Published : 31,Dec 2022 02:41 PM
பழனி: நீதிமன்ற உத்தரவுடன் பட்டியலினத்தோரை சாமி தரிசனத்துக்கு அனுமதித்த மாற்று சமூகத்தினர்!

பழனி அருகே சித்தேரவு கிராமத்தில் பட்டியலினத்தோரை சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுத்த மாற்று சமூகத்தினர் குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி கள ஆய்வு செய்தது. அதன்முடிவில் பட்டியல் இனத்தை சேர்ந்த மக்கள் மதுரை உயர்நீதிமன்றம் வரை சென்று சட்ட போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் பட்டியலினத்தவர்களை கோயிலுக்குள் அனுமதித்து சாமி தரிசனம் செய்ய வைத்தனர்.
பழனி அருகே உள்ளது சித்தேரவு கிராமம். இந்த கிராமத்தில் 100க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் பட்டியல் இனத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சித்தரேவு கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலுக்குள் பட்டியலின மக்களை, அதே ஊரைசேர்ந்த மாற்று சமூகத்தினர் கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்தனர். இதுகுறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து புதிய தலைமுறை தொலைக்காட்சி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று களஆய்வு செய்து அது குறித்த செய்திகளை நேரலை செய்தது. இதன் தொடர்ச்சியாக தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திலிருந்து கோட்டாட்சியர் சிவகுமாருக்கு இது குறித்த அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தனர். பட்டியல் இனத்தோரை சேர்ந்த பொதுமக்கள் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உயர் நீதிமன்றம், பட்டியல் இனத்தவர்களை கோவிலுக்குள் அனுமதித்து சாமி தரிசனம் செய்ய வைக்க வேண்டும் என கோட்டாட்சியருக்கு உத்தரவு பிறப்பித்தது. அதன் பெயரில் பட்டியல் இன மக்களை காளியம்மன் கோயிலுக்குள் அழைத்து சென்று இன்று சாமிதரிசனம் செய்யவைத்துள்ளனர்.