Published : 23,Dec 2022 02:05 PM

``நான் ட்விட்டரோட புதிய சிஇஓ-வா ஆகலாமா?” - ட்வீட் போட்ட யூட்யூபருக்கு மஸ்க்கின் பதிலென்ன?

Youtuber-wants-to-be-CEO-of-Twitter---Musk-replies

ட்விட்டரில் நடந்த தலைமை நிர்வாகி பதவி கருத்துக் கனிப்புக்குப் பிறகு, அப்பதவியில் அமர பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அதில் உலகின் பிரபல யூடியூபர் Mr.பீஸ்ட்டும் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். அதற்கு எலான் மஸ்க் ரிப்ளை அளித்திருக்கிறார்!

மஸ்க் ட்விட்டரை சுமார் 44 பில்லியன் டாலருக்கு வாங்கியபின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். உதாரணத்துக்கு, பராக் அகர்வாலைத் தலைமை நிர்வாகத்திலிருந்து அகற்றினார். பின்னர் அவர் முழு நிறுவனத்தையும் மறுசீரமைப்பதற்காகப் பல ஊழியர்களை சில தின இடைவெளிக்குள் பணிநீக்கம் செய்தார். இவையெல்லாம் விமர்சனமான போதும் கூடுதலாக, மஸ்க் தனது ட்விட்டர் 2.0 என்ற கனவுக்கு வடிவம் கொடுக்க, பல முயற்சிகளை செய்து சோதித்து வருகிறார்.

இக்காரணங்களால் அவர் மீது கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தனர். அப்படியான சூழலில்தான், மஸ்க் தான் ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்களா என்பதை அறிய ஒரு கருத்துக்கணிப்பையும் தொடங்கினார். சமூக வலைதளத்தில் கருத்துக்கணிப்பைத் தொடங்கிய அவர், அதில் வரும் முடிவுக்குக் கட்டுப்படுவேன் என அறிவித்தார். எனினும் முடிவு அவருக்குச் சாதகமாக வரவில்லை. முடிவில் 57 சதவீத மக்கள் மஸ்க் பதவி விலக வேண்டும் என்று விருப்பத்தைத் தெரிவித்தனர்.

image

இதைப் பகிர்ந்ததுடன் மஸ்க் அப்பதவிக்குச் சரியான நபரை நியமித்த பிறகு தான் விலகுவதாகக் குறிப்பிட்டார். “இந்த வேலைக்கு வரும் அளவுக்கு முட்டாள்தனமான ஒருவரைக் கண்டால் நான் விரைவில் பதவியை ராஜினாமா செய்வேன்! அதன் பிறகு, நான் சப்பிட்வேர் மற்றும் சேவையக குழுக்களை இயக்குவேன்” என்று அவர் ட்விட்டரிலேயே கூறினார்.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக பலரும் தாங்கள் அப்பதவிக்கு வர விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அவர்களில் ஒருவராக உலகின் பிரபல யூடியூபர் ஜிம்மி டொனாட்சன் (Mr.பீஸ்ட்) தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.

image

இதுதொடர்பாக ஜிம்மி டொனாட்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் “ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாகியாக நான் பொறுப்பேற்றுக் கொள்ளலாமா?” என்று கேட்டுள்ளார்.

இந்த யோசனைக்கு அவரை பின்பற்றுவோரும், பயனர்களும் கலவையான பதில்களைக் காட்டியுள்ளனர். ஆனாலும் மஸ்க்கே இதற்கு ரிப்ளை செய்திருப்பதுதான் இங்கு விஷயம். 24 வயதேயான அந்த யூடியூபரின் டிவீட்டிற்கு பதிலளித்த மஸ்க், "இது கேள்விக்கு அப்பாற்பட்டது அல்ல" என்று கூறியுள்ளார் மஸ்க்.

மஸ்க்கின் இந்த பதிவுக்கு கேள்விக்கு அப்பாற்படாத ஒரு கேள்விக்கு, மஸ்க் உரிய ஒரு பதிலும் சொல்லியிருந்தால் நன்றாக இருக்குமென பலரும் விமர்சித்து வருகின்றனர்.

-ஷர்நிதா

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்