Published : 28,Jan 2023 09:46 AM

தப்பித்தால் போதுமென ஆடிய சூர்யகுமார் யாதவ்! பவர்பிளேவில் சாண்ட்னர் செய்த தரமான சம்பவம்!

Suryakumar-Yadav-played-enough-to-escape--A-quality-incident-by-Santner-in-Powerplay-

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில், நியூசிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாத இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. நேற்றைய போட்டியில் நியூசிலாந்தின் கேப்டன் சாண்ட்னர், உலகின் நம்பர் 1 டி20 பேட்டருக்கு எதிராக நம்பமுடியாத ஒன்றை நிகழ்த்தி காட்டினார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்குபெற்று விளையாடுவருகிறது. கேன் வில்லியம்சன், டிம் சவுத்தி, டிரெண்ட் போல்ட் முதலிய மூத்த வீரர்கள் இல்லாத நியூசிலாந்து அணியை ஒருநாள் போட்டிகளில் டாம் லாதமும், டி20 போட்டிகளில் மிட்சல் சாண்ட்னரும் வழிநடத்துகின்றனர். ஒருநாள் தொடரை 3-0 என மோசமாக தோற்ற நியூசிலாந்து அணி, நேற்று நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணிக்கு பதிலடி கொடுத்து தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

image

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஃபின் ஆலன் மற்றும் டெவான் கான்வே இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். டெவான் கான்வே 35 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்சர் என விளாசி அரைசதமடித்து அசத்தினார். பின்னர் மிடில் ஆர்டர் பேட்டராக வந்த டேரில் மிட்சல், இந்திய அணியின் பந்துவீச்சை கிரவுண்டின் நாலாபுறமும் சிதறடித்தார். போட்டியின் 20ஆவது ஓவரில் அர்ஸ்தீப் சிங் வீசிய முதல் 3 பந்துகளையும் சிக்சருக்கு அனுப்பிய அவர், கடைசி ஓவரில் மட்டும் 27 ரன்களை அடித்து அணியை 176 ரன்களுக்கு எடுத்து சென்றார். இறுதிவரை களத்தில் இருந்த மிட்சல் 3 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என துவம்சம் செய்து 30 பந்துகளில் 59 ரன்கள் குவித்தார்.

image

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் ஓபனர்களை ஆட்டம் காணச்செய்தனர் நியூசிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள். கில், கிஷான் மற்றும் திரிப்பாத்தி என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, 15 ரன்களில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. பின்னர் என்ன தான் சூர்யகுமார் யாதவ் மற்றும் வாசிங்டன் சுந்தர் போராடினாலும், இறுதியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து அணி. நியூசிலாந்து அணியின் 3 ஸ்பின்னர்களும் சேர்ந்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

பவர்பிளேவில் சூர்யகுமாரை வைத்து மெய்டன் வீசிய சாண்ட்னர்!

பவர்பிளேவின் 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 20 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது இந்திய அணி. மீதியிருக்கும் 2 பவர்பிளே ஓவர்களை எதிர்கொள்ள களத்தில் இந்தியாவின் இரண்டு அதிரடி வீரர்கள் இருந்தனர். இந்நிலையில் பெரிய ரன்களை இந்தியா எட்டி மீண்டுவரும் என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். அதற்கேற்றார் போல் 5ஆவது ஓவரில் லாக்கி பெர்குசனை எதிர்கொண்ட கேப்டன் ஹர்திக் பாண்டியா சிக்சர், பவுண்டரி என பறக்கவிட அந்த ஓவரில் 13 ரன்களை சேர்த்தது இந்திய அணி.

image

தொடர்ந்து 6ஆவது ஓவரை வீச வந்தார் கேப்டன் சாண்ட்னர், எதிரில் களத்தில் இருந்தது சூர்யகுமார் யாதவ். டி20யில் அனைத்து அணியின் பந்துவீச்சாளர்களுக்கும் சிம்மசொப்பனமாக இருக்கும் சூர்யாவிடமிருந்து குறைந்தது 2 சிக்சர்களையாவது எதிர்பார்க்கலாம் என உற்சாகத்தில் இருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் மிட்சல் சாண்ட்னர். சூர்யகுமாரை களத்தில் வைத்து, அதுவும் பவர்பிளே ஓவரில் மெய்டன் ஓவரை வீசி நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனை திக்குமுக்காட வைத்தார் சாண்ட்னர்.

என்ன நடந்தது 6ஆவது மெய்டன் ஓவரில்?

முதல் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயற்சித்த சூர்யா, பேலன்ஸ் செய்யமுடியாமல் தடுமாறி கீழே விழுவார், பந்து ஆஃப் ஸ்டம்பை மிஸ் செய்து மேலே போகும். பின்னர் இரண்டாவது பந்தை சாண்டனர் அவுட்சைட் ஆஃபாக வீச அதை கவர் திசையில் பீல்டருக்கு நேராக அடித்ததால் ரன் எடுக்க முடியாமல் போகும். தொடர்ந்து மைதானத்திலிருந்த ஸ்விங்கை பயன்படுத்திகொண்ட சாண்டனர் 3ஆவது பந்தை ஸ்லோவாக தூக்கி ஆஃப் சைடில் வீசுவார், அதை எதிர்கொண்ட சூர்யகுமார் மீண்டும் கவரில் இருந்த பீல்டரிடமே அடிப்பார். பிறகு மைதானத்தில் அதிகப்படியான ஸ்விங் இருந்ததால், விக்கெட்டை பறிகொடுக்காமல் இருக்க தப்பித்தால் போதுமென தடுப்பாட்டத்தை வெளிப்படுத்துவார் சூர்யகுமார் யாதவ்.

image

உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனை பவர்பிளேவில் வைத்து மெய்டன் வீசியது இந்திய ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாண்ட்னரின் பவுலிங் மற்றும் கேப்டன்சியை பாராட்டி டிவீட் செய்திருந்த இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர், “ போட்டியை சாண்ட்னர் வழிநடத்திய விதம் சிறப்பாக இருந்தது. அவர் அவருடைய பவுலர்களை சரியான இடத்தில் பயன்படுத்தினார். மேலும் சூர்யகுமாருக்கு எதிராக டி20யில் மெய்டன் ஓவர் வீசி, செய்யமுடியாத ஒன்றை செய்துகாட்டியுள்ளார் சாண்ட்னர்” என்று பாராட்டியுள்ளார். மேலும் இந்தியா மீண்டும் கம்பேக் செய்து திரும்ப வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்