Published : 13,Jan 2023 08:09 PM

”எங்களுக்கு சோறுபோடுங்க; தலையில் தூக்கிவச்சு கொண்டாடாதீங்க”-கண்டிப்பார்களா நட்சத்திரங்கள்!

Screens-set-on-fire-fans-dies-in-accident--Should-South-stars-remain-silent-when-followers-turn-unruly-Actor-sathyaraj-old-video-viral

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ்நாட்டில் அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’  படம் வெளியானது. இதேபோல், தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி’, சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’ உள்ளிட்ட படங்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் எல்லாம் முன்னணி நடிகர்கள் என்பதால், இவர்களது ரசிகர்களின் அலப்பறைகளுக்கும் சிறிதும் பஞ்சமில்லை. அப்படி ஒரு கொண்டாட்டத்தின்போதுதான், அஜித் ரசிகரான 19 வயது இளைஞர் ஒருவர் சென்னையில் தனது உயிரை விட்டார். விஜய்யின் போஸ்டரை அஜித் ரசிகர்களும், அஜித்தின் போஸ்டரை விஜய் ரசிகர்களும் மாறி மாறி கிழித்து தங்களது வெறித்தனமான அன்பைக் காட்டி வருகின்றனர். இதேபோல் பாலகிருஷ்ணா ரசிகர்கள் உணர்ச்சிப் பெருக்கில் ஸ்கீரினுக்கே தீ வைத்ததாக தகவல் பரவி வருகிறது. 

இதனையெல்லாம் இந்த முன்னணி நடிகர்கள் தட்டிக் கேட்பதாக அல்லது அறிவுரை கூறுவதோ இல்லை என்ற வருத்தமும், வியப்பும் அனைவருக்கும் இல்லாமல் இல்லை. ஆனால், சில நடிகர்கள், இயக்குநர்கள் ரசிகர்களுக்கு அறிவுரைக் கூறுவது உண்டு. ஆனால் அதனையும் மீறிதான் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நடிகர் சத்யராஜ் முன்பு ஒருசமயம் நடிகர்கள் குறித்துப் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதில் “இங்க ஒரு நடிகருக்கு எல்லாம் தெரியும்னு நினைக்காதீங்க, நடிக்கத்தான் தெரியும். சமூகத்துல இருக்கிற மிகப்பெரிய தப்பு, நடிகர்களை ஐன்ஸ்டீன் அளவுக்கு நினைச்சுக்கிறதுதான். இல்லை, எங்களுக்கு நடிப்பு சார்ந்து மட்டும் தான் தெரியும், இது சும்மா நடிப்பு. ஏன் எங்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுறீங்க. ஊடகங்கள் மீது எனக்கு பெரிய வருத்தம் என்ன தெரியுமா?.. எங்களுக்கு சோறு போடுங்க. தலையில் தூக்கி வச்சு கொண்டாடாதீங்க. பெரியார், மார்க்ஸ்னு நினைச்சுட்டு இருக்கீங்க” என்று தெரிவித்துள்ளார்.

இதையேதான் ‘துணிவு’ பட இயக்குநர் எச். வினோத்தும் சமீபத்திய தனதுப் பேட்டிகளில் ரசிகர்களுக்கு வலியுறுத்தி வந்தார். அதில், “தமிழ் சினிமால உச்ச நட்சத்திரங்கள்னு ஒரு 10 - 15 பேர் இருக்காங்க. அவர்களது ரசிகர்கள் செலவிடும் நேரம் தான் அவங்களோட படத்துக்கான விளம்பரம். 100 கோடி ரூபாய் செலவு செய்தாலும் அதுமாதிரி விளம்பரம் யாராலையும் பண்ண முடியாது. அவ்ளோ நேரம் செலவழிக்கும் ரசிகனுக்காக அந்த ஹீரோவாலையும், புரொடக்‌ஷன் டீமாலும் என்ன செய்ய முடியும்.

ரசிகர் செலவழிக்கும் நேரத்தை யாராலையும் ஈடுகட்ட முடியாது. ஏன் சினிமாவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என ராமதாஸ், சீமான், திருமாவளவன் ஆகிய அரசியல்வாதிகள் டென்ஷன் ஆகிறார்கள். அவர்களது கோபமும் நியாயம் தான். ரசிகர்கள் இவ்வளவு நேரத்தை சினிமாவுக்காக செலவழிக்க வேண்டியது இல்லை.

image

பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆகுதுன்னா, 3 நாள் முன்னாடி முன்பதிவு ஆரம்பமாகும். உங்களுக்கு எந்த படத்தோட ட்ரெய்லர், போஸ்டர் பிடித்திருக்கிறதோ அந்தப் படத்தை பாருங்கள். இல்ல இன்னொரு படம் நல்லா இருந்ததுனா அதை போய் பாருங்க. இவ்ளோ தான் சினிமாவுக்காக ரசிகர்கள் செலவு செய்ய வேண்டிய நேரம். நிறைய டைம் வேஸ்ட் பண்றீங்க. உங்களுக்கான நேரத்தை உங்களைவிட யாராலும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியாது” என தெரிவித்திருந்தார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட நேற்று அளித்தப் பேட்டியில், “சினிமாவை பொறுத்தவரை அனைத்துப் படங்களும் ஓட வேண்டும். எல்லா ரசிகர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. படம் வெளியீட்டு கொண்டாட்டங்களில் ஏற்படும் இறப்புகளை தவிர்க்க வேண்டும், ரசிகர்களும் தங்களது பொறுப்புகளை உணர்ந்து நடந்துக்கொள்ள வேண்டும்.

image

உயிரை விடும் அளவிற்கு கொண்டாட்டங்கள் அவசியம் இல்லை. இது வெறும் பொழுதுபோக்கு என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். சந்தோஷமாக சென்று படம் பார்த்துவிட்டு, பத்திரமாக வீட்டுக்கு செல்ல வேண்டும் என நினைக்கிறேன். உயிரை கொடுக்கும் அளவிற்கு ஏதும் இல்லை, உயிரிழக்கும் அளவிற்கான கொண்டாட்டம் தேவையில்லை என்பது எனது கருத்து” என்றுக் கூறியிருந்தார்.

உண்மையில் விஜய், அஜித் இருவரும் ரசிகர்கள் மீதுள்ள தங்களது அன்பை பல நேரங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல சேவைகளை விஜய் தரப்பில் செய்து வருகின்றனர். அதேபோல், ரசிகர்கள் மன்றங்கள் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்துதான் அதனை கலைத்தார். இருவரும் என்ன செய்ய வேண்டும் என்பதிலும், என்ன செய்யக் கூடாது என்பதையும் உணர்ந்துதான் இதையெல்லாம் செய்திருக்கிறார்கள். அப்படியிருக்கையில் மரணம் வரை ரசிகர்களின் கொண்டாட்டங்கள் சென்றுவிட்ட நிலையில் அதனை தடுக்க இவர்கள் ஏதேனும் செய்தே ஆக வேண்டும். அப்படி செய்தால் தான் ரசிகர்களும் தங்களை கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள். 

இரண்டு வழிகள் தான் இருக்கிறது. ஒன்று அமைதியான வழியில் கொண்டாட்டங்களை முடித்துக் கொள்வது. இன்னொன்று மக்கள் சேவையின் மூலம் கொண்டாட்டங்களை வெளிப்படுத்துவது. ஏதோ ஒன்று அதனை உடனடியாக உச்ச நட்சத்திரங்கள் செய்ய வேண்டும். இல்லையென்றால் ரசிகரின் இந்த மரணம் நினைவிலேயே இல்லாமல் சென்றுவிடும். 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்