Published : 03,Jan 2023 09:45 AM

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: புத்தாண்டை வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?

india-vs-sri-lanka-1st-t20-match-preview

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.00 மணிக்கு நடக்கிறது.

இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி தலா 3 ஆட்டங்களை கொண்ட டி20, ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று  இரவு நடைபெறுகிறது. 2023ஆம் ஆண்டின் முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

டி20 தொடரில் இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி மீண்டும் களம் காண்கிறது. கடைசியாக நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து கோப்பையை வென்ற உத்வேகத்துடன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. சூரியகுமார், இஷான் கிசான், ஹர்திக் பாண்டியா என இலங்கையை வீழ்த்துமளவுக்கு நல்ல ஃபார்மில் உள்ள வீரர்கள் இந்திய அணியில் நிறைந்துள்ளார்கள்.  

image

அதே சமயம், ஆசிய சாம்பியனான இலங்கை அணி தசுன் ஷனகா தலைமையில் பதும் நிசாங்கா, ராஜபக்சே, தனஞ்ஜெயா டி சில்வா, குசல் மென்டிஸ், வானிந்து ஹசரங்கா என திறமைவாய்ந்த வீரர்களுடன் இந்தியாவுக்கு கடும் சவால் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இரு அணிகளுமே தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் களமிறங்குவதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

மும்பை வான்கடே மைதானம் எப்போதுமே பேட்டிங்க்கு சாதகமானது. இந்த மைதானத்தின் பவுண்டரி எல்லை சிறியதாக இருக்கும் என்பதால் நிலைத்து நின்று விளையாடினால் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக பெரிய ரன்களை குவிக்க முடியும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-

இந்தியா:இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் அல்லது சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப்சிங், உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல்.

இலங்கை:பதும் நிசாங்கா, குசல் மென்டிஸ், தனஞ்ஜெயா டி சில்வா, சாரித் அசலங்கா, ராஜபக்சே, தசுன் ஷனகா (கேப்டன்), ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, தீக்ஷனா, தில்ஷன் மதுஷன்கா, லாஹிரு குமாரா.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்