Published : 10,Jan 2023 02:03 PM
`ஒரு உண்மையான Soldier என்ன யோசிப்பான்னா...’ ஷாருக்கானின் பதான் ட்ரைலரை வெளியிட்ட விஜய்!

பதான் படத்தின் “பேஷரம் ரங்” பாடல் வெளியாகி நாடு முழுவதும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது பதான் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் தமிழ் வெர்சன் ட்ரைலரை நடிகர் விஜய் வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் சினிமாவில் சமீப காலமாக பெரிய நடிகர்கள் தொடங்கி, சிறிய நடிகர்கள் வரை அனைவருடைய படங்களும் பெரிய தோல்வி படங்களாகவே மாறிவருகின்றன. அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஒவ்வொரு படம் வெளியாகும் முன்னரும் #BoycottBollywood என்ற எதிர்ப்பு குரல் ரசிகர்களிடையே அதிகமாகி, அந்த படம் பின்னர் வெற்றியடையாமலே போய்விடுகின்றன. அந்த பாய்காட் பாலிவுட் வரிசையில் ஷாருக்கானின் பதான் திரைப்படம், அதன் ஒரே பாடலால் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. ஷாருக்கானை பர்சனல் அட்டேக் செய்து வீடியோ வெளியீடு செய்வதும், பகிரங்கமாக மிரட்டவதுமாக சர்ச்சையின் உச்சகட்டத்திற்கே சென்றது.
கடந்த 2018-ம் ஆண்டில் வெளியான ஷாருக்கானின் ‘ஜீரோ’ படம் தோல்வியான பிறகு, 4 வருடங்கள் கழித்து பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையே பதான் முதல் கட்ட அறிவிப்புகள் வெளியாகி, முதல் சிங்கிள் பாடல் வெளியானது. வெளியான ‘பேஷரம் ரங்’ பாடல் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்தப் பாடல் வரி மற்றும் பாடலில் காவி நிற பிகினி உடையில் தீபிகா படுகோனே தோன்றியிருப்பதற்கு பல்வேறு தரப்பிலும் இருந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டன. பாடல் வரிகள் மற்றும் தீபிகா படுகோனே வரும் அந்தக் காட்சிகள் நீக்கப்பட வேண்டும் எனவும், அதையும் மீறி திரையரங்குகளில் திரையிடப்பட்டால் தீயிட்டு கொளுத்த வேண்டும் என்றும் போராட்டம் வெடித்தது.
பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்களுக்கு பிறகு அந்த பாடல் காட்சியில் வரும் வண்ணங்கள் மாற்றப்பட்டு, சில வசனங்கள் நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் பல்வேறு சர்ச்சைகளை கடந்து தற்போது பதான் படத்தின் ட்ரைலர் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் வெளியானது. அதில் பதான் தமிழ் வெர்சன் ட்ரைலரை நடிகர் விஜய் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். அதேபோல் தெலுங்கு வெர்சன் ட்ரைலரை நடிகர் ராம்சரன் அவருடைய டிவிட்டர்பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
இதுவரை நடிகர் விஜயின் டிவிட்டர் பக்கத்தில் அவருடைய படங்களுக்கான ப்ரோமோசன் பதிவுகளும், படவெளியீடு குறித்த முக்கிய கண்டெண்டுகள் ஆகியவற்றை மட்டுமே பகிர்ந்து வந்துள்ளார். அதைமீறி மற்றோரு நடிகருக்காக அவர் வெளியிட்டு இருக்கும் வேறொரு படம் என்றால், அது ஷாருக்கான் நடித்து வெளியாக இருக்கும் “பதான்” படம் மட்டும் தான். இது ஷாருக் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் விஜய் ரசிகர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ஷாருக்கான் சாருக்கு வாழ்த்துக்கள், பதான் படம் வெற்றியடைய படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டு, பதான் படத்தின் தமிழ் வெர்சன் ட்ரைலரை வெளியிட்டுள்ளார்.
Wishing @iamsrk sir and the team all the best for #Pathaan
— Vijay (@actorvijay) January 10, 2023
Here is the trailer https://t.co/LLPfa6LR3r#PathaanTrailer
ராம்சரன் அவருடைய டிவிட்டர் பக்கத்தில், “ பதானின் ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துகள். ஷாருக் சார், உங்களை இதற்கு முன்னர் எப்போதும் இதைப்போலான ஆக்ஷன் காட்சிகளில் பார்த்ததில்லை, படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஷாருக்கான் நடிக்கும் அடுத்தபடமான ஜவான் படத்தில் விஜய் ஒரு காட்சியில் தோற்றவிருப்பது குறிப்பிடத்தக்கது. அட்லி இயக்கும் அந்த படத்தில் ஷாருக்கானுடன், நயன் தாரா மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ளனர். மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.