Published : 20,Jan 2023 08:48 PM
200 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட டிராவிட் மகன்கள்! யு-14 கேப்டனாகும் இளைய மகன் அன்வே!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரும், முன்னாள் இந்திய ஜாம்பவான் கிரிக்கெட் வீரருமான ராகுல் டிராவிட்டின் மகன்களும், தந்தையை போலவே கிரிக்கெட்டில் கலக்கி வருகின்றனர்.
அந்தவகையில் கர்நாடகாவின் யு-14 அணிக்காக கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார் இளைய மகன் அன்வே டிராவிட்.
தந்தையை போலவே விக்கெட் கீப்பர் பேட்டராக ஜொலிக்கும் அன்வே டிராவிட்!
முன்னதாக ஜாம்பாவன் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், எப்படி இந்திய அணிக்கு கேப்டனாகவும் விக்கெட் கீப்பர்-பேட்டராகவும் செயல்பட்டாரோ, அதேபோலவே அவரது இளைய மகனும் செயல்படவிருக்கிறார். ராகுலின் இளைய மகன் அன்வேயும் ஒரு விக்கெட் கீப்பர்-பேட்டராக இருந்துவருகிறார். தற்போது அவர் தந்தையை போலவே யு-14 கர்நாடகா அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்வே டிராவிட் 14 வயதிற்குட்பட்டவர்களின் போட்டிகளில் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக தன்னை வெளிப்படுத்தி வருகிறார். அவர் தன்னுடைய கடின உழைப்பு மற்றும் அபாரமான பேட்டிங் திறைமையால் பாராட்டப்பட்டு வருகிறார். உதாரணமாக 2020 ஆம் ஆண்டில், கர்நாடகத்தின் மண்டலங்களுக்கு இடையேயான பிடிஆர் ஷீல்ட் யு-14 தொடரின் அரையிறுதி போட்டியில் ஒரு அபாரமான ஆட்டத்தை எடுத்துவந்தார் அன்வே. அந்தபோட்டியில் அவரடித்த அரைசதம் அனைவராலும் பாராட்டப்பட்டது.
தற்போது கர்நாடகாவின் யு-14 அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றிருக்கும் அன்வே, வரவிருக்கும் மண்டலங்களுக்கு இடையேயான போட்டியில் முன்மாதிரியாக வழிநடத்துவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
200 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட அண்ணன் - தம்பி!
அன்வேவை போலவே டிராவிட்டின் மூத்தமகனான சமித் டிராவிட்டும் ஒரு கிரிக்கெட் வீரர் தான். ஒருமுறை மண்டலப் போட்டியில், டிராவிட் சகோதரர்கள் இருவரும் ஒரு சிறப்பான இன்னிங்ஸை விளையாடினர். 14 வயதுக்குட்பட்ட பி.டி.ஆர் ஷீல்டு பள்ளிப் போட்டியின் ஒரு பகுதியாக அந்தப் போட்டி இருந்தது, அந்தப் போட்டியில் இருவரும் 200 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை எடுத்துவந்தனர். அந்த போட்டியில் அன்வே 90 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார். இரு சகோதரர்களின் இந்த இன்னிங்ஸானது, தொடரின் அரையிறுதிக்கு அவர்களது பள்ளியை எடுத்துச்சென்றது.
இந்நிலையில் அன்வே அவருடைய சிறப்பான ஆட்டத்தின் மூலமாக கர்நாடகா அணியின் யு-14 கேப்டனாக உருவெடுத்துள்ளார். அவர் தன் தந்தையை போல ஜொலிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Anvay Dravid, #RahulDravid ‘s younger son to lead #Karnataka U-14 team in the inter zonal tournament (South Zone) pic.twitter.com/ynvwtbLN6G
— Manuja (@manujaveerappa) January 19, 2023