Published : 20,Dec 2022 09:46 AM
குற்றாலம்: அதிவேகமாக வந்த ஆடி கார் மரத்தில் மோதிய விபத்து - ஒருவர் பலி

அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி சிஎன் கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவர், தனது நண்பர்களுடன் தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவியில் குளிப்பதற்காக ஆடி காரில் வந்துள்ளார். இந்நிலையில், பழைய குற்றால அருவியில் குளித்துவிட்டு, அருவியில் இருந்து காரில் புறப்பட்ட அவர், அதிவேகமாக காரை ஓட்டியுள்ளார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது பலமாக மோதியுள்ளது. இதில் காரின் இஞ்சின் கழண்டு கீழே விழுந்ததோடு காரில் பயணித்த சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் பயணித்த 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த குற்றாலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.