Published : 29,Jan 2023 12:02 PM

யானை தாக்கியதில் உயிரிழந்த காவலாளி - இறந்தவரின் உடலுடன் 2 நாள்களாக பொதுமக்கள் போராட்டம்

An-elephant-was-injected-with-anesthetic-to-catch-it-People-protested-with-the-body-of-the-deceased

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி உயிரிழந்தவரின் உடலை வைத்து 2 வது நாளாக ஊர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட சீபுரம் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் நவ்ஷாத், இவரை காட்டு யானை தாக்கியதில் நேற்று மாலை உயிரிழந்தார். தகவல் அறிந்து உடலை மீட்கச் சென்ற வனம் மற்றும் காவல் துறையினரை தடுத்து நிறுத்திய ஊர் மக்கள், இறந்தவரின் உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓவேலி பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு பேர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளனர். குறிப்பிட்ட யானை தான் தொடர்ச்சியாக மக்களை தாக்கி வருவதாக குற்றம் சாட்டிய ஊர்மக்கள், யானையை பிடித்து செல்வதற்கான உத்தரவை கொடுத்தால் மட்டுமே உடலை எடுக்க சம்மதிப்போம் எனக் கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

image

இதையடுத்து நேற்று மாலை 6 மணி முதல் அதிகாலை 3 மணி வரை வருவாய்த் துறையினர், வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் நடத்திய ஐந்து கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனை அடுத்து அதிகாலை 3 மணி அளவில் இறந்தவரின் உடலை அப்பகுதியில் உள்ள பள்ளிவாசலில் வைத்து பூட்டிவிட்டு ஊர் மக்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில், இறந்தவரின் உடலுடன் இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. அதிகாரிகள் தொடர்ந்து ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், மக்களை அச்சுறுத்தும் காட்டு யானையை மயக்க செலுத்தி பிடிப்பதற்கான உத்தரவை உடனடியாக வழங்க வேண்டும், இறந்தவர் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதற்கான ஆணையை கையோடு வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து போராட்டம் தொடர்கிறது. பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்