Published : 19,Jan 2023 02:05 PM
ரஜினிகாந்த், சூர்யா இருவரில் யாரை அடுத்து இயக்கப் போகிறார் த.செ.ஞானவேல்?

‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் படத்தை இயக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில், நடிகர் சூர்யாவும் மீண்டும் அவருடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
‘கூட்டத்தில் ஒருவன்’, ‘ஜெய்பீம்’ உள்ளிட்டப் படங்களை இயக்கியவர் த.செ.ஞானவேல். உண்மைக் கதையை மையமாகக் கொண்டு இவர் இயக்கிய ‘ஜெய்பீம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததுடன், அந்தப் படத்தை தயாரித்தும் இருந்தார் நடிகர் சூர்யா. கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளியை முன்னிட்டு, அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படம் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பையும், அதேசமயத்தில் குறிப்பிட்ட சமூகத்தின் கடும் விமர்சனத்தையும் சந்தித்தது. எனினும் சர்வதேச அளவில் இந்தப் படம் பல விருதுகளையும் அள்ளிக் குவித்தது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் த.செ.ஞானவேலின் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. நடிகர் சூர்யா, இவரின் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டி வந்தார். அதற்காக கதை ஒன்றையும் தயார் செய்ய சொல்லியிருந்த நிலையில், தற்போது த.செ.ஞானவேல் சொன்ன கதை ஒன்று நடிகர் ரஜினிகாந்திற்கு மிகவும் பிடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. சமூக பிரச்சனையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை என்றும் சொல்லப்படுகிறது. சில மாற்றங்களுடன் விரிவாக கதை எழுதி எடுத்து வருமாறு இயக்குநர் த.செ.ஞானவேலிடம், ரஜினி கூறியதாகவும் தகவல் கசிந்து வருகிறது.
‘லவ் டுடே’ படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதனுடன் தனது அடுத்தப் படம் குறித்த கதை விவாதத்தில் ரஜினிகாந்த் ஈடுபட்டதாக கூறப்பட்ட நிலையில், த.செ. ஞானவேல் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அவரும் த.செ.ஞானவேலிடம் கதைக் கேட்டுள்ளதால், இரண்டு பேரில் யாரை அடுத்ததாக இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குவார் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.