Published : 26,Jan 2023 10:39 PM

"நீ ஒரு சூப்பர் ஸ்டாருன்னு ப்ரூப் பண்ணிட்ட” - ரஜினியின் மங்காத மகுடமும் விஜய்யின் ஆசையும்!

Controversies-about--Super-Star--crown-and-Vijay-fans

சூப்பர் ஸ்டார் பட்டமும் தொடரும் விவாதமும்

சமீப காலமாக சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பான விவாதம் அனல் பறந்து கொண்டே இருக்கிறது. வசூல் சக்கரவர்த்தியாக வலம்வரும் நடிகர் விஜய்தான் தற்போதைய சூப்பர் ஸ்டார் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

வைரலாகும் தீ வீடியோ!

ரஜினிகாந்த் நடிப்பில் 1981 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் தீ. ரஜினியின் சினிமா கேரியரில் பில்லா போன்று மிகவும் ஸ்டைலிஸ் ஆன கேங்ஸ்டர் படம்தான் தீ. தன்னுடைய யதார்த்தமான, ஸ்டைலான நடிப்பில் எல்லோரையும் கட்டிப்போட்டிருப்பார் ரஜினி. தீ திரைப்படம் வெளியாகி 41 ஆண்டுகள் ஆன நிலையில், அதனை அவருடைய ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கொண்டாடி வருகிறார்கள்.

குறிப்பாக தீப் படத்தில் நடிகரும், தயாரிப்பாளருமான பாலாஜி பேசும் வசனத்தை ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள். தீ படத்தில் ரஜினி டான் ஆக வளர்ந்து வரும் பொழுது ஒரு முக்கியமான சம்பத்திற்கு பிறகு, “நீ ஒரு சூப்பர்ஸ்டாருன்னு ஃப்ரூப் பண்ணிட்ட, இன்று முதல் இந்த நாற்காலி உனக்குத்தான் சொந்தம்" என்று பேசியிருப்பார். அந்த வீடியோவை ஷேர் செய்த பலரும், ”தீ படத்தில் இந்த வசனம். இது படத்துக்கான வசனம் என்று மட்டும் கருதினால் அது உங்கள் தவறு” என்று குறிப்பிட்டு சிலாகித்து வருகிறார்கள்.

image

சூப்பர் ஸ்டார் பட்டத்தை ஏற்க மறுத்த ரஜினி!

ஆபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றிய ரஜினிகாந்திற்கு, 1978 ஆம் ஆண்டு வெளியான பைரவி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கிடைத்தது. ஆனால், முதலில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை ரஜினிகாந்த் விரும்பவில்லை. அதனை ஏற்க மறுத்தார். இதுதொடர்பாக தயாரிப்பாளர் தாணு அளித்த பேட்டி ஒன்றில் விரிவாக பேசியிருந்தார். ஏனெனில் பைரவி படத்தின் சென்னை வட்டார விநியோகஸ்தராக இருந்தவர் தாணு. அன்று தாணு போஸ்டர்கள் மூலம் செய்த தரமான புரமோஷன்களை கண்டு ரஜினியே மிரண்டு போய்விடார். தாணுவையும் பாராட்டி இருக்கிறார். ஆனால், சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை அவர் விரும்பவில்லை.

இதுதொடர்பாக தாணு அளித்த அந்த பேட்டியில், “பைரவி பட தயாரிப்பாளர் கலைஞானம், டைரக்டர் எம்.பாஸ்கர் இருவரும் என்னை ஒரு நாள் வந்து பார்த்தார்கள். "ரஜினி அனுப்பி, உங்களை வந்து பார்க்கிறோம். எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகிய மூத்த கலைஞர்கள் இருக்கும்போது, தன்னை சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதை ரஜினி விரும்பவில்லை. அப்படி விளம்பரப்படுத்துவதை நிறுத்திவிடச் சொன்னார்'' என்றார்கள். ஆனால், இதற்குள் சூப்பர் ஸ்டார் என்ற பெயர் பிரபலமாகி விட்டது. ரஜினியை பார்க்கும்போதெல்லாம் ரசிகர்கள் `சூப்பர் ஸ்டார்' என்று குரல் எழுப்ப ஆரம்பித்து விட்டனர். எனவே, நான் துணிந்து `கிரேட்டஸ்ட் சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிக்கும் பைரவி என்று விளம்பரம் செய்தேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

உலகத்திற்கே ஒரே சூப்பர் ஸ்டார்தான் - ஷாருக்கான் அதிரடி

இந்திய அளவில் பல நடிகர்களும் ரஜினி காந்த் தான் சூப்பர் ஸ்டார் என்று அழுத்தமாக தங்கள் கருத்தை பதிவிட்டுள்ளனர். அந்த வரிசையில் பாலிவுட்டின் பாஷா ஆக திகழும் ஷாருக்கான நச்சென்று தன்னுடைய கருத்தை பதிவிட்டார். அது சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி. அந்த நேர்காணலில் தீபிகா படுகோனிடம், "கோச்சடையான், சென்னை எக்ஸ்பிரஸ் என்று இரண்டு சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்திருக்கிறீர்கள். நீங்கள் பணியாற்றிய விதத்தில் யார் பெஸ்ட் என்று நினைக்கீர்கள்?" என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

தீபிகா சற்று தயங்க, உடனே வந்த ஷாருக்கான் மைக் பிடித்து, "இந்த கேள்விக்கு தீபிகாவால் பதில் சொல்ல முடியாது. நானே சொல்கிறேன். உலகத்திற்கு ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். அவர் ரஜினி சார்தான். இது எல்லோருக்கும் தெரியும். ரஜினி சாருக்கு ஜப்பானில் இருக்கும் ரசிகர்களை கண்டு நான் வியந்திருக்கிறேன்” என்று அதிரடியாக பதில் அளித்தார்.

image

விஜய் மனதிற்குள் சூப்பர் ஸ்டார் ஆசை இருக்கா?

வாரிசு படம் தொடர்பான புரமோஷன் நிகழ்வுகளின் போதுதான் சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பான விவாதம் சூடுபிடித்தது. இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார் சூர்ய வம்சம் நிகழ்வை சுட்டிக்காட்டி விஜய்தான் சூப்பர் ஸ்டார் என்று கூறினார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தொடர்ச்சியாக விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். இருப்பினும், ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது பலரும் ரஜினிதான் சூப்பர் ஸ்டார் என்று பதில் கொடுத்து வருகிறார்கள்.

ஆனால், இந்த விவகாரத்தில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால், தன்னை வைத்துகொண்டே பலரும் சூப்பர் ஸ்டார் என்று கூறி வரும் நிலையில் நடிகர் விஜய் ஏன் இதுவரை அதுகுறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஒருவேளை விஜய்யும் அதனை ரசிக்கிறாரா என்றே தோன்றுகிறது. வசூலை பொறுத்தவரை தமிழ் சினிமா நெம்பர் 1 இடத்தில் இருப்பதால் அவர் நினைப்பதில் தவறில்லை.

image

இதனை செய்திருந்தால் விஜய் மதிப்பு கூடுமல்லவா!

சீனியர் நடிகரான ரஜினிகாந்திற்கு இன்றளவும் மசுவு குறையவே இல்லை. அமிதாப் போன்று டிராக் மாற்றிக் கொள்ளவும் இல்லை. ரஜினியின் படங்களுக்கும் இன்றளவும் முதல் நாள் முதல் காட்சிக்கு கூட்டம் அலைமோதவே செய்கிறது. விஸ்வாசம் பெரிய வெற்றி பெற்ற போதும் பேட்ட அதற்கு ஈடு கொடுத்தது. அப்படி களத்தில் அவர் இருக்கையில் விஜய் சற்றே காலம் பொறுத்து இருக்கலாம்.

ஒரு விஜய் தானாக முன் வந்து ‘ரஜினி களத்தில் இருக்கையில் என்னை யாரும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம்’ என்று பேசினால் அவர் மீதான மதிப்பு பல மடங்கும் கூடும் அல்லவா. இதனை ஏன் விஜய் செய்ய தவறுகிறார்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்