Published : 23,Dec 2022 08:21 PM

வெறும் ரூ.60 லட்சம்தான்; 2650 ச.அடியில் எல்லா வசதிகளுடன் கூடிய இசை வீடு - எங்கே தெரியுமா?

Dream-house-Sarangi-house-that-fulfills-the-needs-of-the-household

கல்யாணம் பண்ணிப்பார் வீட்டை கட்டிப்பார் என்று சொல்வார்கள். ஆம் கல்யாணம் பண்ணி அதில் உள்ள இன்ப துன்பங்களையும். வீட்டை கட்டி அதில் அடையும் கஷ்ட நஷ்டங்களையும் அனுபவித்தால்தான் வாழக்கையே புரியும்.

இப்பதான் வீட்டு வாடகை கொடுத்தேன் அதுக்குள்ள 1ஆம் தேதி வந்துருச்சு; இனி அடுத்த மாத வாடகைக்கு என்ன செய்வது என வாடகை வீட்டில் வசிக்கும் சாமனியர்களின் புலம்பல் புரியாத புதிராகவே இருக்கும், சொந்தமா ஒரு வீடு இருந்தால் போதும் கஞ்சியோ தண்ணியோ குடுச்சு வயித்த கழுவிட்டு காலத்தை ஓட்டிக்கலாம். வாடகை வீட்ல இருந்து காலத்தை தள்ளுறது ரொம்ப கஷ்டம் என ஏச்சும் பேச்சுக்கும் ஆளாகும் ஏழைகளின் சோக ராகம் எக்கோவாக எதிரொலிக்கிறது.

image

இத்தகைய சூழலில் புதிய தலைமுறையின் வீடு நிகழ்ச்சியில் குறைந்த பட்ஜெட்டில் கட்டப்படும் வீடுகள் குறித்த அரிய தகவல்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வீசு சீசன் - 2 நிகழ்ச்சில் சொல்லப்பட்ட வீடுகள் குறித்து தொடர்ச்சியாக பார்க்கலாம். அதன்படி, 2650 சதுரடியில் ரூ.60 லட்சம் செலவில் அனைத்து வசதிகளுடன் கேரள மாநிலம் திருச்சூரில் கட்டப்பட்டு சாரங்கி என பெயரிடப்பட்டுள்ள ஒரு வீட்டை பற்றியும் அதன் சிறப்பம்சங்கள் பற்றியும் விரிவாக பார்க்கலாம்...

இயற்கையும் இசையும் ஒருசேர கலந்த வீடுதான் சாரங்கி. கேரளாவில் பாரம்பரிய கட்டடக் கலை படிப்புரா. புடிப்புரா என்றால் வீட்டின் முன்பகுதி என்று மலையாளத்தில் பொருள்படும். செங்கற்களால் அமைக்கப்பட்டுள்ள தூணின் மேற்பகுதியில் ஜிஐ பைப் மூலம் பிரேம் அமைத்து அதன் மேல் ஓரடுக்கு ஓடுகளை அடுக்கியுள்ளனர். ஆனால் வீட்டிற்கு ஈரடுக்கு ஓடு முறைகளை பயன்படுத்தியுள்ளனர்.

ஒரடுக்கு ஓடுகளை பயன்படுத்துவதற்கு பதிலாக ஈரடுக்கு ஓடுகளை பயன்படுத்தும் போது வீட்டினுள் வெப்பத்தில் அளவில் வேறுபாடு காணப்படுகிறது. ஓடு வைத்துதான் வீடு கட்டப்போகிறோம் என்றால் ஈரடுக்கு முறையை பயன்படுத்தலாம். இது மிகவும் சிறந்த முறையாகும். அதேபோல் சிட் அவுட் பகுதியில் உள்ள தரை தளத்தை கோட்டா ஸ்டோன்களைக் கொண்டு அமைத்திருக்கிறார்கள். மேற்பகுதிக்கு ஆர்சிசி போட்டிருக்கிறார்கள்.

image

சாரங்கி வீட்டின் உரிமையாளர் ராஜீவ் குடும்பத்தினர் நம்மிடம் பேசிய போது... ”வீடு கட்டவேண்டும் என முடிவெடுத்த பிறகு, பேஸ்புக் மூலமாக கட்டட வடிவமைப்பாளரை கண்டுபிடித்தோம். அதன் பிறகு எங்களுக்கு, இந்த மாதிரியான முற்றம் வேண்டும். பிறகு இந்த வீட்டில் யார் எங்கு இருந்தாலும் தொடர்புகொள்ள வசதியாக இருக்க வேண்டுமென கேட்டோம். நாங்கள் என்னென்ன வசதிகள் வேண்டுமென கேட்டோமோ அதற்குத் தகுந்தாற்போல பிளான் கொடுத்தார். அது எல்லோருக்கும் பிடித்துப் போனது. எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த வீட்டின் முற்றத்தில் இருந்துதான் பிரார்த்தனை செய்வேன். எனக்கு கார்டனிங் ரொம்ப பிடிக்கும் அதனால் பால்கனியில் கார்டனிங் அமைத்து அதை பராமரித்து பாதுகாத்து வருகிறோம்” என்றார்கள்.

image

இந்த வீட்டோட பேரு சாரங்கி, சாரங்கி என்பது ஒரு இந்துஸ்தானி இசைக்கருவி. இது உணர்ச்சிகரமான இசையைத் தரும் வல்லமை படைத்து. இந்த வீட்டைப் பற்றி யோசிக்கும் போது மூன்று நிறங்கள் மனதில் தோன்றின. மண்ணின் சிவப்பு, பாறைகளின் கருப்பு மற்றும் மரங்களின் பச்சை. இந்த மூன்று நிறங்களை தான் இயற்கையாக எங்கும் காணமுடியும். இதையே பயன்படுத்தி இந்த வீட்டை கட்டியுள்ளோம். அதேபோல் வீட்டின் வெளியே இருந்து வீட்டிற்குள் வரும் வெப்பத்தை தடுக்கும் வகையில் வீட்டின் வெளிப்புற பூச்சு வேலைகளை முடிந்தவரை நாங்கள் தடுத்துள்ளோம். வெளியே இருந்து எங்கள் வீட்டிற்கு வருபவர்கள், வீட்ல வெப்பம் அதில் இல்லைன்னு சொல்லும்போது எங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது என்றார் வீட்டின் உரிமையாளர் ராஜீவ்.

image

இதையடுத்து வீட்டின் வடிவமைப்பாளர் மானசி மற்றும் குரு பிரசாத் ரனே ஆகியோர் பேசிய போது... ”ராஜீவ் குடும்பத்தார் ஒரு மண்சார்ந்த வீடுகட்ட வேண்டுமென்று தான் என்னிடம் வந்தார்கள். அவர்கள் வீடு; கட்டுவதற்காக காட்டிய இடம் மிகவும் அடர்த்தியான பகுதியில் இருந்தது. இதனால் நாங்கள் இந்த வீட்டை கட்டுவது மிகவும் சிரமமாகவும், சவாலாகவும் இருந்தது. இந்த சிறிய இடத்தில் மண்சார்ந்த வீடு கட்டுவது மிகவும் கஷ்டம் என செங்கல் கொண்டு கட்டலாம் என முடிவு செய்தோம்.

ராஜீவ் குடும்பத்தோட பூர்வீக வீட்டின் பக்கத்தில் இருந்து 5.5 சென்ட் இடத்துல தான் இந்த வீட்டை கட்டினோம். இந்த வீட்டை அவங்களோட அப்பாவுக்கு பரிசாக கொடுக்க விரும்பினாங்க. கிளையன்ட்டுக்கு மியூசிக் மேல் அதிக ஆர்வம் இருந்ததால் அதையே நாங்கள் முக்கியமான விசயமாக இந்த வீட்டின் எல்லா இடங்களில் பயன்படுத்தியிருக்கோம். இந்த மொத்த வீட்டையும் அலங்கரிக்கும் இடமாக முற்றம் அமைந்துள்ளது. அந்த கான்செப்டில்தான இந்த வீட்டை நாங்கள் டிசைன் செய்தோம்.

image

முற்றத்தில் மழைநீர் வரவேண்டும் என்பது கிளையன்ட்டோட விருப்பம். வெளிச்சம் மட்டும் வரும்படி கண்ணாடி வைத்து மூடியுள்ளோம். தேவைப்பட்டால் கண்ணாடியை எடுத்துவிட்டு மழைநீர் உள்ளே வரும்படி அமைக்க உள்ளோம். மோகனம் மத்தியமாவதி ராகங்கள் கிளையன்ட்டுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால், படிக்கட்டின் கைப்பிடிகளை இசையின் அடிப்படையில் அமைத்துள்ளோம். ஒரு வீட்டோட வடிவமைப்பு அந்த வீட்டில் உள்ளோரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இருக்க வேண்டும். அதற்கு தகுந்தாற்போல இந்த வீட்டை நாங்கள் வடிவமைத்துள்ளோம் என்றனர்.

வீட்டின் அழகை கூட்டும் வகையில், கோட்டையத்தில் இருந்து வந்த சிற்பிகளின் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கருங்கற்களால் சுவர் எழுப்பியிருக்கிறார்கள். அதன் அருகே மீன் வளர்ப்பதற்காக சிறிய குளம் ஒன்றை அமைத்திருக்கிறார்கள். அதில், கோல்டு பிஸ், மற்றும் கப்பீஸ் என்ற மீன் வகையும் இருந்தது. இந்த வீட்டின் முன்பக்க கதவை பிலா மரத்தில் டிசைன் செய்து அழகாக அமைத்துள்ளார்கள். வீட்டினுள் நுழைந்தவுடன் நம்மை வரவேற்பது ஹால் பகுதி, இந்த ஹால் பகுதியில் உள்ள தரை அழகிய கோட்டா ஸ்டோனால் மிரர் பினிஷிங்கில் வடிவகைப்பட்டுள்ளது. அதேபோல் பக்கத்து வீட்டில் இருப்பவர்களுடன் பேசுவதற்கு வசதியாக நெட்டு வசத்திலும் குறுக்கு வசத்திலும் ஜன்னல்களை அமைத்துள்ளார்கள்.

image

இந்த வீட்டை இசைக்கருவிகளும் சாமி சிலைகளுமே அதிகம் அலங்கரிக்கின்றன. அதிக அளவிலான விதவிதமான புல்லாங்குழல்களும், நடராஜர் மற்றும் பிள்ளையார் சிலைகளும் அழகிய வேலைப்பாடுகளுடன் அசத்துகின்றன. இந்த வீட்டில் உள்ள எல்லா பகுதிகளையும் இணைக்கும் பகுதியாக வீட்டின் முற்றம் அமைந்துள்ளது. இங்கிருந்து இந்த வீட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் எளிதாக காணமுடியும். ஒரு வீட்டை கட்டும்போது காற்று உள்ளே புகுந்து வெளியே செல்லும் வகையிலும் வழிவகை செய்ய வேண்டும். அதற்கேற்ப காற்றோட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கேரளாவில் பிலா மரங்கள் அதிகமாக உள்ளதால் அந்த மரத்தை பயன்படுத்தியே இந்த வீட்டிற்கான மர வேலைப்பாடுகளை செய்துள்ளனர்.

image

இந்த வீட்டில் மொத்தம் மூன்று வகையான சுவர்கள் உள்ளன. அதில், பூசப்படாத செங்கல் சுவர், பூசிய செங்கல் சுவர் மற்றும் கருங்கற்களால் ஆனா சுவர். இந்த மூன்று முறையில்தான் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. இந்த வீட்டில் உள்ள கிச்சன் மாடுலர் கிச்சன் என்றாலும், இது பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள மாடுலர் கிச்சன் என்றே சொல்ல வேண்டும். ஏனெனின் மாடுலர் கிச்சனில் பயன்படுத்தப்படும் பொருட்களை தனித்தனியாக கொண்டு முற்றிலும் புதிதாக வடிவமைத்துள்ளார்கள். இந்த வீட்டில் மொத்தம் மூன்று படுக்கை அறைகள் உள்ளன. அதில் தரைதளத்தில் ஒன்றும் முதல் தளத்தில் இரண்டும் அமைந்துள்ளது.

image

மேல் தளத்திற்குச் செல்லும் படிக்கட்டுகளுக்கு பிலா மரத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள். பைப்பிடிக்கு ஜிஐ பைப்புகளை பயன்படுத்தி இருக்கிறார்கள். இசையை பிரதிபளிக்கும் வகையில் படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வீட்டை வெளியே இருந்து பார்க்கும் போது அழகாய் தெரிய செங்கற்களால் செய்யப்பட்டுள்ள ஜாலி ஒர்க்ஸ்தான் காரணம். இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. கேரளாவில் அதிகம் மழைபெய்யும் என்பதால் பால்கனியில் சிமெண்ட் தளம் அமைத்துள்ளார்கள். இதில் அதிக அளவில் செடிகளை வளர்த்து வருகிறார்கள்.

இதுபோன்ற இன்னும் சிறப்பான பல ரம்யமான வீடுகளை பற்றி தொடர்ந்து இங்கு பார்க்கலாம்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்