்களுக்கு ராகுல் காந்தி மேற்கொண்டார். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. ஸ்ரீநகரில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை பயணத்தை நிறைவு செய்தார்.

நிறைவு விழாவில் உரையாற்றிய ராகுல் காந்தி, தனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தியின் படுகொலை குறித்து தொலைபேசி அழைப்பு மூலம் தகவல் கொடுக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். ''அந்த வலி வன்முறை தூண்டுபவர்களுக்கு ஒருபோதும் புரியாது.  வன்முறையை தூண்டும் மோடி, அமித் ஷா, பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்றோருக்கு அந்த வலி ஒருபோதும் புரியாது. ராணுவ வீரனின் குடும்பத்தினருக்கு அந்த வலி புரியும். புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரரின் குடும்பத்தினருக்கு புரியும். ஒருவருக்கு அதுபோன்ற செல்போன் அழைப்பு வரும்போது ஏற்படும் வலியை காஷ்மீரிகள் புரிந்துகொள்வார்கள். இந்த யாத்திரையின் நோக்கம் என்னவென்றால் ஒருவரின் அன்பானவனரின் உயிரிழப்பை தொலைபேசி அழைப்பு மூலம் அறிவிப்பதற்கு முடிவு கட்டுவதேயாகும். அது ராணுவ வீரராக இருந்தாலும், சிஆர்பிஎப் வீரராக இருந்தாலும் அல்லது எந்த ஒரு காஷ்மீரியாக இருந்தாலும் சரி'' என்று ராகுல் காந்தி பேசினார்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக, உத்தரகாண்ட் மாநிலத்தின் விவசாயம் மற்றும்  ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கணேஷ் ஜோஷி பேசியுள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் கணேஷ் ஜோஷி நிருபர்களிடம் கூறுகையில், ''ராகுல் காந்தியின் அறிவை அறிந்து நான் பரிதாபப்படுகிறேன். ஆனால் அவரவருக்கு உள்ள அறிவுக்கு ஏற்பத்தானே பேச முடியும்? தியாகம், இந்திரா காந்தி குடும்பத்துக்கு மட்டும் சொந்தமானது அல்ல.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பகத்சிங், சாவர்க்கர், சந்திரசேகர் ஆசாத் போன்றோர்தான் தியாகம் செய்திருக்கின்றனர். இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தி ஆகியோருக்கு நேர்ந்தது விபத்துதான். அது கொலை அல்ல. விபத்துக்கும் கொலைக்கும் வித்தியாசம் இருக்கிறது. பிரதமர் மோடியால்தான் ராகுல் காந்தியால் ஸ்ரீநகரின் லால் சவுக்கில் தேசிய கொடி ஏற்ற முடிந்தது. காஷ்மீருக்கான 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டிருக்காவிட்டால் அங்கு இயல்புநிலை திரும்பியிருக்காது' என்று கூறினார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com