Published : 10,Jan 2023 07:03 PM
உ.பி: ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்த 6 வயது சிறுவன்.. அலறல் சத்தத்தால் ஓடிவந்த கிராம மக்கள்

உத்தரப்பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹபூரில் 6 வயது நிரம்பிய ஒரு சிறுவன் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது 60 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். ஆழ்துளை கிணற்றுக்குள் இருந்து சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள், மீட்புக் குழுவினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை உயிருடன் மீட்டனர். சிறுவனுக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பீதியும், பரபரப்பும் நிலவியது.
இந்த ஆழ்துளை கிணறு ஹாபூர் நகராட்சிக்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது. இதையடுத்து ஆழ்துளை கிணற்றை மூடும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை துரிதமாகவும், பாதுகாப்பாகவும் மீட்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
தவற விடாதீர்: 6 நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகள் - ‘ஆனால்... அதிலும் ஒரு ட்விஸ்ட்’!