Published : 23,Jan 2023 11:15 PM

”விமர்சனங்களை ஏன் ஏற்க மறுக்கிறார்?”.. வம்சியின் பேச்சும் தமிழ் இயக்குநர்களின் பக்குவமும்!

vamshi-comparison-with-lokesh-and-H-vinoth

அஜித்தின் ‘துணிவு’ படமும், விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படமும் கடந்த 11-ம் தேதி ஒரே நாளில் வெளியானது. இதில் விமர்சன ரீதியாக வாரிசு படத்தை காட்டிலும் ‘துணிவு” படத்திற்கு கூடுதலான வரவேற்பு கிடைத்தது. எனினும், ‘வாரிசு’ படம் அதையெல்லாத்தையும் தாண்டி வசூலில் சாதனை செய்து வருகிறது.

இதற்கிடையில், ‘வாரிசு’ படம் சீரியல் போன்று இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அப்படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி சமீபத்தில் அளித்திருந்தப் பேட்டி ஒன்றில், அதற்குப் பதில் கூறிய விதம் முறையாக இல்லை என்று விமர்சிக்கப்பட்டது. மிகவும் attitude- உடன் அவர் பேசுவதாகவும், தனதுப் படத்தின் குறைகளை ஒரு இயக்குநர் ஏற்றுக்கொண்டு பக்குவமாக பதிலளிக்க வேண்டும் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

குறிப்பாக தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களாக வலம் வரும் எச். வினோத் மற்றும் லோகேஷ் கனகராஜ் எவ்வாறு தன்னடக்கத்துடன், பார்வையாளர்களின் வலியை புரிந்துகொண் பேசுகிறார்கள் என்றும், 3 பேரையும் ஒப்பீட்டு சில வீடியோக்களை நெட்டிசன்கள் பகிர்ந்தனர். தமிழ் இயக்குநர்களுக்கு இருக்கும் பக்குவம், தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளிக்கு இல்லை என்றும் கூறப்பட்டது. ஆதிகாலம் முதல் பல பெரும் இயக்குநர்களுடன் பயணித்த கமல்ஹாசன் கூட, attitude காட்டாமல் தான் பதிலளிப்பார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இந்த வீடியோ குறித்து தெளிவாக நாம் பார்க்கலாம்.

image

வம்சி பைடிபள்ளி அளித்தப் பேட்டியில் விமர்சனங்கள் குறித்து கேள்வி கேட்டதற்கு, “தற்போதைய காலங்களில் ஒரு படத்தை உருவாக்குவது என்பது எவ்வளவு கடினம் என்று உங்களுக்கு தெரியுமா?. ஒரு படத்தை உருவாக்க எத்தனைப் பேர் உழைக்கிறார்கள் என்று நீங்கள் அறிந்தது உண்டா?. ஒரு படத்தை உருவாக்க எவ்வளவு கடின உழைப்பை எத்தனைப் பேர் தருகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?. இந்தியாவின் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவரான விஜய் எவ்வளவு கடின உழைப்பை தருகிறார், படத்தின் ஒவ்வொரு பாடலுக்குமான நடனத்திற்கும் ரிகர்சல் எடுக்கிறார். வசனத்திற்கு ரிகர்சல் எடுக்கிறார். முயற்சிகள் மட்டும் தான் எங்கள் கைகளில் இருக்கிறது. முடிவுகள் எங்கள் கைகளில் இல்லை. இந்த கடின உழைப்பை எல்லாம் எதற்காகத் தருகிறோம் என்றால் மக்களை மகிழ்விக்கத்தான்.

இது ஒண்ணும் நகைச்சுவை அல்ல. ஒரு படத்தை உருவாக்க படக்குழுவினர் தங்களை தியாகம் செய்கிறார்கள். ஏன் சீரியல் போன்று இருப்பதாக சொல்கிறீர்கள். சீரியல் ஒன்றும் தரம் தாழ்ந்ததில்லை. நமது தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா என குடும்பத்தில் உள்ளவர்களை போய் பாருங்கள் எல்லோரும் சீரியல் தான் பார்க்கிறார்கள். விமர்சகர்களுக்காக நாங்கள் படங்கள் எடுப்பதில்லை. ரசிகர்களுக்குதான் படம் எடுக்கிறேன். அதனை ரோகிணி போன்ற திரையரங்குகளிலும் சென்று பார்த்துள்ளேன். விமர்சகர்கள் கூறும் நெகட்டிவ் விஷயங்களை நான் மனதில் எடுத்துக்கொண்டால், எனது வேலையை அவமரியாதை செய்வதுபோன்று. பிரில்லியண்ட் படம் பண்ணுகிணுன் என்று நான் சொல்லவில்லை. கமர்ஷியல் படம்தான் பண்ணுகிறேன் என்றுதான் கூறுகிறேன்” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

image

இதனுடன் இயக்குநர் எச். வினோத் கூறியுள்ளது குறித்து ஒப்பீட்டுள்ளதில், “கடினமாக வேலை செய்வதை பெரிதுபடுத்தி சொல்ற மாதிரி இருந்துச்சு. அப்புறம் பின்னாளில் எனக்கு என்ன தோன்றியது என்னவென்றால், அதுவும் ஒரு பகுதிதானே என்று நினைத்தேன். கஷ்டப் படாமல் யாரும் இல்லையே. காற்றுமாசு நிறைந்துள்ள இடத்தில் 10 மணிநேரம் ஆட்டோ ஓட்டுறவருக்கு இல்லாத கஷ்டமா.. சினிமாவில் எல்லாமே நமக்கு கிடைச்சுடுது.. நமக்கு எல்லாமே கொடுத்திருக்காங்க.. அதனால அத Glorify பண்ண வேண்டாமேனு தோன்றியது..” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் லோகேஷ் கனகராஜ் இதுபற்றி கூறியதாக வெளியான வீடியோவில், “நாம என்ன வேணா சொல்லிக்கலாம். நாம பயங்கரமா கஷ்டபடுறோம்னு. உயிர கொடுத்து வேலை பார்க்கிறோம் அப்படினு. ஆனால் கடைசியில் நமக்கு ஊதியம் கோடிகளில் கிடைத்து விடுகிறது. அப்படியே எதிர்பக்கம் பார்த்தால் 2000 ரூபாய் சம்பாதிப்பவர்கள் கூட 200 ரூபாயை இந்தப் படத்திற்கு என்று எடுத்து வைத்து விடுகிறார்கள்.  அந்த உழைப்புக்கு இன்னும் மரியாதை இருக்கிறது என்று நினைக்கிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார்.

இதேபோல் நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட கமல்ஹாசனிடம் நேர்காணல் ஒன்றில், மிகவும் சவாலாக நடிக்க வேண்டியிருந்தது என்று ஏதாவது ஒரு படம் இருக்கிறதா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “உடல் சார்ந்த உழைப்பை நாம் கஷ்டம் என்று சொல்லமுடியாது. உழைப்பின்றி ஊதியமில்லை (no pain, no gain) என்பது தான் விளையாட்டின் முதல் கொள்கை. ரொம்ப கஷ்டம், வேர்த்தது, இடுப்பு வலித்தது இதையெல்லாம் போய் பார்வையாளர்கள் கிட்டே சொல்லிட்டு இருக்க முடியாது. எனக்கு கால் ஒடிந்திருதாலும், நான் நன்றாக நடனம் ஆடுகிறேனா என்றுதான் பார்வையாளர்கள் பார்ப்பார்கள். அதுதான் அவர்களுடையே வேலை. கோவில் வாசல்களில் உட்கார்ந்திருக்கிற பிச்சைக்காரன் மாதிரி, என் வலியை, எனது காயத்தை காட்டி பணம் வாங்கமாட்டேன், எனது திறமையை காட்டித்தான் பணம் வாங்குவேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இயக்குநர் சி.எஸ். அமுதன் பதிவு ஒன்றை அப்போது பதிவு செய்திருந்தார். அதில் ‘பொதுமக்களை ஒப்பிடும் போது கோடிகளில் சம்பாதிக்கும் சொகுசான வேலையைத்தான் உச்ச நடிகர்கள் செய்து வருகிறார்கள். சாமானியனை விட பெரிய தியாகம் எதுவும் நாம் செய்வதில்லை. நமது படைப்புக்கு பொறுப்பேற்க கூடிய இடத்தில் நாம் உள்ளோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

image

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்