Published : 31,Dec 2022 12:14 PM
கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு 15 லட்சம் இழப்பீடு கொடுத்த நிறுவனம்.. ஏன் தெரியுமா?

பெண் ஊழியர் ஒருவர் தனது மகப்பேறு குறித்து உயரதிகாரிகளிடம் தெரிவித்த நிலையில், தற்போது அந்த நிறுவனத்திடம் இருந்து 15 லட்சம் ரூபாய் இழப்பீடாக பெற்றிருக்கிறார். இங்கிலாந்தில் நடந்த இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்.
சார்லட் லீச் என்ற 34 வயதுடைய பெண் ஒருவர் இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைப்புக்கான நிறுவனத்தில் நிர்வாகத்துறையில் பணியாற்றி வந்திருக்கிறார். தனக்கு குழந்தை பிறக்கப் போவதை அந்த நிறுவனத்தின் மேனேஜரிடம் சொல்லியதை அடுத்து சார்லட்டை அவர்கள் பணி நீக்கம் செய்திருக்கிறார்கள்.
இது குறித்து வெளியான செய்திகள் சிலவற்றின்படி, சார்லட் தனது மேனேஜரான நிக்கோலா கால்டரிடம் தன்னுடைய கர்ப்பம் குறித்தும் இதற்கு முன்பு பல முறை தனக்கு கருச்சிதைவு ஏற்பட்டிருப்பதால் தற்போது கருவுற்றிருக்கும் குழந்தையின் நலத்தின் மீது மிகுந்த அக்கறை கொள்ள வேண்டியிருப்பதாக கூறி விடுப்புக்கு விண்ணப்பித்திருக்கிறார் என்று நமக்கு தெரியவருகிறது.
ஆனால் கால்டரோ, இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், அலுவலகத்தின் மகப்பேறு விடுப்புக்கான புதிய ஒப்பந்ததில் நீங்கள் கையெழுத்திடாததால் உங்களை தொடர்ந்து வேலையில் வைத்திருக்க வேண்டிய கடமை எங்களுக்கு இல்லை என அதிரடியாக கூறி உடனடியாக சார்லட்டை வேலையை விட்டு தூக்கியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
வேலையை இழந்த பிறகு சில வாரங்களிலேயே சார்லட்டின் கரு மீண்டும் கலைந்திருக்கிறது. வேலையும் போய் குழந்தையும் இல்லாமல் ஆனதால் மனதளவிலும், உடலளவிலும் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார் அவர். வேலையிழப்பினால் மட்டும், ஆண்டுதோறும் 20 லட்ச ரூபாய் வருமானத்தையும் சார்லட் இழந்திருக்கிறார்.
இதனால் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக லண்டனின் தொழிலாளர்களுக்கான தீர்ப்பாயத்தில் புகார் தெரிவித்திருக்கிறார் சார்லட் லீச். அந்த புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது தீர்ப்பாயம்.
அப்போது சார்லட், “என்னை பணி நீக்கம் செய்தது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. மிகப்பெரிய தாக்கத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. வேறொரு வேலைக்கும் செல்ல முடியவில்லை. அடிக்கடி பேனிக் அட்டாக்கும் வருகிறது” என உணர்ச்சிப்பொங்க கூறியிருக்கிறார்.
சார்லட்டின் புகாரை முழுவதுமாக விசாரித்த தொழிலாளர் தீர்ப்பாயம், அவருக்கு ஆதரவாக 14,885 பவுண்ட் அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 15 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என அந்த நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருக்கிறது.