Published : 30,Jan 2023 12:59 PM
"இது எங்க கோவில்; அவங்கள விடமாட்டோம்"- 80 ஆண்டுகள் கடந்து இன்றும் தொடரும் தீண்டாமை!

இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவிலின் உள்ளே, சுமார் 80 ஆண்டுகாலமாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு உள்ளே நுழைய அனுமதி வழங்கப்படாத நிலையில், தற்போது கோவிலின் உள்ளே அவர்கள் அழைத்துசெல்ல எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊர்பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த தென்முடியனூர் கிராமத்தில் அறநிலைத்துறைக்கு சொந்தமான முத்து மாரியம்மன் கோவிலிற்குள், அதே ஊரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் உள்ளே செல்வதற்கு கடந்த 80 ஆண்டுகளாக அனுமதிக்கப்படாத நிலை இருந்துவந்துள்ளது.
இந்நிலையில் தற்போது பொங்கலை முன்னிட்டு, இந்த கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் 12 நாட்கள் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தர்கள், `எங்களையும் திருவிழா நடத்த ஒருநாள் அனுமதிக்க வேண்டும். கோவிலின் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அதற்கு ஊர் பொது மக்கள் பலர் அனுமதி வழங்காததால், மனவேதனை அடைந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள், தங்களை கோவிலின் உள்ளே அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவண்ணாமலை இந்து சமய அறநிலைத்துறையினரிடம் மனு அளித்தனர்.
இந்த மனுவின் அடிப்படையில், இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் இப்பகுதியில் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த 80 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களை கோவிலிற்குள் நுழைய அனுமதிக்க படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதனடிப்படையில் இன்று இந்து சமய அறநிலைத்துறை துறை சார்பில், “தாழ்த்தப்பட்டவர்களை கோவிலுக்கு உள்ளே செல்ல அனுமதிக்கபட வேண்டும். கோவிலானது சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது. அதனால் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும் கோவிலுக்கு உள்ளே செல்லாம்” என்று தெரிவித்தனர்.
இதனால் ஊர்பகுதி மக்களால் எந்தவித அசம்பாவிதமும் நடைப்பெறாமல் இருக்க, இந்த கிராமத்தை சுற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் காவல்துறையினர் நேற்று கிராமத்தை கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.
இந்நிலையில் தற்போது தாழ்த்தப்பட்டவர்களை கோவிலுக்கு உள்ளே அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை அறிந்த ஊர்பொதுமக்கள், “கோவிலுக்கு உள்ளே அவர்களை அனுமதிக்க கூடாது, இந்த கோவில் எங்களுக்கு சொந்தமான கோவில்” எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம் கலவரமாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளதால் அதிரடி படையினர் மற்றும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தால் பதற்றம் நிலவுவதால் கண்ணீர் புகை குண்டு வீசுவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அசோக் குமார், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, தண்டராம்பட்டு தாசில்தார் பரிமளா மற்றும் இந்து அறநிலையத்துறை ஊழியர்கள், வருவாய் துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் கூடியுள்ளனர்.