குறைந்த போட்டிகளில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர்! சுப்மன் கில் நிகழ்த்திய சாதனைகள்

குறைந்த போட்டிகளில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர்! சுப்மன் கில் நிகழ்த்திய சாதனைகள்
குறைந்த போட்டிகளில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர்! சுப்மன் கில் நிகழ்த்திய சாதனைகள்

இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் ஒருநாள் கிரிக்கெட்டில் குறைவான இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்குபெற்று ஆடுகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் முதல் போட்டியில் இந்திய அணியின் இளம்வீரர் சுப்மன் கில் தன்னுடைய மூன்றாவது ஒருநாள் சதத்தை பதிவு செய்ததோடு, இந்த ஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்துள்ளார்.

இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் 2019ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் முதலாக அறிமுகம் செய்யப்பட்டார். ஒருநாள் போட்டிகளில் சிறப்பான தொடக்கம் இல்லாவிட்டாலும், டெஸ்ட் போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். 2020ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இடம்பெற்ற சுப்மன் கில் டெஸ்ட் போட்டியில் தன் முதல் சதத்தை நியூசிலாந்து அணிக்கு எதிராக பதிவு செய்திருந்தார். தொடர்ந்து ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணி தொடரை கைப்பற்றுவதற்க்கான முக்கிய போட்டியில் அபாரமான அரைசதமடித்த சுப்மன் கில் சதத்தை நழுவவிட்டிருந்தார். இப்படி டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே களமிறக்கப்பட்ட சுப்மன் கில் ஒருநாள் போட்டிகளிலும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திகொண்டு, அரைசதங்களை விளாசி பேட்டிங் சராசரியை 50+யிலேயே வைத்திருந்தார்.

குறைவான இன்னிங்ஸ்களில் 1000 ரன்கள் எடுத்த முதல் இந்திய வீரர்!

ஒருநாள் போட்டிகளில் 19 இன்னிங்ஸ்களில் விளையாடியிருக்கும் சுப்மன் கில், தன்னுடைய அபாரமான பேட்டிங்கால் 3 சதங்களையும், 5 அரைசதங்களையும் பதிவு செய்துள்ளார். இந்திய அணியின் மூத்தவீரர்களின் இடங்களால் 2019ல் அறிமுகப்படுத்தப்பட்ட சுப்மன் கில் பெருதும் களமிறக்கப்படாமலே இருந்தார். இந்நிலையில் 2022ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் மூத்தவீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திகொண்ட கில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் 97 பந்துகளில் 15 பவுண்டரிகள், ஒரு சிக்சர் உட்பட 130 ரன்களை குவித்து தனது சர்வதேச முதல் ஓடிஐ சதத்தை பதிவுசெய்தார்.

பின்னர் 2ஆவது சதத்தை தற்போது நடந்துமுடிந்த இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அடித்து அசத்தினார். இலங்கைக்கு எதிரான அந்த போட்டியில் 97 பந்துகளில் 14 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் விளாசி 116 ரன்கள் குவித்தார். இந்நிலையில் அந்த போட்டிக்கு பிறகான அடுத்தபோட்டியிலேயே தனது 3ஆவது சதத்தை எடுத்து வந்துள்ளார் சுப்மன் கில். தற்போது நடைபெற்றுவரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 19 பவுண்டரிகள், 9 சிக்சர்கள் என 149 பந்துகளில் 208 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார் சுப்மன் கில்.

ஒருநாள் போட்டிகளில் 19 இன்னிங்ஸ்களில் மட்டுமே விளையாடி இருக்கும் கில், 1000 ரன்களை கடந்து, குறைவான போட்டிகளில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்தியவீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஷிகர் தவான் மற்றும் விராட் கோலி 24 இன்னிங்ஸ்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 25 இன்னிங்ஸ்களிலும் அடித்துள்ளனர். உலக கிரிக்கெட் அரங்கில் 18 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்த வீரராக பாகிஸ்தான் அணியின் ஃபகர் ஷமான் முதல் இடத்தில் நீடிக்கிறார். அவரை தொடர்ந்து சுப்மன் இரண்டாவது வீரராக 19 போட்டிகளில் கடந்து சாதனை படைத்திருக்கிறார்.

குறைவான போட்டிகளில் 3 ஒருநாள் சதங்கள்!

19 போட்டிகளில் 3 ஒருநாள் சதங்களை அடித்துள்ள கில், குறைவான போட்டிகளில் 3 ஒருநாள் சதங்களை அடித்த இந்திய வீரர் பட்டியலில் இரண்டாவது வீரராக இடம்பிடித்துள்ளார். 17 போட்டிகளில் 3 சதங்களை விளாசி ஷிகர் தவான் முதலிடத்தில் இருக்கிறார்.

ஒருநாள் போட்டிகளில் அதிக சராசரி கொண்ட இந்திய வீரர்!

ஒருநாள் போட்டிகளில் 105 பேட்டிங் ஸ்டிரைக் ரேட்டுடன் இருக்கும் சுப்மன் கில், பேட்டிங் சராசரி 68-உடன் விளையாடி வருகிறார். இந்திய வீரர்களை பொறுத்தவரையில் அதிக சராசரியுடன் இருக்கும் முதல் வீரராக சுப்மன் கில் இருக்கிறார். மேலும் உலக கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவின் வாண்டர் டஸ்ஸனின் 69 சராசரிக்கு பிறகு, 68 சராசரியுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் சுப்மன் கில்.

குறைந்த வயதில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர்!

நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் இரட்டை சதம் விளாசியிருக்கும் சுப்மன் கில், 149 பந்துகளில் 19 பவுண்டரிகள், 9 சிக்சர்கள் உட்பட 208 ரன்களை குவித்து இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். கடந்த வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 24 வயதில் இஷான் கிஷானால் அடிக்கப்பட்ட சதமே இளம் வயது வீரரால் அடிக்கப்பட்ட சதமாக இருந்தது. 26 வயதில் அடித்திருந்த ரோகித் சர்மா சாதனையை உடைத்திருந்தார் இஷான் கிஷன்.இந்நிலையில் இஷான் கிஷனின் சாதனையை விரைவாகவே முறியடித்து இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரராக மாறியுள்ளார் சுப்மன் கில்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com