Published : 13,Jan 2023 12:45 PM
பொதுவெளியில் தாலிபன்களுக்கு எதிராக ஆப்கானிய பெண் செய்த துணிச்சல் மிகு சம்பவம்!

தாலிபன்களின் வசம் ஆப்கானிஸ்தான் அரசு சென்றதில் இருந்தே அந்நாட்டில் பெண்களை ஒடுக்கும் வேலைகளே தொடர்ந்து தாலிபான்கள் அரங்கேற்றி வருகின்றனர். `அரசப் பதவிக்கு வந்ததும் நாங்கள் முன்பு போன்றெல்லாம் இருக்க மாட்டோம்’ என்றெல்லாம் பேசியபோதிலும், நாட்கள் செல்ல செல்ல தாலிபன்கள் மீண்டும் பழையபடியே மாறிவருகின்றனர் என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
`ஜான் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை’ என்ற பழமைவாத சிந்தனைக்கு கைகொடுப்பது போல, பெண்கள் ஆண்களின் துணையில்லாமல் பொதுவெளிக்கு செல்லவேக் கூடாது என்று முதலில் கெடுபிடிகளை கையில் எடுத்து படிப்படியாக பெண் பத்திரிகையாளர், தொகுப்பாளர், பணியாளர்கள் ஆகியோரின் சுதந்திர கதவுகளை மனிதாபமின்றி அடைத்தனர்.
இவற்றை தொடர்ந்து, தற்போது பெண்களுக்கான அடிப்படை தேவைகளில் ஒன்றான கல்வி உரிமைக்கும் தடை விதித்திருக்கிறது ஆப்கானில் உள்ள தாலிபன் அரசு. உயர்நிலை பள்ளிக்கும், கல்லூரிக்கும் செல்ல பெண்களுக்கு அனுமதியில்லை என பட்டவர்த்தனமாக அரசாணையே வெளியிட்டு தாலிபன்கள் அடக்குமுறையை பழமைவாதத்தை கடைப்பிடித்து வருகிறார்கள்.
21ம் நூற்றாண்டில் உலகம் நவீன மயமானதற்கு பெண்களின் பங்கும் இருக்கும் அதே வேளையில், ஒரு நாட்டில் பெண்களின் கல்வி உரிமையை பறிப்பது எள்ளளவும் ஏற்கத்தக்கதல்ல என்ற கருத்தை முன்வைத்து ஆப்கானில் பெண்கள், ஆண்கள் என பல தரப்பினரும் தாலிபன்களின் அராஜக நடவடிக்கைகளுக்கு எதிராக தங்களது உரிமையை நிலைநாட்ட அமைதியான முறையில் போராட்டத்தை கையில் எடுத்து வருகிறார்கள்.
தாலிபன்களின் இந்த பெண் கல்வி தடைக்கு உலக நாடுகள் பலவும் தத்தம் எதிர்ப்புகளை முன்வைத்திருக்கிறது. இப்படி இருக்கையில், கையில் குழந்தையை வைத்துக் கொண்டு பெண் ஒருவர், கல்வி, வேலை, சுதந்திரம் என சுவற்றில் கிராஃபிட்டியாக வரையும் வீடியோவை ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சர் ஷப்னம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அதில், “ஆப்கானிய பெண்களை எப்போதும் நாம் மறந்துவிடக் கூடாது. முன்பைக் காட்டிலும் தற்போது அதிகளவிலேயே நாம் அவர்களுக்கு தேவைப்படுகிறோம். அவர்களின் குரலாக எதிரொலியுங்கள்” எனக் கேப்ஷன் இட்டிருக்கிறார். இதனைக் கண்ட பலரும், தங்களுக்கான தார்மீக உரிமையை மீட்டெடுக்கும் வகையில் தைரியமாக பொது சுவற்றில் கிராஃபிட்டி வரைந்த அப்பெண்ணை பாராட்டியிருக்கிறார்கள்.
A brave woman in Afghanistan, with a child in her hand, writes “Education, Work, Freedom” on a wall. Women are now using graffiti as a form of protest.
— Shabnam Nasimi (@NasimiShabnam) January 10, 2023
We MUST NOT forget the women of Afghanistan. They need us now more then ever. Be their voice!pic.twitter.com/RmP1sDfINV
மேலும், “இந்த காலத்திலும் பெண்கள் கல்விக்காக போராட வேண்டியிருப்பது வருந்தத்தக்கது” என்றும், “சமூக மாற்றத்துக்காக போராடுவோருக்கு மிகப்பெரிய பலமாக கிராஃபிட்டி இருக்கும். அதனையே அப்பெண் கையில் எடுத்திருக்கிறார். அவருடைய குரல்கள் கேட்கப்படும் என நம்புகிறேன்” என்றும் பதிவிட்டிருக்கிறார்கள்.