Published : 30,Jan 2023 12:05 PM

அசைவம் உண்பது கெட்ட பழக்கம் என்றாரா ரஜினிகாந்த்? பேச்சும் மருத்துவரின் விளக்கமும்!

Rajinikanth-speech-and-Doctor-explanation-regarding-eating-non-veg

“அசைவம் சாப்பிடுபவர்களை ஒழுக்கம் இல்லாதவர்கள் என்றும் அசைவ உணவு தீய பழக்கம் என்றும் ரஜினிகாந்த் கூறுகிறாரா?” எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அசைவ உணவுகள் தீய பழக்கமா என்பது பற்றி, மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விரிவாக நம்மிடையே எடுத்துரைத்தார். அதன் விவரத்தை இக்கட்டுரையில் காண்போம்.

அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், தான் நடத்துநராக இருக்கும் போது நாள்தோறும் இரண்டு முறை மாமிசம் சாப்பிடுவேன் என்றும் மது, சிகரெட், அசைவம் மூன்றையும் அளவுக்கு மீறி தொடர்ந்து பல வருஷங்கள் எடுத்துக்கொண்டவர்கள் 60 வயதுக்கு மேல் ஆரோக்கியமாக வாழ்ந்தது இல்லை என்றும் அந்த மாதிரி இருந்த என்னை ஒழுக்கமிக்கவனாக மாற்றியவர் எனது மனைவி லதா எனவும் கூறியிருந்தார்.  அப்படியெனில், அசைவம் சாப்பிடுபவர்களை ஒழுக்கம் இல்லாதவர்கள் என்றும் அசைவ உணவு தீய பழக்கம் என்றும் ரஜினிகாந்த் கூறுகிறாரா? எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

image

இந்நிலையில், அசைவம் உண்ணும் பழக்கம் தீய பழக்கமல்ல என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் அரசு பொதுநல மருத்துவரான ஃபரூக் அப்துல்லா. இதுகுறித்து அவர் கூறுகையில், ''மனிதன் இயற்கையாகவே ஒரு அனைத்துண்ணி. மாமிசம் மட்டும் உண்ணலாம்; அல்லது தானியங்கள் மட்டும் உண்ணலாம்; அல்லது காய்கறிகள் மட்டும் உண்ணலாம்; அல்லது கனிகள் மட்டும் உண்ணலாம். ஹார்லிக்ஸ் மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்த பாட்டி பற்றியும் படிக்கிறோம். முட்டை மட்டுமே சாப்பிட்டு நூறு வருடங்கள் வாழ்ந்த பாட்டியையும் பார்க்கிறோம்.

தொடர்புடைய செய்தி: காலை, மாலை, ராத்திரினு எல்லா நேரமும் டீதான்! - மேற்கு வங்க பெண்ணின் நூதன பழக்கம்!

மத்திய தென் கிழக்கு ஆசிய நாடுகளில் 'நான்-வெஜ்' என்பதில் பாம்பு , பல்லி , பூச்சிகளும் அடங்கும். உலகம் முழுவதும் அதிகமாக உண்ணப்படும் அசைவ உணவு பன்றி இறைச்சி. அதற்கடுத்த படியாக மாட்டு இறைச்சி, அதற்கடுத்த படியாக கோழி, மீன் போன்றவை.

image

மேற்சொன்னவைகளில் எது கிடைத்தாலும் மனிதனால் சாப்பிட்டு உயிர் வாழ முடியும். இதில் பிறப்பால் பலர் மரக்கறி (காய்கறி) மட்டும் உண்ணும் உணவு முறையில் இருக்கின்றனர். பலர் தாமாக முடிவு செய்து மரக்கறி மட்டும் உண்ணும் உணவு முறையை தங்களுக்கு உகந்ததாக அமைத்துக் கொள்கின்றனர். இன்னும் சிலருக்கு மருத்துவ காரணங்களுக்காக மரக்கறி உணவு முறை பரிந்துரைக்கப்படுகிறது. அவரவர் எதை உண்ண வேண்டும் என்று இடம், பொருள், ஏவல் பொருத்து முடிவு செய்து உண்ணும் உரிமை அவரவர்க்கு உண்டு

மருத்துவ ரீதியான காரணங்கள் இருப்பின் அந்தக் காரணங்களை அறிவியல் ஆய்வுகளுடன் பேசி நம்மால் சிலவற்றை உணவு சார்ந்து ஒருவருக்கு பரிந்துரை செய்ய இயலும். இதிலும் பரிந்துரை மட்டுமே செய்ய இயலும்.பரிந்துரையை ஏற்பதும் ஏற்காமல் விடுவதும் எப்போதும் அவரவர் தனிமனித சுதந்திரம் சார்ந்தது.

இதில் எதை சாப்பிட்டால் ஆரோக்கியம் என்பதில் தான் விவாதங்கள் நடக்கின்றன. விவாதங்கள் அறிவியல் ரீதியாக நடந்தால் ஆரோக்கியமானது தான். அதுவே ஜீவகாருண்யம், மாமிசம் செரிக்காது, மாமிசம் இதயத்துக்கு கேடு, மாமிசம் கேன்சர் வரவழைக்கும், கரியமில பாத அச்சு (carbon foot print), மறைநீர் (Virtual water) என்று அறிவியல் பூர்வமாக நிரூபணமாகாத பல விசயங்களை உள்ளடக்கி மாமிசம் உண்பது கேடு என்பது போலவும் மரக்கறி உண்பதால் தான் உலகம் விமோச்சமடையும் என்பது போல கருத்துகள் பரவுகின்றன.

image

இன்றும் மனிதன் அனைத்துண்ணி தான். தனது உணவுத் தேவைக்காக மற்ற உயிரை சார்ந்து வாழும் ஒரு சமூகப் பிராணி மனிதன். செடி, கொடி, மரத்துக்கும் உயிர் உண்டு. விலங்குகளுக்கும் உயிர் உண்டு. கடல் வாழ் உயிரினங்களுக்கும் உயிர் உண்டு. உணவுக்காக நாம் செய்யும் உயிர் வதையைக் காட்டிலும் பல்வேறு இன்னபிற தேவைகளுக்காக செய்யும் உயிர்வதை அதிகம்.

வேட்டையாடி சமூகமாக நாம் வாழ்ந்த காலந்தொட்டு பின் நாகரீகங்கள் தோன்றி விவசாய புரட்சி நடந்த பிறகும் மற்றொரு உயிரை உணவுக்காக நாடியே நமது இருப்பு உள்ளது. இந்தியாவில் மாமிச உணவுகளின் நுகர்வு என்பது மேலை நாடுகளைக் காட்டிலும் மிகக் குறைவு. இங்கு அதிகரித்து வரும் நீரிழிவு, இதய நோய், சிறுநீரக நோய், ரத்தக்கொதிப்பு, பிசிஓடி, உடல் பருமன் போன்ற பிரச்சனைகளுக்கு அறிவியல் ரீதியாக உணவைக் காரணமாகக் கூற வேண்டும் என்றால், மாமிசம் உண்பதை காரணமாகக் கூற இயலாது. மாறாக நாம் உண்ணும் தானியங்கள் சார்ந்த அதி உயர் மாவுச்சத்து உணவு (VERY HIGH CARBOHYDRATE INTAKE) முறையே காரணம் எனலாம்.

இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் புரதச்சத்து குறைபாடு அதிகமாக இருக்கிறது. இதற்குக் காரணம், பொருளாதாரம் சார்ந்த சவால்களாலும் சமூகத்தில் நிலவும் மாமிசம் மீது இருக்கும் பொய் பிரச்சாரங்களாலும் புரதம் நிரம்பிய மாமிசத்தையும் முட்டையையும் மக்கள் குறைவாக நுகரும் தன்மை இருக்கிறது.

image

இங்கு யாருக்கேனும் நீரிழிவோ ரத்தக் கொதிப்போ கண்டறியப்பட்டால் அவர்கள் ஏற்கனவே குறைவாக சாப்பிட்டு வரும் மாமிசத்தை முழுமையாக நிறுத்தவே கூறப்படுகிறது. முட்டைகளில் மஞ்சள் கருவை ஒதுக்கிவிட அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் அதனால் அறிவியல் ரீதியாக பெரிய பயன் ஏதும் இல்லை என்பதை நாம் உணர வேண்டும்.

காய்கறி மட்டும் உண்போர், மரக்கறியுடன் பால் உண்போர், மீன் மட்டும் உண்போர், அனைத்துண்ணியாக இருப்போர் யாராகினும் அவரவர் உணவு முறையில் வரம்பு மீறாமல் இருப்பது சிறந்தது. அறிவியல் அடிப்படை இன்றி இது தவறு, இது சரி என்று முடிவு செய்து ஒன்றைப் போற்றுவதோ ஒன்றை தூற்றுவதோ தவறு.

ஒருவர் உண்ணும் உணவு அவரவர் தேர்வு. நோய்கள் இருப்பின் மருத்துவ ரீதியான பரிந்துரைப்படி உணவின் தன்மையை அமைத்துக் கொள்வதும் அவரவர் சிந்தனைக்குட்பட்டது. மாமிசம் உண்ணும் பழக்கம் தீய பழக்கமன்று. அவரவருக்கு உகந்த மாமிசத்தை அவரவர் உண்ணலாம். அளவுக்கு மிஞ்சானால் அமிழ்தும் நஞ்சே. எதிலும் வரம்பு பிறர் எல்லைகளை மீறாதவர்களாக இருப்போம். பன்முகத்தன்மையை மதித்து வாழப் பழகிடுவோம்

இவ்வுலகம் நம் அனைவருக்குமானது. இங்கு பிறப்பால், உண்ணும் உணவால், படித்த படிப்பால், வகிக்கும் பதவியால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை. இங்கு நீங்கள் நான் என அனைவருமே பலகீனங்கள் பல நிறைந்த சாதாரண மனிதர்களே.

image

மது, புகை பழக்கத்தை நிறுத்த நினைப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய உணவு முறை

முதலில் அவர்கள் உண்ணும் உணவில் இனிப்பு சுவையை நிறுத்துவது நல்லது. மாவுச்சத்தைக் குறைத்து ஆரோக்கியமான கொழுப்பும் சரியான விகிதத்தில் புரதத்தையும் உண்ணும் பழக்கத்திற்கு மாறுவது மது/ புகை மற்றும் இன்ன பிற போதை வஸ்துகள் தரும் போதையில் இருந்து வெளிவர உதவக் கூடும்.

பொதுவாக தொடர்ந்து மது அருந்தும் ஒருவர் திடீரென மதுவை நிறுத்தும் போது அவருக்கு மது நிறுத்தம் சார்ந்த உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகள் உண்டாகும். இதை WITHDRAWAL SYMPTOMS என்கிறோம். பலரும் இந்த WITHDRAWAL SYMPTOMS-க்கு பயந்தே மது மற்றும் புகையை விட மறுக்கின்றனர்.

கீடோஜெனிக் உணவு முறை / பேலியோ உணவு முறை / குறை மாவு சரியான புரதம் & ஆரோக்கிய கொழுப்பு உணவு முறை (LOW CARB HEALTHY FAT APPROPRIATE PROTEIN) மது புகையை நிறுத்தும் போது ஏற்படும் போதை நிறுத்தம் சார்ந்த உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகளைக் குறைக்க உதவும்.

ரத்தத்தில் கீடோன்களை உண்டாக்கும் கீடோஜெனிக் உணவு முறையினால் மூளை கீடோன்கள் மூலம் இயங்கும் நிலையில் இருக்கும். இவ்வாறு கீடோன்களில் மூளை இயங்கும் போது மது / புகை அதீத உந்துதலை ( CRAVINGS) ஏற்படுத்த இயலாது. எனவே மதுப் பழக்கத்தை விட்டவர்கள் மீண்டும் மதுப்பழக்கத்துக்கு வரும் வாய்ப்பு குறையும்.

image

நமது மூளையில் மது அருந்தும் போதும், புகை பிடிக்கும் போதும், கஞ்சா அடிக்கும் போதும், கொக்கைன் அடிக்கும் போதும் மூளையின் "ஹிப்போகேம்பஸ்" எனும் பகுதியில் பரிசளிக்கும் மையத்தைத் தூண்டுகின்றன. அதாவது மூளைக்கு "ஹை" எனும் சிறிய நேர இன்பத்தை ஃபேண்டசி போதை உணர்வைத் தரக்கூடிய வஸ்துக்களை உட்கொள்ளும் போது இந்த பரிசளிக்கும் மையத்தைத் ( REWARD CENTRE) தூண்டி மூளை தனது நினைவாற்றல் மையத்தில் சேமித்து வைத்து விடுகிறது. தொடர்ந்து அந்த குறிப்பிட்ட வஸ்துவை உட்கொள்ளத் தூண்டுவதும் இந்த பரிசளிக்கும் மையங்கள் தான். அந்த குறிப்பிட்ட வஸ்து குறித்த பேச்சு வந்தால், அதைக் கண்ணால் பார்த்தால், அதன் வாசனையை நுகர்ந்தால் என்று இந்த CRAVING ஐ மூளைத் தூண்டில் கொண்டு இருக்கும்.

மூளையில் மது/ கொகய்ன்/ புகை இன்ன பிற போதை வஸ்துகள் "ஹை" வழங்கும் அதே பரசளிக்கும் மையங்களை நாம் உண்ணும் "இனிப்பு" (SWEET FOODS) தூண்டுகின்றன என்றால் நம்பித்தான் ஆக வேண்டும்.

எலிகளை வைத்து செய்த பரிசோதனைகளில் கொகய்னுக்கு அடிமையான எலிகளுக்கு சில நாட்கள் கழித்து கொகய்னும் சீனியும் கொடுக்கப்பட்டதில் கொகய்னை விடவும் சீனியைத் தேர்ந்தெடுத்தன என்கின்றன ஆய்வுகள். உண்ணும் உணவில் மாவுச்சத்தை குறைப்பதும் தேவையான புரதச்சத்தை உண்பதும் ஆரோக்கியமான கொழுப்புச் சத்து உணவை அதிகரிப்பதும் மூளையை கீடோன்களைக் கொண்டு இயங்க வைக்கின்றன.

இதன் விளைவாக மனத்தாழ்வு நிலை ஏற்படும் வாய்ப்பும் குன்றுவதாகத் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நம்மிள் யாரும் மது, புகை இன்ன பிற போதை வஸ்துக்களுக்கு அடிமையாக இருப்பவர்கள் தங்களின் உணவு முறையில் மாவுச்சத்தைக் குறைத்து இனிப்பு சுவை தரும் அனைத்தையும் நிறுத்தி
ஆரோக்கியமான கொழுப்பைக் கூட்டி தேவையான புரதத்தை உட்கொள்ளும் போது மேற்சொன்ன தீய பழக்கவழக்கங்கள் கட்டுப்படும்/ நீங்கும் வாய்ப்பு அதிகம்.

image

குறை மாவு ஆரோக்கியமான கொழுப்பு உண்ணும் உணவு முறைக்கு மாறிய நபர்கள், மது போதையில் இருந்து விடபட்டதையும் அவர்களுக்கு மது நிறுத்தப்படும் போது ஏற்படும் WITHDRAWAL SYMPTOMS மிகவும் குறைவாக அல்லது இல்லாமல் போனதையும் கண்டிருக்கிறேன். மீண்டும் அதே நபர்கள் பேலியோவை விட்டு அதிக மாவுச்சத்து மற்றும் இனிப்பு உண்ண ஆரம்பிக்கும் போது அவர்கள் மீண்டும் மது அருந்த ஆரம்பித்ததையும் கண்டிருக்கிறேன். இதை CROSS DEPENDANCE என்று அழைக்கிறோம்.

இனிப்பு சுவை, அதிக மாவுச்சத்து, மது, புகை, இதர போதை வஸ்துகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று லிங்க் ஆனவை. எனவே அனைவரும் தங்களின் உணவு முறையை குறை மாவு நிறை கொழுப்பு உணவுமுறைக்கு மாற்றி இனிப்பை அறவே நிறுத்தினால் மது, புகை போன்ற பழக்கங்களில் இருந்து எளிதில் வெளிவர முடியும் என்று நம்புகிறேன். மது நோய் புணரமைப்பு மையங்களில் குறை மாவு நிறை புரதம் ஆரோக்கியமான கொழுப்பு உண்ணும் பேலியோ உணவு முறையை குடிநோயில் இருந்து மீள்பவர்களுக்குப் பரிந்துரைத்தால் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்'' என்கிறார் அவர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்