Published : 08,Jan 2023 06:08 PM

நாமக்கல்: பைக்கை தலைக்கு மேல் தூக்கி வீலிங்; பைக் ஸ்டண்ட் ஷோ குறித்து காவல்துறை விசாரணை

Bike-Stunt-show-conducted-without-permission-at-Namakkal

நாமக்கல் அருகே உரிய அனுமதியின்றி பைக் ஸ்டண்ட் ஷோ நடத்தப்பட்டது. ஆபத்தை உணராமல் பைக்கை தலைக்கு மேல் தூக்கி வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபட்டது குறித்து விசாரணை நடத்தப்படும் என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

நாமக்கல் மாவட்டத்தில் ’நாமக்கல் பைக்கர்ஸ் கிளப்’ என்ற பெயரில் சிலர் அமைப்பு நடத்தி வ்ருகின்றனர். இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் நாமக்கல் அடுத்துள்ள ராசாம்பாளையம் சுங்கச்சாவடி அருகே இன்று பைக் ஸ்டண்ட் ஷோ நடத்த உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

அதன்படி இன்று காலை முதலே இந்த பைக் ஸ்டண்ட் ஷோவானது நடைபெற்றது. இதில் பைக்குகளை வைத்து அந்தரத்தில் பறந்தும் ஒற்றை சக்கரத்தில் பைக்கை தூக்கி வீலிங் செய்தும் சாகசத்தில் ஈடுபட்டனர். அதேபோல் கைகளை விட்டபடியே பைக்கை ஒட்டியும் சாகசம் செய்தனர். இதற்கு பார்வையாளர்களாக செல்பவர்களுக்கு 500 ரூபாய் நுழைவு கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

image

இந்நிலையில் ஸ்டண்ட் ஷோ நடத்துவதற்கு காவல்துறையினரின் அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது. அதாவது இந்த ஷோ நடக்கும் பகுதியில் பரமத்தி காவல்நிலையத்திற்கு உட்பட்டதால் பரமத்தி காவல்நிலையத்தில் இதுகுறித்து விசாரித்தபோது பைக் ஸ்டண்ட் ஷோ நடத்துவது குறித்து தங்களுக்கு எதுவும் தகவல் தெரியாது என தெரிவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வனிடம் கேட்டபோது, பைக் ஸ்டண்ட் ஷோ நடத்துவதற்கு யாருக்கும் அனுமதி வழங்கவில்லை எனவும், சம்பவம் குறித்து உடனடியாக விசாரிப்பதாகவும் தெரிவித்தனர்.

image

அதேபோல் இதுபோன்ற ஸ்டண்ட் ஷோ நடத்துவதற்கு முதலில் காவல்துறையினரின் அனுமதி பெறவேண்டும். அதுமட்டுமின்றி சம்பந்தப்பட்ட இடத்தில் மருத்துவக் குழு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். பார்வையாளர்களை ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டும் அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் உள்ளது. ஆனால் இதுபோன்ற எவ்வித நிபந்தனைகளையும் கடைபிடிக்காமல் தனியார் திருமண மண்டபத்தில் இந்த ஸ்டண்ட் ஷோ நடத்தியுள்ளது தெரிய வருகிறது. இதில் ஒருசில பெண்களும் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்