`தினமும் நைட் ஊசி போட்டுக்கலனா...’ - வலிகளுடன் வரலாற்றையே மாற்றியமைத்த உலகநாயகன் மெஸ்ஸி!

`தினமும் நைட் ஊசி போட்டுக்கலனா...’ - வலிகளுடன் வரலாற்றையே மாற்றியமைத்த உலகநாயகன் மெஸ்ஸி!
`தினமும் நைட் ஊசி போட்டுக்கலனா...’ - வலிகளுடன் வரலாற்றையே மாற்றியமைத்த உலகநாயகன் மெஸ்ஸி!

காலத்திற்கும் சிறந்த வீரனாக தன்னை மாற்றிக்கொண்ட லியோனல் மெஸ்ஸி, கடந்துவந்த பாதை இலகுவானதாக இருக்கவில்லை. பல சவால்களையும், வீழ்ச்சிகளையும் கடந்து மீண்டும் எழுந்து வந்த மெஸ்ஸி, தற்போது உலகமே விரும்பும் ஒரு மகுடிவித்தைக்காரனாக மாறியுள்ளார். அவர் கடந்து வந்த பாதையை நாமும் கொஞ்சம் பார்ப்போமே!

4 வயதில் தொடங்கிய கால்பந்து பயணம்!

அர்ஜெண்டினாவின் ரொசாரியோ பகுதியில் தன் பெற்றோருக்கு மூன்றாவது பிள்ளையாக பிறந்த மெஸ்ஸி, வெறும் 4 வயதிலேயே, அருகிலுள்ள தனது உள்ளூர் கிளப்பான “அபாண்டராடோ கிராண்டோலி”ல் கால்பந்து விளையாடத் தொடங்கினார்.

மெஸ்ஸியின் திறமையை கண்டறிந்த பாட்டி செலியா!

மெஸ்ஸி தனது குழந்தை பருவத்தில் தன்னுடைய சகோதரர்களும், மற்றவர்களும் விளையாடுவதை வேடிக்கை பார்த்துகொண்டிருந்தார். அப்போது அவர்களுடன் விளையாடும் ஒரு சிறுவன் வராத நிலையில், அவருக்கு பதிலாக மெஸ்ஸியை விளையாட சேர்த்துக்கொள்ளுமாறு மெஸ்ஸியின் பாட்டி கூறியபோதுதான், முதன்முதலில் புட்பாலை எட்டி உதைத்து விளையாடினார் மெஸ்ஸி. அப்போது சிறப்பாக விளையாடிய மெஸ்ஸியை கண்டு `அவருக்குள் பிறவியிலேயே கால்பந்து இருக்கிறது’ என்று வியந்த அவருடைய பாட்டி, தொடர்ந்து மெஸ்ஸியின் திறமையை மேலோக்கும் முயற்சியில் அவர் இறங்கினார். மெஸ்ஸியின் விளையாட்டிற்கு தேவையான ஷீ-வை கூட குடும்பத்தாரிடம் சண்டையிட்டு வாங்கிகொடுத்து அவரின் முன்னேற்ற பாதைக்கு பெரிதும் பின்பலமாக இருந்ததுகூட, அவருடைய பாட்டி செலியாதான்.

`நீ குள்ளமாக இருக்கிறாய்... எங்க அணிக்கு வேண்டாம்!’

தன்னுடைய முதல் போட்டி குறித்து முன்னர் பேசியிருந்த லியோனல் மெஸ்ஸி தன்னுடைய பாட்டி எப்படி தன்னை மெருகேற்றினார் என்று அவரே கூறியிருந்தார். தன் பாட்டியையும் முதல் போட்டியையும் குறித்து ஸ்போர்ட்ஸ் சேனல் ஒன்றிற்கு மெஸ்ஸி பேட்டியளித்த போது, “அங்கிருந்தோரிடம் என் பாட்டி என்னையும் அணியில் சேர்த்துக்கொள்ளுமாறு சொன்னார். ஆனால் பயிற்சியாளர் `அவன் மிகவும் சிறியவனாகவும், உயரம் குறைவானவனாகவும் இருக்கிறான்’ என்று என்னை சேர்க்கவே மறுத்தார். அதற்கு என் பாட்டி, `அவனை களத்தில் இறக்குங்கள், உங்கள் போட்டியை அவன் காப்பாற்றி தருவான்’ என்று கூறினார். தொடர்ந்து பாட்டி வற்புறுத்தியதை அடுத்து பயிற்சியாளர் என்னை களமிறக்கினார். அந்த போட்டியில் நான் 2 கோல்களை அடித்தேன்” என்று தெரிவித்திருந்தார்.

9 வயதில் கண்டறியப்பட்ட வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு!

1994ஆம் ஆண்டு `நியூவெல்ஸ் ஓல்டு பாய்ஸ்’ என்ற கிளப் அணிக்காக தனது 7 வயதிலிருந்து அடுத்த 6 வருடங்கள் தொடர்ச்சியாக விளையாடினார் மெஸ்ஸி. அந்த 6 வருடங்களில் 176 போட்டிகளில், 234 கோல்களை அடித்து அசத்திருந்தார். அத்தனை கோல்களை அடித்திருந்த போது அவருக்கு 13 வயது தான் இருந்தது. அந்த போட்டிகளின் சராசரி என்ன என்றால் ஒரு போட்டிக்கு அவர் 1.33 கோல் அடிப்பதாக இருந்தது. அப்படியானால் அவர் கோல் அடிக்காதே போட்டியே இல்லை.

மெஸ்ஸி 9 வயது இருக்கும் போது கிளப் அணியின் மருத்துவர் ஸ்வார்ஸ்டீன், மெஸ்ஸிக்கு வளர்ச்சியில் குறைபாடு இருப்பதை கண்டுபிடித்தார். அதை அவர்களிடம் சொல்வதற்கு முன்னதாக அந்த மருத்துவருக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர்கள், மெஸ்ஸியை காண்பித்து ’எங்களிடம் உள்ள சிறந்த வீரர் இவர்’ என்று மருத்துவரிடம் சொன்னார்கள். மருத்துவர் சற்று நிதானித்தார். உண்மையில் அந்த மருத்துவர் ஸ்வார்ஸ்டீனின் மருத்துவமனைக்கு முதன்முதலில் சென்றபோது மெஸ்ஸிக்கு 9 வயதுதான் ஆகியிருந்தது. அங்கு அவருக்கு பாதிப்பு உறுதியான நாள், ஜனவரி 31, 1997. அன்று அம்மருத்துவரின் பிறந்த நாள்.

அன்றைய தேதிக்கு வளர்ச்சி ஹார்மோன் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 20,000 உலக மக்களில் மெஸ்ஸியும் ஒருவர். அவர் நியூவெல்லுடன் இணைந்தபோது 4'0" உயரத்திற்கு சற்று அதிகமாக இருந்தார். அது, அவரது இலக்கு உயரத்திற்கு 15-20 சென்டிமீட்டர் குறைவாகும். இவை அனைத்தையும் ஆலோசித்த மருத்துவர், மெஸ்ஸியின் இந்தப் பிரச்சனை குணப்படுத்தக்கூடியதாக இருப்பதாகவும், அவரது உடல் சாதாரணமான வளர்ச்சிக்குறியதாக தான் இருப்பதாகவும் அனைவரிடமும் தெரிவித்தார்.

கால்களில் ஊசி போட்டுக்கொண்டு விளையாடிய மெஸ்ஸி!

குணப்படுத்தக்கூடியது என மருத்துவர்களே சொன்னபோதும், மெஸ்ஸியுடன் விளையாடிய சக நண்பர்களால் அதை அப்போது ஏற்கமுடியவில்லை. அவர்கள் மெஸ்ஸியை “புல்கா” (உயரத்தில் குறைவான நபர்) என்று அழைத்துள்ளனர். இது மெஸ்ஸிக்கு பிடிக்காமல் இருந்தது. ஹார்மோன் குறைபாடுக்கு அதிக செலவாகும் என்ற நிலையில், மெஸ்ஸியின் திறமைக்காக அவருடைய மருத்துவ செலவை ஏற்றுக்கொண்டு அவரை அணிக்குள் சேர்த்தது பார்சிலோனா கிளப்.

ஓடி விளையாட வேண்டிய வயதில் தன்னுடைய கால்களுக்கு ஊசியை செலுத்திகொண்டு விளையாடினார் மெஸ்ஸி. ஒவ்வொரு நாளும், மெஸ்ஸி ஒரு சிறிய சிரிஞ்ச் மூலம் வளர்ச்சி ஹார்மோனை சுயமாக செலுத்தி கொள்வார். இது வலியற்ற செயல்முறைதான் என்பது குறிப்பிடத்தக்கது. சொல்லப்போனால், கொசு கடிப்பதை விட குறைவான வலியுணர்வே இருக்கும். மெஸ்ஸி தன் மருந்தை வீட்டிற்கு எடுத்துக்கொண்டு வந்து, பேக்கை ஃப்ரீசரில் வைத்து, ஒவ்வொரு நாள் இரவிலும் வெளியே எடுத்து, தன் தொடைக்குள் தானே ஊசி போட்டுக்கொள்வார்.

போட்டிக்கு முன் பாத்ரூமில் மாட்டிக்கொண்ட மெஸ்ஸி!

மெஸ்ஸிக்கு 6 வயது இருக்கும் போது, பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து தொடரில் மெஸ்ஸியின் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அந்த போட்டியின் போது, எதிர்பாராதவிதமாக மெஸ்ஸி, பாத்ரூமில் மாட்டிக்கொள்ள, கதவு தானாகவே திறக்கமுடியாமல் லாக் ஆனது. மெஸ்ஸி எவ்வளவோ கத்தியும் யாருக்கும் கேட்கவே இல்லை. பின்னர் மெஸ்ஸி இல்லாமலேயே ஆட்டம் தொடங்கியது. ஆனால் பொறுத்து பொறுத்து பார்த்த மெஸ்ஸி, பாத்ரூம் ஜன்னலை உடைத்து கொண்டு வெளியே வந்து போட்டி நடைபெறும் கிரவுண்டிற்கு கடைசி 20 நிமிடங்கள் இருக்கும் போது சென்றார்.

மாற்றுவீரராக உள்ளே நுழைந்த மெஸ்ஸிக்கு, அந்த குறைவான நிமிடங்களே ஹாட்ரிக் கோல்களை அடிக்க போதுமானதாக இருந்தது. ஆம் கடைசி நேரத்தில் 3 கோல்களை மெஸ்ஸி அடிக்க இறுதிப்போட்டியில் வெற்றிபெற்றது மெஸ்ஸியின் அணி.

அந்த சம்பவம் குறித்து பேசியிருந்த மெஸ்ஸியின் தாய், “அதுவரை மெஸ்ஸி அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்து நான் பார்த்ததில்லை” என்று கூறினார்.

FC பார்சிலோனாவின் மூன்றாவது இளம்வயது வீரராக அறிமுகம்!

பார்சிலோனா அணிக்காக 17 வயதில் மூன்றாவது இளம்வயது வீரராக அறிமுகமானார் மெஸ்ஸி, மே 1, 2005ல் தன்னுடைய முதல் பார்சிலோனா கோலை பதிவு செய்த மெஸ்ஸி, அந்த பார்சிலோனா அணிக்கான முகவரியாகவே மாறிப்போனது, மீதி கதை.

2014 உலகக்கோப்பை தோல்வி- ஓய்வுபெறுவதாக அறிவித்த மெஸ்ஸி!

தன்னுடைய ரோல்மாடலான மாரடோனாவுடன் கைகோர்த்து வந்தும் 2010 உலகக்கோப்பையில் மெஸ்ஸியால் வெல்ல முடியவில்லை. மேலும் 2014ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஜெர்மனி அணிக்கு எதிராக அடைந்த தோல்விக்கு பின், மிகவும் உடைந்து போன மெஸ்ஸி, தான் ஓய்வு பெறபோவதாகவே அறிவித்தார். ஆனால் காலம் மெஸ்ஸியை அவ்வளவு எளிதாக விடவில்லை. மீண்டும் களத்திற்கு திரும்பிய மெஸ்ஸி தற்போது கோப்பையை வென்று காலத்திற்கும் சிறந்த வீரராக மாறியுள்ளார்.

17 வருட தாகத்தை தீர்த்துகொண்ட கால்பந்து உலகக்கோப்பை!

17வருடமாக மெஸ்ஸியின் கைகலில் தவழாமல் தோல்வியையே சந்தித்து இருந்தது, கால்பந்து உலகக்கோப்பை. 2022ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி அந்த அதிர்ஷ்டத்தை பெற்றது. 2022 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 3 கோல்களை அர்ஜெண்டினா அணிக்காக அடித்த கேப்டன் மெஸ்ஸி, அணியை 36 வருடங்களுக்கு பிறகு கோப்பைக்கு அழைத்து சென்றார்.

லியோனல் மெஸ்ஸியின் சாதனைகள்!

உலகக்கோப்பை வெற்றியை தொடர்ந்து, மெஸ்ஸி இரண்டு கோல்டன் பால் விருதுகளைப் பெற்ற முதல் வீரர் என்ற உயரிய அந்தஸ்தை பெற்றிருக்கிறார். முன்னதாக 2014-ல் அர்ஜென்டினா ஜெர்மனியிடம் இறுதிப் போட்டியில் தோற்றபோதும், 2022 இல் பிரான்ஸுக்கு எதிராக அர்ஜென்டினா வென்றபோதும் கோல்டன் பந்துகளை தட்டிச்சென்றிருந்தார் மெஸ்ஸி. இதுமட்டுமல்ல... 10 ”லா லிகா” பட்டங்கள், 7 ”கோபா டெல் ரே” பட்டங்கள், 7 பாலன் டி’ஒர், மற்றும் 4 UEFA சாம்பியன்ஸ் லீக் உட்பட 35 கோப்பைகளை வென்று அசத்தியுள்ளார் மெஸ்ஸி.

இவையொருபக்கம் என்றால் கோல்களை பொறுத்தவரையில், லா லிகா (474), சூப்பர்கோபா டி எஸ்பானா (14), யுஇஎஃப்ஏ சூப்பர் லீக் கோப்பை (3) ஆகியவற்றில் அதிக கோல்கள் அடித்த சாதனையையும் மெஸ்ஸி பெற்றுள்ளார். மேலும் கால்பந்து வரலாற்றில் (350) அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட அசிஸ்ட்களைப் பெற்றுள்ளார்.

உருவம் சிறியவனாக இருப்பதாக ஒதுக்கப்பட்ட ஒரு சிறுவன் காலத்திற்கும் சிறந்த வீரரானாக தற்போது உயர்ந்து நிற்கிறான். இனிவரும் பாதையும் மெஸ்ஸி என்னும் அர்ஜெண்டினா வீரனுக்கு வெற்றிப்பாதையாக அமையட்டும்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com