Published : 26,Jan 2023 07:14 AM

`நாங்கள் வாரிசுகள்தான்; ஆனால் கோட்பாடுகளுக்கு, கொள்கைகளுக்கு வாரிசுகள்!”-முதல்வர் ஸ்டாலின்

CM-Stalin-speech-at-Mozhipor-Thiyagigal-Memorial-day-event

“பாஜக இந்தியை திணிப்பதை வழக்கமாக செய்து வருகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என ஒரே மொழியை வைத்து மற்ற மொழிகளை பாஜக அழிக்க பார்க்கிறது. இந்தியை அதிகாரம் செலுத்தும் மொழியாக வைத்து, இணைப்பு மொழியான ஆங்கிலத்தை அகற்றி இந்தியை முழுக்க முழுமையான மொழியாக பாஜக செய்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை ஆக்க வேண்டும்” என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

திருவள்ளூரில் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அமைச்சர் நாசர் மற்றும் எம்எல்ஏக்கள் சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “வீழ்ச்சியுற்று கிடந்த தமிழனம் பகுத்தறிவால் வீறு கொண்டு எழுந்த வராலாற்றை கூறும் நாள் இந்த நாள். ஆங்கிலேய ஆட்சி காலத்திற்கு முன்பே இந்தியை எதிர்த்து தமிழுக்காக தமிழர்கள் உயிர் நீத்த நாள் இது. இந்தி திணிப்பு ஆபத்து என மக்களிடம் தெரிவித்த அறிஞர்கள், தமிழுக்காக உயிர் நீத்தவர்கள் மொழிப்போர் தியாகிகள்.

மொழிப்போர் தியாகிகள் படங்களாக இருந்து வழி நடத்தி கொண்டிருக்கிறார்கள். மொழிக்காக தேக்குமர தேகத்தை இழந்தவர்கள் திமுகவினர். சிதம்பரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் ராஜேந்திரன் உயிரிழந்தார். தமிழ்த் தாயின் புதல்வர்களுக்கு தலை வணங்குகிறோம். யாரால் ஆட்சிக்கு வந்தோம் என்பதை மறந்தவரல்ல அறிஞர் அண்ணா. அதற்கு பிறகே தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டது. உலகம் முழுவதும் இளைஞர்கள் உலா வர இரு மொழி கொள்கையே காரணம்.

ஆனால் பாஜக இந்தியை திணிப்பதை வழக்கமாக செய்து வருகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என ஒரே மொழியை வைத்து மற்ற மொழிகளை பாஜக அழிக்க பார்க்கிறது. இந்தி மொழி திணிப்பை பாஜக பட்டவர்த்தனமாக செய்கிறது. இந்தியை அதிகாரம் செலுத்தும் மொழியாக பாஜக செய்து வருகிறது. இணைப்பு மொழியான ஆங்கிலத்தை அகற்றி இந்தியை முழுக்க முழுமையான மொழியாக பாஜக செய்து வருகிறது. இதற்கு இந்தி பேசும் மாநிலங்களில் பரிந்துரைகள் இருக்கிறது. இதனாலேயே நாம் இந்தி திணிப்புக்கு எதிராக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம்.

image

கழகம் தோன்றியது முதல் திமுக, மொழி காப்பு இயக்கமாக இருக்கிறது. இந்தி மொழி போராட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடரும்.” என்றார்.

தொடர்ந்து திருவள்ளூர் குறித்து பேசுகையில், “திருவள்ளூர் மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டம். கோயில்கள் நிறைந்த மாவட்டம். திமுகவை தோற்றுவித்த மூவரில் ஒருவரான பொன்னேரியை சேர்ந்த நடேசன் இருக்கும் மாவட்டம் திருவள்ளூர் மாவட்டம்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை ஆக்க வேண்டும். 2017 முதல் 2020 வரை சமஸ்கிருத மொழியை வளர்க்க ரூ. 643 கோடியை பாஜக செலவு செய்துள்ளது/ ஆனால், தமிருக்கு ஒதுக்கியது ரூ. 23 கோடிக்கு 6 லட்சம் குறைவு. தமிழ் மொழி ஊனோடும், உணர்வோடும் கலந்தது. எந்த மொழியை படிப்பது என்பது அவரவர் விருப்பம். அதை யாரும் கட்டாயப்படுத்த முடியாது.

image

5 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை திமுக ஆட்சியில், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் செய்துள்ளோம். நிதி நிலைமை சீராக இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக செய்திருப்போம். 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் நாற்காலி்க்கு சண்டையிட்டு கொண்டு மக்களை மறந்தார்கள் அவர்கள். நாங்கள் ஒன்றரை ஆண்டுகளில் மாற்றம் செய்திருக்கிறோம். முன்னணி ஊடகங்கள் திமுக ஆட்சிக்கு முதலிடம் கொடுத்துள்ளன எனவும்,

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை `டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன்’ என கூறியவர் தான் பழனிசாமி. கொடநாடு மர்மம் இருந்தது அதிமுகவின் சாதனை. குட்கா விற்பனையில் 2 அமைச்சர்கள் காவல் துறையினர் உதவியோடு ஈடுபட்டனர்.

ஈரோட்டில் அதிமுகவினருக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். அதேபோல, வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் மக்கள் பாடம் புகட்டுவர். தமிழின விரோதிகள் திருந்த வேண்டும் அல்லது மக்களால் திருத்தப்படுவீர்கள். தமிழ்நாட்டின் உரிமைகளை அதிமுகவினர் அடகு வைத்தனர். ஜெயலலிதா இருந்த வரை நீட் தமிழ்நாட்டில் இல்லை, அவர் இறந்த பின் நீட் உள்ளே வந்தது.

பச்சை துண்டு போட்டு கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு பச்சை துரோகம் செய்யப்பட்டது. தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்த ஆட்சி அதிமுக ஆட்சி. குடியுரிமை, வேளாண், நீட் உள்ளிட்டவைகளுக்கு எதிராக சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தோம். வாரிசுகள் என சொல்பவர்களுக்கு சொல்கிறேன்... கோட்பாடுகளுக்கு, கொள்கைகளுக்கு வாரிசுகள் நாங்கள்.

தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் அயராது பாடுபட்டு வருகிறேன் எனவும், ஊருக்கு உழைத்தல் யோகம் என்பர், ஊருக்கு உழைப்பது தியாகம். மொழிப்போர் தியாகிகள் வாழ்க. தமிழ்நாடு வாழ்க" எனக்கூறி உரையை முடித்தார்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்