
புகார்தாரரை சாதி பெயரை சொல்லி திட்டிய குற்றச்சாட்டில் காவல் ஆய்வாளர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென, மதுரை எஸ்.பி.-க்கு தமிழக எஸ்.சி. எஸ்.டி. ஆணையம் பிறப்பித்த உத்தரவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த 4 பேர் தன்னை தாக்கியதாக அதே இனத்தை சேர்ந்த சௌந்தர்யா என்பவர் அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் பதிவுசெய்யப்பட்ட வழக்கின் எப்.ஐ.ஆர்.யை பெறுவதற்கு காவல் நிலையம் சென்றபோது, எஸ்.ஐ. இளங்கோவன் தன்னை மரியாதை குறைவாக பேசியதாகவும், சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும் தமிழ்நாடு எஸ்.சி. எஸ்.டி. ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரை சமயநல்லூர் சரக டி.எஸ்.பி.-க்கு அனுப்பிய ஆணையம், அலங்காநல்லூர் காவல் நிலைய எஸ்.ஐ. மீது எடுத்த நடவடிக்கை குறித்து பதிலளிக்க உத்தரவிட்டது.
டி.எஸ்.பி. விசாரணைக்கு சௌந்தர்யா ஆஜராகாத நிலையில், விசாரணை முடிக்கப்பட்டு ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் திருப்தி இல்லை என கூறி, அலங்காநல்லூர் உதவி ஆய்வாளர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும், விசாரணை அதிகாரியாக சமயநல்லூர் சரக டி.எஸ்.பி.-க்கு பதிலாக வேறு அதிகாரியை மாற்றியும் நியமிக்க மதுரை மாவட்ட எஸ்.பி.க்கு ஆணையம் உத்தரவிட்டது.
எஸ்.சி. எஸ்.டி. ஆணைய உத்தரவை எதிர்த்து மதுரை மாவட்ட எஸ்.பி மற்றும் சமயநல்லூர் சரக டி. எஸ். பி. ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை எனவும், மதுரை மாவட்ட எஸ்.பி.க்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட எஸ்.சி. எஸ்.டி ஆணையத்திற்கு அதிகார வரம்பு இல்லை என்கிற அரசு தரப்பு விளக்கத்தை ஏற்று, அலங்காநல்லூர் காவல் நிலைய எஸ்.ஐ. இளங்கோவன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்ற உத்தரவுக்கு தடை விதித்து, வழக்கை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.