Published : 13,Jan 2023 10:32 AM
10 நாள்களில் மணமேடை காண இருந்த புதுமாப்பிள்ளை, விபத்தில் பலியான சோகம்!

பரமக்குடி அருகே திருமணம் ஆக வேண்டிய மணமகன் விபத்தில் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள புதூர் கிராமத்தை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவர் தனது இருசக்கர வாகனத்தில் ஊரிலிருந்து புறப்பட்டு நயினார் கோவில் சென்றுள்ளார். பின்பு அங்கிருந்து தனது சொந்த ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, அண்டக்குடி சந்திப்பு அருகே எதிரே வந்த கனரக வாகனத்தில் மோதியுள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த அலெக்சாண்டர் சம்பவ இடத்தில் ரத்த காயத்துடன் கிடந்துள்ளார். பின்பு அவர் சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
அலெக்சாண்டருக்கு வருகின்ற 23ஆம் தேதி திருமணம் நடக்க உள்ளது. இதற்கான திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காகவே நயினார் கோவில் வந்துள்ளார் என போலீசார் விசாரனையில் தெரியவந்துள்ளது. பத்து நாட்களில் மணமேடையில் அமர வேண்டிய மணமகன் அலெக்சாண்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.