Published : 10,Jan 2023 05:43 PM

373 ரன்கள் குவித்தது இந்திய அணி - 45வது சதம் விளாசி சாதனைகளை படைத்த விராட் கோலி!

Virat-Kohli-returned-to-his-old-form-and-achieved-many-achievements-

இலங்கைக்கு எதிரான இன்றையப் போட்டியில் விராட் கோலி சதம் அடித்ததுடன், பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி, கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில், டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இவ்விரு அணிகளுக்கான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் கொண்டு இந்த தொடரில் முதல் ஒருநாள் போட்டி, கெளகாத்தியில் இன்று (ஜனவரி 10) மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. ரோகித் சர்மா தலைமையிலான இன்றைய போட்டியில் தொடரில் இடம்பெற்றிருந்தும், கடந்த டி20 போட்டியில் சதமடித்து கலக்கிய சூர்யகுமார் யாதவ் இடம்பெறவில்லை.

இதைத் தொடர்ந்து டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க பேட்டர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். இருவரும் அவசரப்படாமல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதேநேரத்தில் தேவையான பந்துகளையும் பவுண்டரி எல்லைக்குப் பறக்கவிட்டனர்.

image

ரோகித், சுப்மன் கில் அதிரடி அரைசதம்:

இருவரும் அரைசதமும் அடித்தனர். மேலும் இந்திய அணியின் ரன்ரேட்டும் நன்றாக உயர்ந்தது. 70 ரன்கள் எடுத்த சுப்மான் கில், எதிர்பாராதவிதமாக தசூன் சனகா பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டாகி வெளியேறினார். அவர், 11 பவுண்டரிகள் விளாசியிருந்தார். இந்திய அணி 143 ரன்களுக்கு தான் தன்னுடைய முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. அவருக்குப் பின் களமிறங்கிய முன்னாள் கேப்டன் விராட் கோலி ரோகித்துடன் கைகோர்த்தார். இந்த இணையும் சிறப்பாக விளையாண்டது.

சதம் அடிக்காமல் ஏமாற்றிய ரோகித்!

ரோகித் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், மதுஷங்கா பந்தில் போல்டாகி வெளியேறினார். அவர் 67 பந்துகளில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் எடுத்தார். பின்னர், விராட் கோலியுடன் இணைந்த ஸ்ரேயாஸ் ஐயரும், கே.எல்.ராகுலும் நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆடவில்லை என்றாலும், ஓரளவுக்கு கணிசமான ரன்களை எடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தனர். ஸ்ரேயாஸ் 24 பந்துகளில் 28 ரன்களும் (1 சிக்ஸர், 3 பவுண்டரி), கே.எல்.ராகுல் 29 பந்துகளில் 39 ரன்களும் (1 சிக்ஸர், 4 பவுண்டரி) எடுத்தனர். 

வந்த வேகத்தில் திரும்பிய ஹர்திக், அக்ஸர்

பின் களமிறங்கிய துணை கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் கடந்த டி20 போட்டிகளில் அதிரடி காட்டிய அக்‌ஷர் படேலும் வந்த வேகத்தில் திரும்பினர். ஹர்திக் 14 ரன்களிலும், அக்‌ஷர் 9 ரன்களிலும் நடையைக் கட்டினர்.

image

80 பந்துகளில் சதம் விளாசிய விராட் கோலி!

விராட் கோலி இந்தப் போட்டியில் 80 பந்துகளில் சதம் கண்டதுடன், இந்தியா 300 ரன்களைத் தாண்டவும் வழிவகை செய்து கொடுத்தார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு எதிராக இன்று சதமடித்துள்ளார். கடைசியில் அவர், 87 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அவருடைய ரன்னில் 12 பவுண்டரிகளும் 1 சிக்ஸரும் அடங்கும்.  இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி தரப்பில், கசூன் ரஜிதா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

விராட் கோலி செய்த சாதனைகள்!

இன்றைய சதத்தின் மூலம் அவர் பல சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார். விராட் கோலிக்கு ஒருநாள் போட்டியில் இது 45வது சதமாகும். இந்தப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். விராட் கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர், உள்நாட்டில் அடிக்கும் 20வது சதம் இதுவாகும். சச்சின் இந்தியாவில் 20 சதம் அடித்து உலக சாதனை படைத்திருந்தார். இந்தச் சாதனையை தற்போது விராட் கோலி சமன் செய்திருக்கிறார்.

மேலும், இலங்கைக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த சாதனையில் சச்சினை முறியடித்து இருக்கிறார் விராட் கோலி. சச்சின் இதுவரை இலங்கை அணியுடன் 8 சதங்களை ஒருநாள் போட்டிகளில் அடித்திருந்தார். விராட் கோலி இலங்கை அணிக்கு எதிராக 9 சதங்களை அடித்து சாதனை படைத்துள்ளார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்