Published : 16,Jan 2023 10:03 PM
`எனக்கு உதவிய 2 ஹீரோக்களுக்கும் என்றென்றும் நன்றியுடையவனாக இருப்பேன்’- ரிஷப் பண்ட்!

மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘அனைவருடைய ஆதரவுக்கும் பிரார்த்தனைகளுக்கும் என் நன்றி. அதற்கு என்றும் நான் கடமைப்பட்டுள்ளேன். என் அறுவைச்சிகிச்சை வெற்றியடைந்ததை உங்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதிலிருந்து மீளுவதற்கான பாதை தொடங்கிவிட்டது. வரவிருக்கும் சவால்களையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்’ எனப் பதிவிட்டிருக்கும் ரிஷப், பிசிசிஐ, ஜெய் ஷா மற்றும் ஆதரவளித்த இதர அரசு அதிகாரிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
அவருடைய மற்றொரு பதிவில், ரசிகர்கள், மருத்துவர்கள், சகவீரர்கள் எனப் பலருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அதில் அவர், ‘உங்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரையும் களத்தில் காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.
From the bottom of my heart, I also would like to thank all my fans, teammates, doctors and the physios for your kind words and encouragement. Looking forward to see you all on the field. #grateful#blessed
— Rishabh Pant (@RishabhPant17) January 16, 2023
மேலும் அவருடைய இன்னொரு பதிவில், ‘ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என்னால் நன்றி சொல்ல முடியாமல் போயிருக்கலாம். ஆனால், எனது விபத்தின்போது எனக்கு உதவிய இந்த 2 ஹீரோக்களையும் நான் பாராட்டி ஆக வேண்டும். அவர்கள் மூலமாக நான் பாதுகாப்பாக மருத்துவமனைக்குச் சென்றேன். ரஜத் குமார் மற்றும் நிஷு குமார் ஆகியோருக்கு நன்றி. நான் என்றென்றும் நன்றியுடையவனாகவும், கடமைப்பட்டவனாகவும் இருப்பேன்’ என அதில் பதிவிட்டுள்ளார்.
I may not have been able to thank everyone individually, but I must acknowledge these two heroes who helped me during my accident and ensured I got to the hospital safely. Rajat Kumar & Nishu Kumar, Thank you. I'll be forever grateful and indebted pic.twitter.com/iUcg2tazIS
— Rishabh Pant (@RishabhPant17) January 16, 2023
ரிஷப் பண்ட், கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாதம் 30ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கி அருகே காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார். படுகாயமடைந்த அவர் மீட்கப்பட்டு முதலுதவிக்காக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பின்னர் டேராடூன் மருத்துவமனையில் சில நாட்கள் தங்கியிருந்த அவர், மேல் சிகிச்சைக்காக மும்பை அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு முழங்கால் மற்றும் கணுக்கால் பகுதிகளில் தசைநார் கிழிவுக்காக இரண்டு அறுவைச்சிகிச்சைகள் செய்யப்பட்டன. வெற்றிகரமாக நடைபெற்ற இந்த அறுவைச்சிகிச்சை குறித்துத்தான் அவர் பதிவிட்டுள்ளார். இன்னும் ஆறு வாரங்களில் அவருக்கு மூன்றாவது அறுவைச்சிகிச்சை நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.