Published : 18,Jan 2023 05:20 PM

இந்திய பணக்காரர்களுக்காக குறிவைக்கப்படும் நேபாள ஏழைகள் - அதிரவைக்கும் சிறுநீரக திருட்டு!

Kidney-Theft----Most-Targeted-Youth-in-Nepal-

அண்டை நாடான நேபாள நாட்டில் அதிக உறுப்பு திருட்டு நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

நேபாளத்தில் திருடப்படும் சிறுநீரகங்கள்!

சுற்றுலாப் பிரதேசமாக விளங்கும் நேபாளம், உலக அளவில் சிறிய நாடாகவும் தெற்காசிய நாடுகளில் ஒன்றாகவும் இருந்து வருகிறது. கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய திசைகளில் இந்தியாவையும், வடக்கே சீனாவையும் எல்லைகளாக் கொண்டிருக்கிறது நேபாளம். 29 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்நாட்டில்தான் தொடர் விமான விபத்துகளும் அரங்கேறி வருகின்றன. அதைவிட அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று, அங்கு உலா வருகிறது. ஆம், சட்டவிரோதமாக உறுப்பு திருட்டு நடைபெறுகிறதாம். அதிலும் சிறுநீரகத் திருட்டுகள்தான் அதிகமாம். வேலையில்லாத இளைஞர்கள், ஏழ்மை நிலையில் இருக்கும் மனிதர்களை வைத்தே இந்தத் திருட்டுச் சம்பவங்கள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

ஏமாற்றப்பட்ட சந்தோஷ்!

மத்திய நேபாளத்தில் உள்ள நுவாகோட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். அவருடன் ஆறு பேர் அந்தக் குடும்பத்தில் வசித்துவருகின்றனர். 19 வயதான இவர், தன் குடும்பத்தினருடன் 13 ஏக்கர் பண்ணை நிலத்தில் பணிபுரிந்து வந்தார். ஆனால், அதன்மூலம் கிடைக்கும் வருவாய் அவரது குடும்பத்தை முன்னேற்றுவதற்கு போதுமானதாக இல்லை. இதைப் புரிந்துகொண்ட சந்தோஷ், தன் கிராமத்தைவிட்டு வெளியில் சென்று வேலை தேட முயன்றார். அந்தச் சமயத்தில், அதாவது கடந்த ஆண்டு (2022) ஜூன் மாதத்தின்போது நேபாளத்தைச் சேர்ந்த உறுப்பு திருடும் கும்பலைச் சேர்ந்த இருவர், சந்தோஷைச் சந்தித்ததுடன், தங்களுக்கு டெல்லியில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளனர்.

image

மிரட்டிய உறுப்புக் கும்பல்!

அதை நம்பிய சந்தோஷ், அவர்கள் வீழ்த்திய வலையில் சிக்கிக்கொண்டார். வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் புறப்பட்ட சந்தோஷை, அந்தக் கும்பல் இந்திய - நேபாள எல்லை மூலமாக சட்டவிரோதமாக கொல்கத்தாவுக்கு அழைத்துச் சென்றது. அங்கு, மருத்துவர்கள் சட்டவிரோத அறுவைச்சிகிச்சை செய்து, அவரது இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றை அகற்றினர். தாம் எதற்காக கொல்கத்தா அழைத்து வரப்பட்டோம், மருத்துவமனையில் என்ன நடந்தது என எதுவுமே தெரியாத சந்தோஷுக்கு, டெல்லியில் புதிய வேலையில் சேரும் பொருட்டு, இரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது என தெரிவித்துள்ளார். ஆனால், மருத்துவர்கள் எது கேட்டாலும், ‘சரி’ என்று தலையை ஆட்ட வேண்டும் என உறுப்புக் கும்பல் மிரட்டியிருந்ததாம்.

மாறிப்போன வாழ்க்கை!

அதனாலேயே, மருத்துவர்கள் மேற்கொண்டு சந்தோஷிடம் விசாரணை நடத்தவில்லையாம். அதாவது, சிறுநீரக தானத்துக்கு சந்தோஷ் ஒப்புக்கொண்டுள்ளதாக மருத்துவர்கள் நினைத்துள்ளனர். ஆனால், இந்த அறுவைச்சிகிச்சைக்குப் பிறகு வயிற்றில் கடுமையான வலியுடன் எழுந்த சந்தோஷுக்கு, பின்னர்தான் சிறுநீரகம் திருடப்பட்டதும் தாம் திருட்டுக் கும்பலிடம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதும் தெரிய வந்திருக்கிறது. இதுகுறித்து சந்தோஷ், ”வாழ்க்கையை சிறப்பாக மேம்படுத்த வேண்டும் என்ற கனவுகளைக் கொண்டிருந்த எனக்கு 2022ஆம் ஆண்டு மோசமானதாக மாறிப் போனது. என் வாழ்க்கை இப்படியாகும் என்று நான் நினைக்கவே இல்லை. என்னால் நடக்க முடியவில்லை. எளிதில் மயக்கம் அடைகிறேன். கனமான பொருட்களையும் தூக்க முடியாமல் சிரமப்படுகிறேன். என்னை அந்தக் கும்பல் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிவிட்டது” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

image

ஒரு சிறுநீரகம் டாலர் 4,500க்கு விற்பனை!

மேலும் அவர், “நோயாளியாய் இருக்கும் என்னால் முன்பைப்போல் ஆரோக்கியமாய எந்த வேலையையும் அவ்வளவு சுலபமாகச் செய்ய முடியவில்லை. அதனால் தற்போது நான் தேநீர்க்கடை ஒன்றில் ஒருநாளைக்கு டாலர் 2க்கு வேலை பார்த்து வருகிறேன். அதேநேரத்தில் என்னிடமிருந்து திருடப்பட்ட ஒரு சிறுநீரகம் டாலர் 4,500க்கு விற்கப்பட்டிருக்கிறது” எனப் புலம்பியிருக்கிறார்.

நேபாளத்தைவிட்டு வெளியில் வேலை தேடிச் சென்ற 50 லட்சம் நேபாள மக்களில் அவரும் ஒருவர். அதுமட்டுமின்றி, உறுப்பு கடத்தல் தொடர்பான விசாரணையில் இறங்கிய நேபாள காவல் துறை, ஜூலை 2022 ஆம் ஆண்டிலேயே 9 பேரைக் கைது செய்துள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்தியதில், சிறுநீரகத்தைப் பறிகொடுத்த 12 பேரில் சந்தோஷும் ஒருவராக இருந்திருக்கிறார். 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த குழுவினர் இதில் ஈடுபட்டு வருவதாக நேபாள காவல் துறை தெரிவித்துள்ளது.

திருட்டுக் கும்பலுக்குக் கவலையில்லை

“சிறுநீரகம் போன்ற உறுப்புகளைச் சட்டவிரோதமாக விற்பதற்கும் வாங்குவதற்கும் கடத்தல்காரர்களுடன், அரசாங்கம், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் ஆகியோரும் உடந்தையாக இருக்கிறார்கள். ஒருவேளை, மருத்துவர்களுக்கு இந்த திருட்டு விஷயம் தெரியாமல் இருக்கலாம் அல்லது அந்த திருட்டுக் கும்பலுக்கும் இவர்கள் உடந்தையாக இருக்கலாம். தானம் செய்பவர் சில சமயங்களில் இறக்கக்கூட நேரிடலாம். ஆனால் அதைப் பற்றி திருட்டுக் கும்பல் கவலைப்படாது. அதனால்தான் அமெரிக்காவில் உறுப்பு மாற்று அறுவைச்சிகிச்சையின்போது இருதரப்பிலும் ஒப்புதல் பெறப்படுகிறது. குறிப்பாக, சிறுநீரக தானம் செய்பவர்களுக்கும் நீண்டகால சிகிச்சை தேவைப்படுகிறது. அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.

image

மருத்துவமனைகளுக்கும் பொறுப்பு உள்ளது

ஆனால் சட்டவிரோதமாய் திருடப்படும் இதுபோன்ற வழக்குகளில் சந்தோஷ் போன்றவர்கள் ஏமாற்றப்படுவதுடன், உடல்ரீதியாகவும் பிரச்சினைகளை அனுபவிக்கின்றனர்” என பிரபல உடல்மாற்று அறுவைச்சிகிச்சை நிபுணரும் யுனைடெட் நெட்வொர்க் ஃபார் ஆர்கன் ஷேரிங் அமைப்பின் முன்னாள் தலைவருமான டாக்டர் பிரான்சிஸ் டெல்மோனிகோ தெரிவித்துள்ளார். ”உறுப்புகளை வாங்குவதையும் விற்பதையும் தடுக்கும் சட்டத்தை ஒரு மருத்துவர் மீறினால், அவர் மருத்துவர் பணியைத் தொடர முடியாது" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “இந்தியா மற்றும் நேபாளம் உட்பட பெரும்பாலான நாடுகளில் உள்ள சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சைகளுக்கு சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் உள்ளன. அவை உள்நாட்டு சட்டங்களால் செயல்படுத்தப்படுகின்றன. அந்த விதிமுறைகளில், நன்கொடையாளரிடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதல் கோரப்படுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நன்கொடையாளர் மற்றும் பெறுநர் இதை உறுதிப்படுத்த வேண்டும். அதுபோல், சிறுநீரகம் தானம் பெறுவதில், மருத்துவமனைகளுக்கு பொறுப்பு உள்ளது. குறிப்பாக, சிறுநீரகத்தை வழங்கும் நன்கொடையாளர் யார்? அவர், எங்கிருந்து வருகிறார்? நன்கொடையாளருக்கும் பெறுநருக்கும் என்ன தொடர்பு? மாற்று அறுவைச்சிகிச்சை செய்யப்படுவதற்கு அவசியம் ஏன்” ஆகியவை குறித்தும் மருத்துவமனைகள் விசாரிக்க வேண்டும் என மருத்துவர் வலியுறுத்தியுள்ளார்.

image

சட்டவிரோதச் செயலில் ஈடுபடும் மருத்துவமனை!

இதுகுறித்து மும்பையின் மாற்று அறுவைச்சிகிச்சை நிபுணர் டாக்டர் சஞ்சய் நாக்ரால், “இதனால் பாதிக்கப்படும் ஒவ்வொரு நபரும், கொல்கத்தாவில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனைக்குத்தான் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதுபோன்ற செயல்களில் அம்மருத்துவமனை சட்டவிரோதமாகச் செயல்படுவதாக கடந்த காலங்களில் தலைப்புச் செய்திகளிலேயே இடம்பெற்றன. எனினும், இந்திய தரப்பில் யாரும் அவர்கள் மீது வழக்கு கொடுக்கவில்லை. அதேநேரத்தில் நாங்கள் இதுகுறித்து கொல்கத்தா காவல் துறையினருக்குப் புகார் அளித்தோம். அதற்குப் பதில் இல்லை. எனினும் அம்மருத்துவமனை பற்றி தொடர்ந்து செய்திகள் வரும்போது அதில் ஏதோ சிக்கல் இருப்பதாகவே தெரிகிறது. உறுப்புகளை சட்டவிரோதமாக வாங்குதல் மற்றும் விற்பதில் பெருமளவு பணம் விளையாடப்படுகிறது” என்றார்.

அடிமைகளாய் 35 ஆயிரம் மக்கள்!

மேலும் அவர், "இந்தியா உட்பட தெற்காசியாவில் நிறைய மாற்று அறுவைச்சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகள் மூலம் செய்யப்படுகின்றன. இதற்கு பணம் ஒன்றே குறிக்கோளாக இருக்கிறது. அதனால் சிறுநீரகம் தேவைப்படுபவர்கள் பணக்காரர்களாகவும், அதை எவ்வளவு விலை கொடுத்து வாங்கவும் அவர்கள் தயாராக இருக்கின்றனர்” என டாக்டர் நாக்ரல் கூறியுள்ளார்.

ஏழ்மையும், வேலைவாய்ப்பின்மையுமே இளைஞர்களை சிறுநீரகங்களைப் பணத்திற்கு விற்பனை செய்ய தூண்டுகிறது. இதுதான் நேபாளத்தில் மனித கடத்தலுக்கு வழிவகுக்கிறது. சமீபத்திய அரசாங்க அறிக்கை ஒன்றில், ஒவ்வொரு ஆண்டும் 35,000 நேபாள மக்கள் அடிமைத்தனத்திற்கும் பாலியல் தொழிலுக்கும் உள்ளாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

சிறுநீரக விற்பனைக்குக் காரணம் என்ன?

இந்தியாவில் சிறுநீரகங்களுக்கு அதிக தேவை இருக்கும்போது, அதன் ஏழ்மையான அண்டைநாடான நேபாளம் கடத்தல்காரர்களை வேட்டையாடும் இடமாக மாறுவதுடன், அங்குள்ள இளைஞர்களை தங்கள் சிறுநீரகங்களை விற்கும்படி வற்புறுத்தப்படுகிறார்கள். அல்லது சந்தோஷ் போல் ஏமாற்றப்படுகிறார்கள். அதனாலேயே, மத்திய நேபாளத்தில் உள்ள காவ்ரே மாவட்டம் 'சிறுநீரகப் பள்ளத்தாக்கு' என்று அழைக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே, அங்குள்ள கிராமங்களில் இருந்து பல ஆண்கள் தங்களது சிறுநீரகங்களை விற்க தானாக முன்வந்து இந்தியாவுக்குச் செல்கின்றனர் அல்லது கடத்தப்பட்டு ஏமாற்றப்படுகின்றனர்.

இதுகுறித்து நேபாள தேசிய மனித உரிமைகள் ஆணையம், ‘காவ்ரே மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து குறைந்தது 150 பேர் தங்கள் சிறுநீரகங்களை விற்றுள்ளனர். அதில் மூன்று வழக்குகள் மட்டுமே பதியப்பட்டன. பல ஆண்டுகளாக இதுபோல் நடக்கிறது. அரசாங்கம் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மனிதாபிமான அமைப்புகள்கூட அந்த கிராமங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆதரவளிக்கவும் தவறிவிட்டன” எனத் தெரிவித்துள்ளது.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்