Published : 12,Jan 2023 10:57 AM
"மார்வெல் படங்களை விரும்பாத பெண்ணா?.. Rejected.." - டேட்டிங்கில் அதிரடி காட்டிய ரசிகர்!

ஹாலிவுட்டின் பிரபலமான சீக்வல் படங்களில் மிக முக்கியமானதாகவும் எக்கச்சக்கமான ரசிகர்களாலும் விரும்பப்படுவதுமாக இருப்பது மார்வெல் தயாரிப்பாளான படங்கள்தான்.
காமிக்ஸ் கதைகளை கொண்டு மிகப்பெரிய சூப்பர் ஹீரோ படங்களாக ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் இப்போது வரை மார்வெல் சினிமெட்டிக் யூனிவர்ஸ் என்ற பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது. உலக அளவில் மார்வெல் சீரிஸ் படங்களுக்கும் அதன் சூப்பர் ஹீரோக்களுக்கும் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
மார்வெல் காமிக்ஸ் டிசி காமிக்ஸ் என இரு தரப்பு சூப்பர் ஹீரோ படங்களின் ரசிகர்களும் நீயா நானா என போடாத போட்டிகளே இருக்க முடியாது. அந்த அளவுக்கு சூப்பர் ஹீரோ படங்களின் மீதான ரசிகர்களின் ஆர்வம் ஒன்றிப்போயிருக்கும்.
இப்படி இருக்கையில், டேட்டிங் தேர்வின் போது மார்வெல் படங்களை பார்ப்பதே இல்லை என கூறியதற்காகவே பெண்ணை ஒரு நபர் நிராகரித்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ ஒன்று ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்டு கிட்டத்தட்ட 50 லட்சத்துக்கும் மேலானோரால் பார்க்கப்பட்டிருக்கிறது.
The Button என்ற பெயரில் நடத்தப்பட்ட டேட்டிங் ஷோவில் பங்கேற்பவர்களின் இருக்கை முன்பு பட்டன் ஒன்று வைக்கப்பட்டிருக்கும். அதில் ஒரே நேரத்தில் பங்கேற்கும் ஆணும் பெண்ணும் தனக்கு அந்த நபரை பிடிக்காவிட்டால் பட்டனை அழுத்தி வேறு ஒருவரை தேர்வு செய்துக் கொள்ளலாம். அப்போதுதான் மரியா என்ற பெண்ணை டோனி என்பவர் நிராகரித்திருக்கிறார்.
மரியா டோனியின் சுழற்சி வந்த போது, மரியாவிடம் மார்வெல் படங்களை பார்ப்பவரா என டோனி கேட்க அதற்கு, “இல்லை. என் சகோதரர் பார்ப்பார். நான் அனிமேஷன் படங்களையெல்லாம் பார்ப்பதில்லை” என மரியா பதிலளித்திருக்கிறார்.
i don’t even know what to caption this. i just had to post it. pic.twitter.com/T0IF5KekmH
— LeMucus Triller Moth (@legotrillermoth) January 7, 2023
இதனையடுத்து, ஒரு நொடி கூட யோசிக்காமல் மரியாவை முந்திக் கொண்டு அவரை நிராகரித்த டோனி, “உங்களுக்கு மார்வெல் பிடிக்காமல் இருக்கவே முடியாது. அது அற்புதமாக இருக்கும். அதில் நிறைய வித்தியாசங்கள் இருக்கும் மற்றும் மார்வெல் அனிமேஷன் இல்லை. உலகை காப்பாற்றும் பல சூப்பர் ஹீரோக்களை கொண்டது” என விளக்கியிருக்கிறார்.
பின்னர், “மார்வெலை பார்க்க முயற்சிக்கிறேன். உங்களை சந்தித்தது மகிழ்ச்சி” எனக் கூறிவிட்டு மரியா வெளியேறிவிட்டார். இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் பலரும் கலவையான விமர்சனங்களை கமெண்ட் செய்திருக்கிறார்கள்.
முன்னாத இது குறித்து பேசியிருக்கும் டோனி, “மார்வெல் காமிக்ஸ் மற்றும் அதன் படங்களை விரும்பாதவருடன் என்னால் இருக்க முடியாது. என்னுடைய நாய்க்கு மார்வெல் என்றுதான் பெயர் சூட்டியிருக்கிறேன்” என்றும் தெரிவித்திருக்கிறார்.