Published : 07,Jan 2023 09:56 PM

”பாஸ் எனக்கு அத கொஞ்சம் சொல்லிக்கொடுங்க ”-இளம் வீரரிடம் டிப்ஸ் கேட்ட சூர்யகுமார் யாதவ்

-I-m-trying-to-play-like-you--did-you-teach-me-that---asked-Surya-to-the-young-player

பல நேரங்களில் உன்னைப்போல் விளையாட முயற்சித்திருக்கிறேன், அது முடியவில்லை, எனக்கும் அதைப்போல் விளையாட சொல்லிதருகிறாயா என தென்னாப்பிரிக்காவின் இளம் வீரர் டெவால்ட் ப்ரீவிஸிடம் இந்தியாவின் நட்சத்திர வீரர் சூரியகுமார் கேட்ட சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.

தென்னாப்பிரிக்கா அணியின் இளம் அதிரடி வீரரான டெவால்ட் ப்ரீவிஸ், 2022 U19 உலகக் கோப்பையில், 84.33 சராசரியுடன் 506 ரன்களை குவித்து அதிக ரன்கள் குவித்த வீரராக உலகக்கோப்பை தொடரை முடித்திருந்தார். பின்னர் அந்த இளம் வீரரின் திறமையை பயன்படுத்திகொள்ள நினைத்த, ஐபிஎல்-ன் மும்பை இந்தியன்ஸ் அணி, கடந்த ஆண்டு MI க்காக ஐபிஎல்லில் அறிமுகப்படுத்தியது.

image

ஏப்ரல் 6, 2022 அன்று ஷ்ரேயாஸ் ஐயரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஐபிஎல் தொடரில் அதற்குமுன் பங்கேற்காத தென்னாப்பிரிக்க வீரர் ப்ரீவிஸ் அறிமுகமானார். முதல் போட்டியிலேயே அவர் 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து அசத்தினார். மேலும் அந்த போட்டியில் கேகேஆர் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தியை வித்தியாசமான ஷாட் மூலம் பார்வையாளர்களை கவர்ந்தார். அப்போதிருந்து, ப்ரீவிஸ் பல சந்தர்ப்பங்களில் அந்த ஷாட்டை விளையாடியுள்ளார்.

image

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், அவர்களின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் சூர்யகுமாரும் ப்ரீவிஸும் அரட்டை அடித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 10 நிமிடங்களுக்கு மேல் நீளும் அந்த மகிழ்ச்சியான வீடியோவில், சூர்யகுமார் யாதவ் 19 வயது இளைஞனிடம் அவருடைய விரும்பத்தக்க ஒரு ஷாட்டான ”நோ-லுக் ஷாட்” குறித்து கேள்வி எழுப்புகிறார்.

ப்ரீவிஸ்ஸிடம் பேசும் சூர்யகுமார் யாதவ், "நான் சில சமயங்களில் உன்னை நகலெடுக்க முயற்சிக்கிறேன். நீ பேட்டிங் செய்யும் விதம்போல் ஆட முயற்சிக்கிறேன், நீ எனக்கு ஒன்றைக் கற்றுக் கொடுக்க வேண்டும். உன்னுடைய நோ-லுக் ஷாட், நோ-லுக் சிக்ஸை எப்படிச் செய்வது? அதை உன்னிடம் இருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறேன்" என்று கேட்கிறார்.

image

சூரியகுமார் யாதவின் 360டிகிரி ஷாட்டிற்கு இணையாக அதை கவுரமாக கருதிய ப்ரீவிஸ், அந்த ஷாட் குறித்த சுவாரசியமான விசயங்களை பகிர்ந்துகொண்டார்.

சூர்யகுமார் யாதவிடம் பேசும் ப்ரீவிஸ், “நான் அதை விரும்புகிறேன். இது ஒரு பெரிய மரியாதையாக இருக்கிறது, ஆனால் உங்களிடமிருந்து நான் நிறைய காட்சிகளைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். இதைப் பற்றி நான் உங்களுக்கு ஒரு வேடிக்கையான கதையைச் சொல்ல விரும்புகிறேன். என் நோ-லுக் என்பது பார்க்காமலே தான் நடக்கும். எனக்கும் அது எப்படி நடக்கிறது என்று தெரியாது. என் நோ-லுக் வித்தியாசமாக அப்படி தான் நடக்கும். நான் எப்போதும் என் தலையை கீழே வைத்தால் அது உதவும் என்று உணர்ந்து செயல்படுவேன். பின்னர் அது நடக்கும்" என்று வேடிக்கையாக கூறினார் இளம் வீரர் ப்ரீவிஸ்.

டி20 போட்டியில் 162 ரன்கள் குவித்த ப்ரீவிஸ்!

அக்டோபர் 2022 இல், தென்னாப்பிரிக்காவின் உள்நாட்டு T20 போட்டியான CSA T20 தொடரில், ப்ரீவிஸ் அவருடைய அதிகபட்ச் டி20 ஸ்கோரை அடித்து அசத்தினார். நைட்ஸுக்கு எதிரான போட்டியில் டைட்டன்ஸ் பேட்டரான அவர், 57 பந்துகளில் 284.21 ஸ்டிரைக் ரேட்டில் 162 ரன்கள் எடுத்து, எந்தவொரு டி20 வடிவத்திலும் அடிக்கப்பட்ட மூன்றாவது அதிகபட்ச ரன்களாக அதை பதிவு செய்தார்.

image

உள்நாட்டு டி20 போட்டிகளில் அவருடைய அந்த சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய ப்ரீவிஸ், ”அந்த நேரத்தில் நான் என்ன செய்கிறேன் என்று கூட எனக்கு புரியவில்லை. அந்த நேரத்தில் எனக்கு தானாகவே எல்லாம் நடந்தது என்று நினைக்கிறேன். நான் ஒவ்வொரு பந்தையும் சரியான நேரத்தில் விளையாடினேன். பந்துக்கு பந்து நான் அதை முயற்சித்தேன். பின்னர் இறுதியில், நான் சக வீரரிடம் சொன்னேன், 'நான் இப்போது ஒவ்வொரு பந்தையும் சிக்ஸருக்கு அடித்து அடிக்க முயற்சிப்பேன்” என்று கூறியதாக தெரிவித்தார்.

image

ப்ரீவிஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் 2023 க்காக மும்பை இந்தியன்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இருவரும் MI இன் மிடில் ஆர்டரில் பெரிய ரன்களைக் குவிக்க முக்கியமானவர்களாக இருப்பார்கள்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்