
பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இயக்கத்தில் இணைந்து பணியாற்ற வருமாறு நடிகர் மம்முட்டிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று தனது மகிழ்ச்சியை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில் தூய்மையை கொண்டு வருவதில் தனக்கு சில கருத்து வேறுபாடுகள் உள்ளன என்று கூறியுள்ளார்.
தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவை தூய்மையாக்கும் சேவையை பிரதமர் மோடி மும்முரமாக செயல்படுத்தி வருகிறார். அதற்காக நாடு முழுவதும் உள்ள பல்வேறு மொழி நடிகர்களுக்கு அவர் அழைப்பு விடுத்து வருகிறார். ஏற்கெனவே நடிகர் கமல்ஹாசனுக்கு அவர் அழைப்பு கொடுத்திருந்ததை பலர் அறிவர். அதன் அடுத்த கட்டமாக மலையாள நடிகர் மம்முட்டிக்கு அழைப்பு விடுத்தார் மோடி. அதனை ஏற்று செயலாற்ற இருப்பதாக மம்முட்டி அறிவித்திருக்கிறார்.
இது சம்பந்தமாக அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்த மம்முட்டி, “தூய்மையே சேவை இயக்கத்தில் சேர பிரதமர் மோடி, எனக்கு விடுத்த அழைப்பை கௌரவமாகக் கருதுகிறேன். தூய்மைக்கு அவர் அளிக்கும் முக்கியத்துவம் பெருமைக்குரியது. மகாத்மா காந்தி தூய்மையை தெய்வாம்சம் என்றார். தூய்மை என்பது சுய கட்டுப்பாடு போல தொடங்க வேண்டும் என்றும், அதைத் திணிக்கக் கூடாது என்றும் நான் கருதி வந்தேன். எனினும் இந்தியாவைத் தூய்மையானதாக மாற்ற புதிய விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். தூய்மை விஷயத்தில், காந்தியடிகளின் கனவை நினைவாக்க, பிரதமர் மோடி மேற்கொண்டுள்ள முயற்சிகளை ஆதரிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.