Published : 15,Jan 2023 07:56 PM

ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா! இந்திய மண்ணில் அதிவேக 150 ரன்கள் விளாசிய விராட் கோலி!

Virat-Kohli-achieved-not-only-in-the-century-but-also-in-the-sixes-

இலங்கைக்கு எதிராக மூன்றாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக இன்று (ஜனவரி 15) திருவனந்தபுரத்தில் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 390 ரன்கள் எடுத்தது. இதில் கேப்டன் ரோகித் சர்மா 42 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய சுப்மான் கில் 97 பந்துகளில் 116 ரன்கள் எடுத்தார். இவருடன் கைகோர்த்து விளையாடிய முன்னாள் கேப்டன் விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 110 பந்துகளில் 166 ரன்கள் எடுத்தார். அதில் 8 சிக்ஸர்களும், 13 பவுண்டரிகளும் அடக்கம்.

image

இன்றைய போட்டியில் 85 பந்துகளில் சதமடித்து அசத்தினார். மேலும் பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தினார்.

இலங்கைக்கு எதிராக அதிக சதம்! உள்நாட்டில் அதிக சதம்!

இலங்கைக்கு எதிராக அதிக சதம் அடித்திருந்த சச்சினின் (9 சதம்) சாதனையை இந்த போட்டியில் தகர்த்தார். விராட் கோலி, 10 சதம் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். தவிர 52 ஆண்டுக்கால ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஓர் அணிக்கு எதிராக அதிக சதம் (10 சதம்) எடுத்த வீரராகவும் கோலி வலம் வருகிறார். மேலும், சொந்த மண்ணில் அதிக சதம் அடித்தவர் (20 சதம்) என்ற சச்சினின் சாதனையை 21 சதங்களுடன் கோலி முந்தியுள்ளார்.

சச்சினுக்கு கோலிக்கு வித்தியாசம்!

இந்த மைல்கல்லை எட்ட சச்சினுக்கு 160 போட்டிகள் தேவைப்பட்ட நிலையில், கோலி 100 போட்டிகளிலேயே அதனைத் தாண்டியுள்ளார். இதுபோக, இன்றைய போட்டியில் விராட் கோலி எடுத்த166 ரன்களையும் சேர்த்து அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை, 5 முறை 150 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 46வது சதத்தை 452 வது இனனிங்சில்தான் அடித்தார். ஆனால் விராட் கோலி 259வது இன்னிங்சில் இந்த சாதனையைப் படைத்திருக்கிறார். இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாகவும் கோலியின் இந்த இன்னிங்ஸ் அமைந்துள்ளது.

image

ஒருநாள் போட்டிகளில் 258 இன்னிங்ஸ்களில் 12,600 ரன்களை கடந்துள்ள விராட் கோலி, குறைந்த போட்டிகளில் அந்த மைல்கல்லை எட்டிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். அதுபோல் இன்றைய போட்டியில் விராட் கோலி அடித்த 8 சிக்ஸர்களும் சாதனையாகி உள்ளது. இதற்கு முன்பு கடந்த 2013ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் 100 ரன்கள் எடுத்தார். அதில் 7 சிக்ஸர்கள் அடித்திருந்தார். இதுவே அவருக்கு சாதனையாக இருந்த நிலையில், அதையும் இன்று இலங்கைக்கு எதிராக மாற்றியுள்ளார்.

இந்திய மண்ணில் அதிவேக 150 ரன்

இந்திய மண்ணில் அதிவேகமாக 150 ரன்களை தொட்ட வீரர் என்ற பெருமையை விராட் கோலி அடைந்துள்ளார். அவர் 106 பந்துகளில் 150 ரன்களை எட்டினார். 109 பந்துகளில் 150 ரன்களை எட்டிய ஆஸ்திரேலிய வீரர் ஜார்ஜ் பெய்லியின் ரெக்கார்டே இன்று வரை இருந்து வந்தது. அதனை விராட் கோலி தகர்த்துள்ளார். உலக அளவில் 64 பந்துகளில் 150 ரன்களை எட்டி தென்னாப்ரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸ் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் - இரண்டாவது இடம்

நூறு ரன்கள் மற்றும் அதற்கு மேல் அதிக முறை அடித்த வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை பின்னுக்கு தள்ளி விராட் கோலி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 99 முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார். விராட் கோலி 73, ரிக்கி பாண்டிங் 72 என அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்