Published : 27,Jan 2023 04:35 PM
”இன்னும் இந்தியா உங்களை நம்பிதான் இருக்கிறது கோலி" - ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரும் சவால்களும்!

விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாட வேண்டும், டெஸ்ட் போட்டிகளில் இன்னும் இந்தியா அவருடைய ஆட்டத்தை சார்ந்து தான் இருக்கிறது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களை ஒயிட் வாஸ் செய்ததிற்கு பிறகு இந்திய அணி ஐசிசி-ன் தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது. இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடர்களிலும் இந்தியா சிறப்பாக செயல்படவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
பேட் கம்மின்ஸ் கேப்டனானதிலிருந்து ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காத ஆஸ்திரேலியா!
உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியாக இருக்கும் ஆஸ்திரேலிய அணி, அடுத்த பிப்ரவரி மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவிருக்கிறது. கடந்த 2021-2022 ஆஷஸ் தொடருக்கு முன்னதாக பேட் கம்மின்ஸ், ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் அணி கேப்டனாக பொறுப்பேற்றதிலிருந்து ஒரு டெஸ்ட் தொடர்களில் கூட ஆஸ்திரேலிய அணி தோற்காமல் விளையாடி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் குறைவான போட்டிகளில் தோல்வியடைந்த ஒரே அணியாகவும், அதிகமான போட்டிகளில் வென்ற ஒரே அணியாகவும் ஆஸ்திரேலியா இருந்து வருகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிபட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா 1 போட்டியில் மட்டும் தான் தோல்வியை சந்தித்துள்ளது. இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்திய அணி 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை மட்டுமில்லாமல், 2023 ஒருநாள் உலகக்கோப்பையையும் கணக்கில் கொண்டு ஒருநாள் தொடரையும் சேர்த்து இரண்டு தொடர்களையும் வெல்லவேண்டிய இடத்தில் இந்திய அணி இருக்கிறது.
3-0 அல்லது 3-1 என வெல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்தியா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேற வேண்டுமென்றால், 4 போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 அல்லது 3-1 என்ற விகிதத்தில் வெற்றிபெற வேண்டும். அப்படி வெற்றிபெற்றுவிட்டால் இந்திய அணி எந்தவித இடையூறும் இல்லாமல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்குள் நுழையும், இல்லையென்றால் அடுத்தடுத்த இடங்களில் இருக்கும் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளின் வெற்றி தோல்விகளை சார்ந்தே இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை பெறும்.
சமபலம் பொருந்திய இரு அணிகளில் எந்த அணிக்கும் வெற்றிபெறும் வாய்ப்பு உண்டு!
டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரையில் இரு அணிகளும் சம்பலத்துடன் இருந்து வருகின்றன. இரண்டு அணி வீரர்களும் தொடர்ந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரையில் டாப் ஆர்டர்கள் மற்றுமின்றி மிடில் ஆர்டர் பேட்டர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். பந்துவீச்சில் வேகப்பந்துவீச்சுக்கு டெஸ்ட்டின் நம்பர் 1 பவுலர் பேட் கம்மின்ஸ் மட்டுமில்லாமல், சுழற் பந்துவிச்சிலும் லாதன் லயன் முதலிய ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட்டுவருகின்றனர்.
இந்திய அணியை பொறுத்தவரையில் பேட்டிங்கில் டாப் ஆர்டர்கள் மட்டுமில்லாமல் லோயர் மிடில் ஆர்டர் பேட்டர்களும் இறுதியில் அதிகப்படியான ரன்களை பெற்றுத்தருகின்றனர். இந்திய அணியின் பேட்டிங்கை விட டெஸ்ட் வடிவத்தில் பந்துவீச்சு சிறப்பாகவே உள்ளது. வேகப்பந்து வீச்சில் சிராஜ் புதிய பந்தில் சிறப்பான லைன் மற்றும் லெந்த்களில் மிரட்டுகிறார். மிடில் ஓவர்களில் ரிவர்ஸ் ஸ்விங்கில் ஷமி சிறப்பாக செயல்படுகிறார். சுழற்பந்துவீச்சை பொறுத்தவரையில் அஸ்வின் லீடிங் ஸ்பின்னராக இருப்பார், கூடுதல் பலமாக அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் இருக்கின்றனர்.
ஏன் விராட் கோலி முக்கிய வீரராக இருக்கிறார்?
பந்துவீச்சில் இந்தியா பலம் வாய்ந்த அணியாக தெரிந்தாலும், பேட்டிங்கை பொறுத்தவரையில் மிடில் ஆர்டரில் அனுபவம் இல்லாத வீரர்களே இருக்கின்றனர். ஒருவேளை புஜாரா சொதப்பும் நிலை ஏற்பட்டால், அணியை வழிநடத்த வேண்டிய பொறுப்பு விராட் கோலியிடம் தான் இருக்கிறது. அவரும் சொதப்பினால் இந்தியாவால் பெரிய ரன்களை எடுக்கமுடியாத நிலை ஏற்படும்.
இந்நிலையில் தான் இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலி சிறப்பாக விளையாடவேண்டும் என்ற கருத்தை கூறியுள்ளார். விராட் கோலி குறித்து பேசியிருக்கும் சவுரவ் கங்குலி, “ விராட் கோலி வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக வெள்ளை ஒருநாள் மற்றும் டி20 ஆட்டங்களில் சிறப்பாக விளையாடினார். ஆனால் டெஸ்ட் போட்டிகளிலும் அவர் சிறப்பாக செயல்படவேண்டும். ஏனென்றால் இன்னும் இந்திய அணி விராட் கோலியை சார்ந்து தான் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும்,” ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும். இரண்டு அணிகளும் சமபலத்துடன் இருக்கின்றன. இந்த இரண்டு அணிகளுக்கு தான் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்புகளும் இருக்கிறது. இந்திய அணியை பொறுத்தவரையில், இந்திய மண்ணில் அதனை வீழ்த்துவது என்பது கடினமான ஒன்றாக இருக்கும். ஏனென்றால் பல வீரர்கள் இங்கு கிரிக்கெட் விளையாடிவருகின்றனர், வாய்ப்புகிடைக்காமலே பல திறமையான வீரர்கள் வெளியில் இருக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ”இந்திய அணி இதே 11 வீரர்கள் கொண்ட அணியாக நிறைய போட்டிகளில் விளையாட வேண்டும். நான் இந்திய அணியின் தேர்வு குழுவினர் மற்றும் தலைமை பயிற்சியாளரிடம் ஒன்றை கேட்டுக்கொள்கிறேன், இந்திய அணி உலகக்கோப்பை வரை எந்த மாறுதல்களும் இல்லாமல் விளையாடவேண்டும். உலகக்கோப்பையை நினைத்து பெரிதாக கவலை படவேண்டாம், இந்த அணியால் சிறப்பாக விளையாட முடியும்” என்று கூறியுள்ளார்.