Published : 17,Dec 2022 09:16 PM
மக்களவை தேர்தலில் திமுக-பாஜக. கூட்டணியா? - சிவி சண்முகத்திற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதில்

அதிமுக- பாஜக உறவு என்பது எலிக்கும் தவளைக்கும் உள்ள உறவு; கிழவன் செத்தால் கட்டில் ஒழியும் என்ற பழமொழி உள்ளது. அதுதான் நடந்து வருகிறது. அதிமுக., பா.ஜ.க.வை கழற்றி விடுவார்களா? அல்லது பா.ஜ.க., கழற்றி விடுகிறதா என்பது தெரியவில்லை. முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் விரக்தியில் பேசி வருகிறார் என கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழக தகவல் தொழில் நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
"தோள்சீலை உரிமை" போராட்டத்தின் 200 - ஆம் ஆண்டு நினைவு கருத்தரங்கம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் மற்றும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மத குருக்கள் பலர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்கள். இந்த நிகழ்வில் தமிழக தகவல் தொழில் நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கூறுகையில், ”இந்தியாவில் உள்ள மக்களை பிற்போக்கான வழியில் இழுப்பதற்கான முயற்சி தற்போது நடைபெற்று வருகிறது. மனுஸ்மிருதி உள்ளிட்ட சட்டங்கள் மனிதர்களை அடிமையாக நடத்தக்கூடிய சட்டங்களை உருவாக்கியது. இதனை மீண்டும் கொண்டு வருவோம் என கூறி வரும் நிலையில், பாதிக்கப்பட்டு தற்போது மீண்டு வந்த மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது” என்றார்.
தொடர்ந்து 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக - பா.ஜ.க., கூட்டணி அமையும் என்று சி வி சண்முகம் பேசியதற்கு பதிலளித்த அவர், “மயக்கத்தில் இருக்கும் ஆட்கள் உளறுவதற்கு பதில் கூற முடியாது. அதிமுக., பா.ஜ.க.வை கழற்றி விடுவார்களா? அல்லது பா.ஜ.க. கழற்றி விடுகிறதா என்பதே தெரியவில்லை. பா.ஜ.க., வுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று தலைவர் கூறியுள்ளார். அவர்கள் விரக்தியில் உள்ளனர். அதிமுகவுக்கு தலைவரும் இல்லை, கொள்கையும் இல்லை என்னும் நிலையில் தடுமாறி கொண்டு இருக்கிறது. அதன் காரணமான விரக்தியின் விளிம்பில் அவர்கள் உள்ளனர். அதிமுக - பாஜக உறவு என்பது எலிக்கும் தவளைக்கும் உள்ள உறவு. கிழவன் செத்தால் கட்டில் ஒழியும் என்ற பழமொழி உள்ளது அதுதான் நடந்து கொண்டு உள்ளது” எனக் கூறினார்.