Published : 10,Jan 2023 06:49 PM

”விழியே கதை எழுது.. யார் பெற்ற மகனோ”.. 5 தலைமுறையை தாலாட்டிய காந்தர்வக்குரலோன் ’யேசுதாஸ்’!

Yesudas-has-been-shining-as-an-unfading-star-in-the-music-industry-for-more-than-half-a-century

இசை என்பது மவுனத்தின் மொழி; இருளில் கிடப்பவனுக்கு அது சொர்க்கத்தின் வழி. இசையால் ஒருவனை என்ன செய்ய முடியும்? கடந்த கால துயரங்களை மறக்க வைக்க முடியும். கடலின் தூரத்தை நொடியில் கடக்க வைக்க முடியும். தனிமையின் வெற்றிடத்தை இனிமையின் நினைவுகளால் இட்டு நிரப்பிட முடியும்.

இப்படி எத்தனையோ மாயங்கள் நிகழ்த்தும் இசைக்கு, ஆன்மாவின் குரலால் அழகு சேர்ப்பவர்கள்தான் பாடகர்கள். அந்த பாடகர்களில் ஒரு சிலரின் குரல் மட்டுமே, ஆண்டுகள் கடந்தாலும் ஆழ்மனதில் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருக்கும். அப்படியொரு குரலுக்குச் சொந்தக்காரர்தான், பாடகர் கே.ஜே.யேசுதாஸ்.

பிரபஞ்சப் பெருவெளியில் ஆயிரம் நட்சத்திரங்களுக்கு இடையே பளிச்சென ஒளிவீசும் ஒற்றைச் சூரியனைப்போல், சுமார் அரை நூற்றாண்டுக்கு மேலாக இசைத்துறையில் மங்காத நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருக்கிறார், யேசுதாஸ். எம்.எஸ்.வி தொடங்கி இளையராஜா - ஏ.ஆர்.ரகுமான் - யுவன் ஷங்கர் ராஜா - ஏன்? அனிருத் வரை, 5 தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய சாதனைக்கு சொந்தக்காரர் இவர்.

காந்தர்வக்குரலோன் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவரின் காந்தக் குரலில் உருவான பல பாடல்கள், தமிழ் சினிமாவில் ஹிட் படைப்புகளாகியிருக்கின்றன.

image

1. அதில், எம்.ஜி.ஆரின் உரிமைக்குரல் திரைப்படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் உருவான விழியே கதை எழுது பாடல் முக்கியமானது. விழியே கதை எழுது பாடலில் தன் குரலால் தனிக்கவிதை எழுதினார் யேசுதாஸ். புரட்சித் தலைவராக, புகழின் உச்சியில் கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆருக்கு அன்றைய  BLACK & WHITE காலத்தின் பின்னணிக் குரலாக இருந்தவர், டி.எம்.சவுந்தரராஜன். அதன்பின், எம்.ஜி.ஆரின் மெலோடிப் பாடல்களுக்கு அத்தனை அற்புதமாக பொருந்திப்போனது, யேசுதாஸின் கந்தர்வக்குரல்.

2. தமிழ் சினிமாவில் யேசுதாஸின் ஏராளமான ஹிட் பாடல்கள் உள்ளன. அதில், இசை ஞானியின் காலகட்டத்தில் உருவான பாடல்களும் ஏராளம். அப்பட்டியலில், ராஜ ராஜ சோழன் என்ற க்ளாசிக் பாடலுக்கு முக்கிய இடமிருக்கும். காதலைச் சொல்லும் பாடல்களுக்கு மெலோடி தான் ஏற்றது என்றால், அந்த மெலோடி ஏரியாவுக்கு இவர், ராஜா என்றே சொல்லலாம். மென்மையின் அடையாளமான காதலெனும் உணர்வுக்கு, தன் மென் குரலால் புத்துயிரூட்டுபவர் யேசுதாஸ்.

3. இவ்வரிசையில் அடுத்த க்ளாசிக் கானமாக குறிப்பிட வேண்டிய பாடல், என் இனிய பொன் நிலாவே. சினிமாவைப் பார்த்து காதலை கற்றுக் கொண்ட ஒரு தலைமுறைக்கு, கித்தாருடன் காதல் பாட சொல்லிக் கொடுத்திருப்பார், இயக்குநர் பாலுமகேந்திரா. இளையராஜாவின் இசையில் மூடு பனி திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல், கேட்பவர்களின் இதயங்களை சில்லிட வைத்துக் கொண்டே இருக்கிறது.

image

4. இசை- வரிகள்- குரல் என இம்மூன்றும் சரியான விகிதத்தில் இணையும் பாடல்கள் மட்டுமே, சினிமா வரலாற்றில் நிலைத்து நிற்கும் ஆற்றலைக் கொண்டிருக்கும். அப்படியான ஆற்றலைக் கொண்டிருக்கும் பாடல், கண்ணே கலைமானே.

காவியரசர் கண்ணதாசனின் கடைசி பாடல் இது... இதில் இளையராஜாவின் இசை உங்கள் இதயங்களை உருக வைக்கும் என்றால், யேசுதாஸின் குரலோ உயிரைத் தொட்டுவிடும். ராஜாவின் அழகிய இசை, கண்ணதாசனின் அற்புத வரிகளுடன், யேசுதாஸின் ஆன்மக்குரலால் இணைந்திருக்கும் இப்பாடல், தமிழ் சினிமாவின் எவர் க்ரீன் படைப்பு.

5. வெறும் மெலோடி பாடல்கள்தான் யேசுதாஸின் ஸ்பெஷலா எனக்கேட்பவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக மற்றொரு பாடலைக் கொடுத்திருக்கிறார், இளையராஜா..

நான் ஏரிக்கரை மேலிருந்து...

மனம் மயக்கும் மெலோடிப் பாடல்களின் வரிசையில் நாட்டுப்புற தெம்மாங்கு ஸ்டைலில் இப்பாடலைப் பாடியிருப்பார் ஜேசுதாஸ். காதலின் காந்த வரிகளுக்கு மட்டுமல்ல, கிராம வட்டார வழக்கிலும் அழகாக ஒலித்திருக்கும், அவரின் குரல்.

6.மெலோடி வரிசையில் ஒரு மாஸ் ஹிட் பாடலும் யேசுதாஸின் ஹிட் லிஸ்டில் உண்டு.

காட்டுக்குயிலு...!

சினிமாவில் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு பாடல் உண்டு... அப்படி, போகிப் பண்டிகையின் சினிமா அடையாளமாக கொண்டாடப்படுகிறது, இந்த காட்டுக் குயிலு. சம காலத்தில் பிரபலமாக இருக்கும் பாடகர்கள் இருவர் இணைந்து பாடிய பாடல்களை மிக சொற்பம். அப்பட்டியலில் எஸ்.பி.பி.யுடன் இணைந்து யேசுதாஸ் பாடிய இப்பாடல், என்றென்றைக்குமான பண்டிகைப் பாடல் என்றே சொல்லலாம்.

image

7. இசை ஞானி மட்டுமல்ல, இசைப்புயலின் மெட்டிலும் ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார், யேசுதாஸ்..

பச்சைக்கிளிகள் தோளோடு..!

உறவுகளின் உண்ணதத்தைச் சொல்லும் பச்சைகிளிகள் பாடலில் ஒலிக்கும் யேசுதாஸின் குரல், கேட்பவர்களின் இதயத்தில் இருக்கும் பாரத்தை இறக்கி பட்டாம்பூச்சியைப் போல் பறக்கச் செய்துவிடும். "இந்த விண்ணில் ஆனந்தம்.. அந்த மண்ணில் ஆனந்தம்" என யேசுதாஸ் பாடும்போது, மனதுக்குள் ஒருவித ஆனந்தம் வருவதை தவிர்க்க முடிவதில்லை.

8. இசைப்புயலுக்கு பச்சைக்கிளிகள் என்றால், இன்னிசை இளவரசன் யுவனின் இசையில் ஆராரிராரோ என அன்னைக்கு தாலாட்டு பாடியிருப்பார், இந்த தனிக்கலைஞன்.

ஆராரிராரோ நானிங்கு பாட..!

அன்னைக்கு மகன் பாடும் தாலாட்டாய் உருவாக்கப்பட்டிருக்கும் இப்பாடலை, அத்தனை அற்புதமாக பாடியிருப்பார் யேசுதாஸ். இப்பாடல், அவருக்கு கொஞ்சம் ஸ்பெஷல் என்றே சொல்லலாம். பாடல் பதிவு முடிந்த ஒரு வாரத்துக்குப்பின் மீண்டும் யுவன் ஷங்கர் ராஜாவை அழைத்த யேசுதாஸ், ஆராரிராரோ பாடலை மீண்டும் பாட விரும்புவதாக கூறியிருக்கிறார். அவர் விருப்பப்படியே 2ஆவது முறை பாடல் பதிவு நடைபெற்றப்போது, கண்ணீருடன் ரெகார்டிங்கை நிறைவு செய்திருக்கிறார், யேசுதாஸ்.

image

9. ஆராரிராரோ பாடலில் மட்டுமல்ல, அனிருத்தின் யாரோ யாரோ நீ யாரோ பாடலிலும் கேட்பவர்களை அழ வைத்திருப்பார், யேசுதாஸ்.

யார் பெற்ற மகனோ..!

கடவுளின் தேசமான கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட யேசுதாஸின் குரல், இந்தியாவின் பல மொழிகளில் பாடலாக உருவாகி தென்னிந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறது. இவர், தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி வங்காளம், குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, மலாய் ஆங்கிலம் என ஏராளமான மொழிகளில் எண்ணிலடங்கா பாடல்களைக் கொடுத்திருக்கிறார். 8 தேசிய விருது, 45 மாநில விருதுகள், பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்ம விபூஷன், ஃபில்ம் ஃபேர் என என பாடலில் படைத்த சாதனைக்காக பல்வேறு அங்கீகாரங்களைப் பெற்றிருக்கிறார்.

1960இல் மலையாள சினிமாவுக்குள் நுழைந்த இவர், தமிழ் சினிமாவில் அறிமுகமானது 1963ஆம் ஆண்டு. பாலச்சந்தரின் பொம்மை திரைப்படத்தில் வீணை எஸ்.பாலச்சந்தரின் இசையில் முதல் பாடலைப் பாடினார் யேசுதாஸ். ஆனால், முதலில் வெளியானது ஜி. விஸ்வநாதனின் கொஞ்சும் குமரி திரைப்படம். அதில் வாலிபக் கவிஞன் வாலியின் வரியில் ஆசை வந்த பின்னோ எனும் பாடலில் தொடங்கியது, யேசுதாஸின் தமிழ் திரையிசைப் பயணம்.

இசையின் வழியே, காயம் பட்ட மனதை எல்லாம் மயிலிறகால் வருடிக் கொண்டிருக்கிறது, யேசுதாஸின் குரல். காலம் உள்ளவரை, இப்புவியில் காற்று உள்ளவரை அதில் யேசுதாஸின் காந்தவர்க்குரல் எங்கெங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கும்..!

- பாலாஜி

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்