இந்த ஆடுகளத்தை பார்த்தால்.. அவர் ஐபிஎல் தொடருக்கே விளையாட வரமாட்டார்..!-கலாய்த்த காம்பீர்

இந்த ஆடுகளத்தை பார்த்தால்.. அவர் ஐபிஎல் தொடருக்கே விளையாட வரமாட்டார்..!-கலாய்த்த காம்பீர்
இந்த ஆடுகளத்தை பார்த்தால்.. அவர் ஐபிஎல் தொடருக்கே விளையாட வரமாட்டார்..!-கலாய்த்த காம்பீர்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்ட இரண்டாவது டி20 போட்டியில் ஆடுகளம் மோசமாக இருந்ததை விமர்சித்த கவுதம் காம்பீர், ஒருவேளை இந்த ஆடுகளத்தை அவர் பார்த்தால், ஐபிஎல் தொடருக்கே விளையாட வரமாட்டார் என ஒரு நட்சத்திர வீரரை நக்கலாக கலாய்த்து பேசினார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், நியூசிலாந்து அணி முதல் போட்டியை வென்று 1-0 என முன்னிலை பெற்றிருந்த நிலையில், இரண்டாவது போட்டியை வென்று தொடரில் உயிர்ப்புடன் இருக்கும் முயற்சியோடு இந்தியா களமிறங்கியது. டாஸ் வென்று முதலில் பந்துவீசிய இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத நியூசிலாந்து அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 20 ஓவர்கள் முடிவில் வெறும் 99 ரன்கள் மட்டுமே சேர்த்தது. சிறப்பான பார்மில் இருந்த பேட்டர்களும் சுழற்பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினர். அந்தளவு ஆடுகளம் எப்படி செயல்படுகிறது என்று எந்த ஒரு வீரராலும் கணிக்க முடியாதபடி இருந்தது.

இந்நிலையில் 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய வீரர்களும், நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொண்டு ஆடுவதில் என தடுமாறினர். 10 ஓவர்களில் 50 ரன்களை மட்டுமே எடுத்த இந்திய அணி, 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. தொடர்ந்து நியூசிலாந்து அணியின் அபாரமான ஸ்பின் அட்டாக்கை எதிர்கொள்ள முடியாத இந்திய அணியின் வீரர்கள், அடித்து ஆட முயற்சிக்காமல் தட்டி ரன்களை சேர்க்க முயற்சி செய்தனர். போட்டியின் கடைசி ஓவர் வரை சென்ற போட்டியானது 20ஆவது ஓவரின் 5ஆவது பந்தில் முடிவுக்கு வந்தது. 100 ரன்கள் இலக்கையையே திக்கித்திணறி தான் எடுக்கவேண்டி இருந்தது, ஆடுகளத்தின் தன்மையானது பேட்டர்களை முழுவதுமாக கடினமான நிலைமைக்கு தள்ளியது.

போட்டி முடிந்த பிறகு பேசியிருந்த இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா, “ ஆடுகளத்தின் தன்மையானது அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது. நாங்கள் அனைத்து சூழ்நிலைக்கும் தயாராக தான் இருக்கிறோம், ஆனால் இது டி20 போட்டிக்கான ஆடுகளம் போல் தெரியவில்லை. இது போன்ற போட்டிகளை நடத்துவதற்கு முன்னர், ஆடுகளத்தை முழுமையாக தயார் செய்யவேண்டும்” என்று விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் போட்டியின் ஆடுகளம் குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸின் ஹிந்தி கமண்டரியில் பேசிய இந்திய முன்னாள் வீரரும், லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணியின் ஆலோசகருமான கவுதம் காம்பீர், தென்னாப்பிரிக்காவின் ஓபனிங் பேட்டரான குயிண்டன் டிகாக்-ஐ வெளிப்படையாக கலாய்த்தார். கவுதம் காம்பீர் தன்னுடைய கமண்டரியில், “ ஒருவேளை குயிண்டன் டி-காக் இந்த ஆடுகளத்தை பார்த்தால், அவர் ஐபிஎல் தொடருக்கே விளையாட வரமாட்டார்” என கலாய்த்து பேசினார். அதற்கு மறுபுறம் கமண்டரியில் இருந்த மொகமது கைஃப், “ இல்லை, இல்லை அவர் விளையாட வருவார், நிச்சயம் விளையாட வருவார்” என கம்பீருடன் அவரும் சேர்ந்து கொண்டார்.

239 பந்துகளை எதிர்கொண்ட இரு அணி வீரர்களில் ஒருவர் கூட ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை. மாறாக வெறும் 14 பவுண்டரிகளே அடிக்கப்பட்டது. ஒரு டி20 போட்டியில் அதிக பந்துகளை எதிர்கொண்டு, ஒரு சிக்சர் கூட அடிக்கப்படாத போட்டியாக ஒரு மோசமான சாதனையை இந்த போட்டி படைத்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com