Published : 27,Jan 2023 03:17 PM

அஜித்தின் ‘ஏகே63’ படத்தை இயக்கப் போவது இவரா?-தீயாய் பரவும் தகவல்! அப்படினா விக்னேஷ் சிவன்?

Actor-Ajith-team-up-with-director-Atlee-for-Ak63

நடிகர் அஜித் அடுத்ததாக நடிக்க உள்ளப் படத்தின் இயக்குநர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றன.

எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து நடித்திருந்த படம் ‘துணிவு’. பொங்கலை முன்னிட்டு, விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படத்துடன் கடந்த 11-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியானது.

‘ஏகே 62’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கான திரைக்கதை அமைப்பதில் கவனம் செலுத்திவரும் விக்னேஷ் சிவன், வருகிற பிப்ரவரியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அஜித்தின் ‘ஏகே 63’ படம் குறித்த தகவல் ஒன்று சமூகவலைத்தளங்களில் அதிவேகமாக பரவி வருவதுடன் ட்ரெண்டாகியும் வருகிறது.

அதன்படி, ‘ஏகே 63’ படத்தை இயக்குநர் அட்லீ இயக்கவுள்ளதாகவும், இந்தப் படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. விஜய்யை வைத்து ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்தவர் அட்லீ என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் அட்லீ இடம் ‘விஜய்யை வைத்து படம் எடுத்துவிட்டீர்கள், அஜித்தை வைத்து எப்பொழுது படம் இயக்குவீர்கள்’ என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு அவர், ‘ஒரு இயக்குநராக எல்லா நடிகர்களுடனும் படம் பண்ண விரும்புகிறேன். நிச்சயம் அஜித் உடனும் படம் பண்ணுவேன்’ என்று பதில் அளித்தார். அட்லீ பேசிய இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் தற்போது ஷேர் செய்து வருகிறார்கள்.

image

மேலும், அஜித்தின் ‘பில்லா’ படத்தை இயக்கிய விஷ்ணுவர்தன் - யுவன் ஷங்கர் ராஜா - சத்யஜோதி ஃபிலிம்ஸ் ஆகிய கூட்டணியில் தான் ‘ஏகே 63’ படம் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, இரண்டாவது பாகத்தை இயக்கி வரும் இயக்குநர் சுகுமாரும், அஜித்தின் ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’, ‘விஸ்வாசம்’ ஆகிய 4 படங்களை இயக்கிய சிறுத்தை சிவாவும் பேச்சுவார்த்தையில் இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் அஜித் ரசிகர்கள் #AK63 என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இயக்குநர் அட்லீ தற்போது ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோனே, யோகி பாபு ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜவான்’ என்ற பான் இந்தியா படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் வருகிற ஜூன் மாதம் 2-ம் தேதி வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து ‘ஏகே 63’ படத்தை இயக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. பல இயக்குநர்கள் பேசப்பட்டாலும், இயக்குநர் அட்லீக்கே ‘ஏகே 63’ படத்தை இயக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

image

ஏகே62 இருக்கும் போது ஏகே63 ஏன்? விக்னேஷ் சிவன் படத்தின் நிலை?

அஜித் மற்றும் விஜய் ஆகிய இரு உச்ச நடிகர்களும் ஒரே நேரத்தில் ஒரு படத்தில் மட்டும் நடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஒரு படம் முடியும் வரை அடுத்த படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளி வராத வகையில் பார்த்துக் கொள்வார்கள். இத்தகைய சூழலில் விக்னேஷ் சிவன் உடனான படத்தின் அறிவிப்பை வெளியிட்ட பிறகு தற்போது அடுத்த படம் தொடர்பான தகவல்கள் கசிந்து வருகிறது.

தீபாவளிக்கு விஜய்யின் ‘தளபதி 67’ வருவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில், மீண்டும் விஜய் உடன் தன்னுடைய படத்தை மோத விட அஜித் முடிவு செய்துள்ளதாகவும் அதற்குள் அடுத்த படத்தை முடித்துவிட வேண்டும் என்றும் பேசப்படுகிறது. ஆனால், விக்னேஷ் சிவன் திரைக்கதை எழுதுவதில் தாமதம் ஏற்படுத்தி வருவதால், அஜித் தரப்பில் சற்றே யோசிக்க தொடங்கிவிட்டதாகவும், முழுக்க முழுக்க தன்னுடைய பாணியிலே திரைப்படத்தை உருவாக்குவதில் அவர் உறுதியாக இருப்பதிலும் அஜித் தரப்பினருக்கு உடன்பாடு இல்லை என்றும் தெரிகிறது.

அதாவது விக்னேஷ் சிவன் புராஷக்டை ட்ராப் செய்யும் அளவிற்கு கூட சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. அதனால்தான், அடுத்தப் படம் குறித்த தகவல்கள் தீயாய் பரவி வருகிறது. விஜய் படத்துடன் மோத வேண்டும் என்பதாலும் மாஸான படமாக அதனை உருவாக்க வேண்டும் என்று நினைத்துள்ளதாலும், விஷ்ணுவர்தன் போன்ற இயக்குநர்களை நாடுவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அஜித்தை வைத்து ‘பில்லா’, ‘ஆரம்பம்’ ஆகிய மாஸான திரைப்படங்களை கொடுத்தவர் விஷ்ணுவர்தன் என்பது குறிப்பிடத்தக்கது. 

எனினும், ‘ஏகே62’ படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே வாங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டநிலையில், தற்போது ‘ஏகே63’ படம் குறித்தான தகவல் சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்