Published : 29,Jan 2023 05:27 PM

குடவோலை முறை சொல்வது என்ன? உண்மையில் அது ஜனநாயகம் தானா? எப்படி நடக்கும் அந்த தேர்தல்!?

What-does-Kudavolai-method-mean--Is-it-applicable-to-today-s-politics-

பிரதமர் மான் கி பாத் நிகழ்ச்சியில் இன்று உத்திரமேரூர் கல்வெட்டில் இடம்பெற்றுள்ள குடவோலை தேர்தல் முறை குறித்து பேசியிருக்கும் நிலையில், அதுதொடர்பாக நாம் இங்கு விரிவாகப் பார்ப்போம்.

மான் கி பாத்தில் உரையாற்றிய மோடி..

ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் மோடி, மான் கி பாத் (மனதின் குரல்) என்ற வானொலி நிகழ்ச்சி மூலமாக மக்களிடம் நேரிடையாக உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முதல் மான் கி பாத் நிகழ்ச்சியில் இன்று (ஜனவரி 29) பேசிய பிரதமர் மோடி, காஞ்சிபுரத்தில் உள்ள உத்திரமேரூர் கல்வெட்டு குறித்து குறிப்பிட்டிருந்தார். அப்போது பேசிய அவர், ”தமிழ்நாட்டில் ஒரு சிறிய, ஆனால் பிரபலமான கிராமம் உத்திரமேரூர். இங்கு 1100-1200 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு உலகம் முழுவதையும் வியக்க வைக்கிறது. ஒரு சிறிய அரசியலமைப்பு போன்றது. இங்கு கிராம சபை குறித்தும் அவற்றின் செயல்பாடுகள் மற்றும் அதன் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் முறைகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

image

உத்திரமேரூர் பராந்தகன் கால கல்வெட்டு

அப்படி, உத்திரமேரூர் கல்வெட்டில் இருப்பது என இங்கு பார்ப்போம்... காஞ்சிபுரம், உத்திரமேரூர் வைகுண்டபெருமாள் கோயிலில்தான் இந்த கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டு, கி.பி 920 ஆண்டு காலத்தையது. இக்கல்வெட்டில்தான் குடவோலை முறை குறித்த தேர்தல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தல்தான் பிற்காலத்தில் வாக்குச் சீட்டு நடைமுறைக்கு ஓர் உதாரணமாக இருந்துள்ளது. குடவோலை என்பது கிராம நிர்வாக சபை உறுப்பினரை தேர்ந்து எடுக்க பழங்காலத்தில் பயன்பட்டது. குடவோலை முறை 9வது நூற்றாண்டு முதல் 16ஆம் நூற்றாண்டு வரை நடைமுறையில் இருந்தது. இதற்கான ஆதாரமாக கி.மு. 917 முதல் 919 வரை ஆண்ட மன்னன் முதலாம் பராந்தகன் காலத்திய கல்வெட்டுகள் கிடைக்கின்றன.

உத்திரமேரூர் சதுர்வேதிமங்கலத்தின் சபை கிராம நிர்வாகத்திற்குத் தேவையான குழுக்களை அரசாணையின்படி அமைக்கிறது. அந்த சதுர்வேதிமங்கலத்தின் தோட்டம், ஏரி போன்றவற்றிற்கான வாரியங்களை நாட்டாமை செய்பவருக்கான தேர்தல் முறையையே இந்த கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலம் என்பது சோழர்களால் பார்ப்பனர்களுக்கு தானமாக கொடுக்கப்பட்ட 12 சேரிகளை உள்ளடக்கிய ஊர்களாகும். உத்திரமேரூர் முப்பது குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அந்தந்த குடும்பைச் சேர்ந்தவர்கள் அந்த குடும்பிலிருந்து ஒரு நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

image

சபை உறுப்பினருக்கான தகுதிகள்

தேர்வுக்கு நிற்பவர் சில அடிப்படைத் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.

அதன்படி,

1/4 வேலிக்கு மேல் நிலம் வைத்திருப்பவராகவும்,

சொந்த நிலத்தில் வீடு கட்டியவராகவும் இருக்க வேண்டும்.

தேர்தலில் நிற்பவருக்கு வயது 30மேல் 70க்குள் இருக்க வேண்டும்.

வேதத்திலும் சாஸ்திரத்திலும் தொழிலும் காரியத்திலும் நிபுணராக இருக்க வேண்டும்.

நல்ல வழியில் சம்பாதித்த பொருளை உடையவராகவும்,

நல்ல மனம் உடையவராகவும், ஒழுக்கமானவராகவும் இருக்க வேண்டும்.

ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் அடுத்த மூன்று தேர்தல்களுக்கு நிற்க முடியாது.

இவ்வாறு கல்வி, வயது, சொத்து, ஒழுக்கம், செயல்திறன், நேர்வழி ஊதியம், மனத்தூய்மை ஆகியவையே தகுதிகளாகக் கொள்ளப்பட்டது.
இது தவிர,

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், ஏமாற்றியிருந்தாலோ அல்லது மோசடி வேலையில் ஈடுபட்டிருந்தாலோ, அவர் தன் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் நிற்க முடியாது. அவர் மட்டுமல்ல, அவரது உறவினர்கள் யாருமே தேர்தலில் நிற்க முடியாது. மேலும் மது உண்பவர், பிற பொருள் அல்லது பிறர் மனைவியை அபகரித்தவரும், கையூட்டு (லஞ்சம்) பெற்றவரும் தேர்தலில் நிற்க முடியாது. இவற்றுக்காகத் தண்டனை பெற்று பின்னர் வெளியில் வந்தவர்களும் தேர்தலில் நிற்க முடியாது.

image

குடவோலை முறை தேர்தல் 

இவ்விதம் தகுதி உடைய உறுப்பினர்களின் பெயர்களைத் தனித்தனியே ஒவ்வொரு குடும்பும் ஒலையில் எழுதி ஒரு குடத்தில் இடப்படும். பின்னர் ஊர் கூடியிருக்கும் மகாசபை முன்பு, அந்த குடம் குலுக்கப்பட்டு, சிறுவர்களில் ஒருவனை அழைத்து அதில் ஓர் ஓலையை எடுக்கச் செய்வர். எடுத்த ஓலையை முதியவர் தனது கையை அகல விரித்து வாங்கி வாசிப்பார். இவ்விதமே 30 குடும்பிற்கும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களது கடமைகளை ஆற்றுவர். அதுவும், ஒருவருட காலத்துக்குத்தான்.

ஆனால், இன்று தேர்தல் என்றாலே முறைகேடுகள்தான் நினைவுக்கு வருகின்றன. அதிலும் ஆட்சியில் 5 வருடங்கள் இருக்கும் அரசியல்வாதிகளின் பெயர்களில் எண்ணற்ற புகார்களும், குற்றச் செயல்களும் குவிந்துகொண்டே இருக்கின்றன. வேட்பாளர் தகுதியில், தேர்தல் பெட்டியில், வாக்குச் சாவடியில், வாக்கு எண்ணுவதில் என எங்கும் முறைகேடுகள் பற்றிய செய்திகள் வருகின்றன. பராந்தகன் காலத்து கல்வெட்டுபோல் இன்று வேட்பாளருக்கான தகுதிகள் நிச்சயம் இருந்தால், தகுதியில்லாத எந்தவொரு வேட்பாளரும் களத்தில் நிற்க முடியாது என்பதுதான் உண்மை.

ஆனாலும், அந்தக் கல்வெட்டின்படி வேதங்கள் படித்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது அதேபோல், 1/4 வேலி நிலமும் சொந்த வீடும் இருக்க வேண்டும் என்று உள்ளது. இந்த தகுதிகள் தேவை என்றால் அன்றைய சமூகத்தில் குறிப்பிட சில தரப்பினராலேயே தேர்தலில் போட்டியிட முடியும். எனவே இது ஜனநாயகமாக இருந்திருக்க முடியுமா? என்பது சந்தேகமே. 

 - ஜெ.பிரகாஷ்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்