`அடிப்படை தேவையான களிமண் கூட எங்களுக்கு கிடைப்பதில்ல’- மண்பாண்ட தொழிலாளி வேதனை

`அடிப்படை தேவையான களிமண் கூட எங்களுக்கு கிடைப்பதில்ல’- மண்பாண்ட தொழிலாளி வேதனை
`அடிப்படை தேவையான களிமண் கூட எங்களுக்கு கிடைப்பதில்ல’- மண்பாண்ட தொழிலாளி வேதனை

படவேடு கிராமத்தில் மண்பாண்ட தொழிலாளியொருவர், களிமண் தேவையில் நிலவும் பிரச்னைகள் குறித்து நம்மிடையே தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் படவேடு என்ற கிராமத்தில் மண் பாண்டங்கள் தயாரிக்கும் தொழிலாளியாக இருக்கிறார் தர்மலிங்கம் (62) என்பவர். பொதுவாக மண்பாண்டங்களை உற்பத்தி செய்ய நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐம்பூதங்களும் உபயோகப்படுவதால், தனது ஒவ்வொரு உழைப்பின் பலனும் பஞ்சபூதங்களால் ஆனது என சொல்கிறார் தர்மலிங்கம் ஐம்பூதங்களால் செய்யப்படும் இப்பொருள்களில் உணவு சமைக்கப்பட்டால், உடல் நலத்திற்கு தீங்கு ஏதும் வராது; சுற்றுசூழலுக்கும் பாதிப்பு தராது என்கிறார் தர்மலிங்கம்.

பானைகள் மட்டும் அல்லாது தேநீர் குவளை, தோசை கல், Hotcase, குளிர் சாதன பானை என்று விதவிதமான பொருட்களையும், கைவினைப்பொருட்களையும் இவர் தயார் செய்து வருகிறார். இதன் ஒவ்வொன்றின் நேர்த்தியும், நமக்கு வியப்பளித்தது என்றே சொல்லலாம். குறிப்பாக வெந்நீர் போடும் கெட்டில் போன்றொன்று அவர் வைத்துள்ளார். இதன் அடிப்பாகத்தில் சிறு துவாரத்தின் வழியாக நிரப்பப்படும் நீரானது, ஒரு சொட்டு கூட வெளி வராமல் இருந்தது ஆச்சர்யத்தை அளித்தது. மேலும், பிரத்தேயகமாக செய்யப்பட்ட விசில் ஒன்றில் நீரை நிரப்பி ஊதும் பொழுது, அது பல சத்தங்களை வெளிப்படுத்தியது.

இதேபோல இன்னும் பல பொருட்களை அவர் செய்துவருகிறார். இவ்வாறு மண்பாண்டங்கள் செய்ய, ஏரிகளிலிருந்து களிமண் எடுக்கப்படும் என்பதால், அவை பற்றாக்குறை இல்லாமல் கிடைப்பதற்கு அரசு ஆவண செய்யவேண்டும் என்ற கோரிக்கையை நம்மிடையே வைத்தார் தர்மலிங்கம்.

அவர் பேசுகையில், “எங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நான்கு மாதங்கள் தொழில் செய்ய முடியாமல் கஷ்டமான சூழ்நிலை உருவாகும். அந்த 4 மாதங்கள் - புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி. இம்மாதங்களில் பெய்யும் தொடர் மழை காரணமாக. மண்பாண்ட தொழிலை அப்போதெல்லாம் செய்ய முடிவதில்லை. மண்பாண்டம் செய்யும் என்னை போன்றோர் ஏரிக்கு சென்று களிமண் எடுக்கும் போது பல தரப்பட்ட இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். `இங்கு நீங்கள் களிமண் எடுக்க கூடாது’ என்று அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டு, மண்ணை எடுக்க விடாமல் எங்களை தடுத்து வருகின்றனர்.

மாறாக, அதே நேரத்தில் ஏரியிலிருந்து நூற்றுக்கணக்கான லாரிகளில் செங்கல் சூளைகளுக்கு மண் எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன. அதை யாரும் கண்டு கொள்ளவதில்லை, கேட்பதில்லை. தமிழர்களின் பாரம்பரிய தொழிலான மண்பாண்டம் தொழிலுக்கு அரசு அங்கீகாரம் கொடுக்கவேண்டும். எங்களுக்கு ஒரு வருடத்திற்கு நான்கு அல்லது ஐந்து டிராக்டரில் கொண்டு வரும் அளவுக்கான களிமண் மட்டுமே தேவைப்படுகிறது.

அவற்றை மட்டும் எங்களுக்கு சிக்கலின்றி வழி செய்துகொடுத்தால் போதும். தமிழக முதலமைச்சர், நாங்கள் களிமண் எடுப்பதற்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து தமிழர்களின் பாரம்பரிய மண் பாண்ட தொழிலை மீட்டெடுக்க வழிவகை செய்ய வேண்டும்” என மண்பாண்ட உற்பாத்தியாளர்கள் சார்பாக கோரிக்கை வைத்தார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com