Published : 07,Jan 2023 02:03 PM

பெண் பயணி சீட்டில் சிறுநீர் கழித்தவர் கைது... பிடிபட்டது எப்படி? புகாரை மறுக்கும் தந்தை!

Six-Weeks-Later--Mumbai-Man-Arrested-For-Peeing-On-Woman-On-Plane

நியூ யார்க்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் மூதாட்டியான சக பெண் பயணியின் இருக்கையில் மது போதையில் சிறுநீர் கழித்த விவகாரத்தில் அருவருக்கத்தக்க செயலை புரிந்து தலைமறைவாக இருந்த ஷங்கர் மிஸ்ரா நேற்றிரவு (ஜன.,6) பெங்களூருவில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கிறார். அப்புகைபடம் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த நவம்பர் 26ம் தேதி ஏர் இந்தியா விமானம் டெல்லியை நோக்கி வந்துக் கொண்டிருந்த போது ஏர் இந்தியா (AI 102) விமானத்தின் பிசினஸ் கிளாஸில் பயணித்த 70 வயது மதிக்கத்தக்க பெண்ணின் இருக்கையில், சக பயணியான ஷங்கர் மிஸ்ரா மது போதையில் சிறுநீர் கழித்திருக்கிறார்.

இது குறித்து முதிய பெண்ணின் மகள் இந்திராணி கோஷ் ட்விட்டரில் வருத்தத்துடன் தனது தாயின் அனுபவத்தை பதிவிட்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அமைச்சர்களையும் டேக் செய்திருந்தார்.

அதில், “டின்னர் முடித்துவிட்டு போதையில் தள்ளாடி வந்த அந்த பயணி என் அம்மாவின் சீட்டில் சிறுநீர் கழித்திருக்கிறார். இதனால் கடும் அதிர்ச்சிக்கும், அருவருப்புக்கும் ஆளான என் தாய் புகார் கொடுத்ததும் அந்த நபருக்கு வேறு இடத்தை கொடுத்திருக்கிறது ஏர் இந்தியா நிர்வாகம். இதுபோக இந்த அசிங்கமான வேலையை செய்த அந்த நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சர்வ சாதாரணமாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்” என பொங்கி எழுந்திருக்கிறார்.

இந்த பதிவு வைரலானதும் விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா கவனத்துக்கு சென்றதோடு, “உங்கள் தாய்க்கு ஏற்பட்ட அனுபவம் துரதிஷ்டவசமானதுதான். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், இயக்குநரகத்துக்கு அறிக்கை வழங்க ஏர் இந்தியாவுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.” என்று தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்தான் நடுவானில் போதையில் ரகளை செய்தது அமெரிக்க நிதிச் சேவை நிறுவனத்தில் பணியாற்றும் ஷங்கர் மிஸ்ரா என தெரிய வந்தது. அதன் பிறகு அவரை பிடிக்க லுக் அவுட் நோட்டீஸும் விடுக்கப்பட்டது. இதனிடையே அடுத்த 30 நாட்களுக்கு ஏர் இந்திய விமானத்தில் பயணிக்க ஷங்கர் மிஸ்ராவுக்கு தடையும் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் பெங்களூருவில் பதுங்கி இருந்த ஷங்கர் மிஸ்ராவை தனிப்படை போலீசார் நேற்றிரவு கைது செய்திருக்கிறார்கள். ஷங்கர் மிஸ்ரா தனது செல்ஃபோனை ஸ்விட் ஆஃப் செய்திருந்தாலும் தனது சமூக வலைதளங்கள் மூலம் நண்பர்களை தொடர்புகொண்டதை வைத்தும், கிரெடிட் கார்டு பயன்பாட்டை வைத்தும் ஷங்கர் மிஸ்ராவை பிடித்து டெல்லிக்கு அழைத்து வந்திருக்கிறது தனிப்படை.

இதனிடையே, ஷங்கர் மிஸ்ராவின் செயல் குறித்து அறிந்த அவர் பணியாற்றும் அமெரிக்க நிறுவனம் இதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, எங்கள் நிறுவன ஊழியர் இப்படியான அருவருக்கத்தக்க செயலை செய்திருப்பது எங்களுக்குதான் அவமானம் என்றுக் கூறி ஷங்கர் மிஸ்ராவை பணி நீக்கமும் செய்திருக்கிறது.

இப்படி இருக்கையில், ஷங்கர் மிஸ்ராவின் தந்தை தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், “என் மகனிடம் இருந்து பணம் பறிப்பதற்காகவே இப்படியான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கிறது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. சம்பவம் நடந்ததாக கூறப்படும் நாளன்று என் மகன் சோர்வாக இருந்திருக்கிறார். அதற்கு முன் 30 மணிநேரம் தூங்காமல் இருந்தான். இதனால் டின்னர் முடிந்ததும் மது அருந்திவிட்டு ஆழ்ந்து தூங்கியதாக சொன்னான்.

Shyam Mishra (L), father of Shankar Mishra (R).

ஆனால் கண் விழித்த பிறகு ஏர் இந்தியா ஊழியர்கள் தான் சக பயணியின் சீட்டில் சிறுநீர் கழித்ததாக சொல்லியிருக்கிறார்கள். கண்டிப்பாக என் மகன் அப்படி செய்திருக்க மாட்டான். ஷங்கரின் வயது 34. அவனுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கோ 72 வயது. இத்தனை பெரியவரிடம் என் மகன் அநாகரிகமாக நடந்திருக்க மாட்டார். இந்த சம்பவம் பற்றி புகார் எழுந்த பிறகு என் மகனிடம் பணம் கேட்கப்பட்டிருக்கிறது. அவனும் கொடுத்திருக்கிறான். அதன் பிறகு மீண்டும் ஏதோ கேட்கப்பட்ட போது அதை அவன் கொடுக்காததால் இந்த விவகாரத்தை பூதாகரமாக்கியிருக்கிறார்கள்” என்று பேசியிருக்கிறார்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்