Published : 14,Dec 2022 02:57 PM
மின்னல் வேகத்தில் மோதிச் சென்ற கார்; குழந்தையின் கண்முன்னே தாய் உயிரிந்த பரிதாபம்

ராஜபாளையம் அருகே நடந்த சாலை விபத்தில் மகள் கண் முன்னே தாய் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்களின் சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த சேத்தூர் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் தங்க முனியாண்டி. கூலி தொழிலாளியான இவருக்கு பாண்டிச்செல்வி என்ற மனைவியும் பாரதி, பார்கவி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். இந்நிலையில், இன்று காலை இரண்டாம் வகுப்பு பயிலும் தனது மூத்த மகள் பாரதியை முதலில் பள்ளிக்கு அனுப்பி விட்டு, இரண்டாவது மகள் பார்கவியை அங்கன் வாடியில் விடுவதற்காக பாண்டி செல்வி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது தென்காசியில் இருந்து ராஜபாளையம் நோக்கி அதிவேகமாக சென்ற கார், சாலையில் நடந்து சென்ற பாண்டிச்செல்வி மீது மோதியுள்ளது. இதில், தூக்கி வீசப்பட்ட பாண்டிச்செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவருடன் சென்ற சிறுமி பார்கவிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பெயரில் அவசர ஊர்தி மூலம் சிறுமியை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின் மேல் சிகிச்சைக்காக சிறுமி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தகவல் அறிந்து அங்க வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், வேலூர் மாவட்டத்தில் இருந்து சபரிமலைக்கு சென்ற நபர்கள் ஊர் திரும்பும் போது விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து குறித்து கார் ஓட்டுநர் சதீஷ்குமாரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து தங்கள் பகுதியில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாக குற்றம் சாட்டி பாண்டிச் செல்வியின் உறவினர்கள் சேத்தூர் காமராஜர் நகர் எதிரே தென்காசி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியல் காரணமாக தேசிய நெடுஞ்சாலையின் இரு புறமும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த தளவாய்புரம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தங்கள் பகுதியில் குறைந்தபட்சம் மூன்று வேகத்தடைகள் அமைக்க வேண்டும். இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும் பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
முதற்கட்டமாக அந்த இடத்தில் தடுப்புகள் மூலம் வாகனங்களின் வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அதிகாரிகளின் உறுதியை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பொதுமக்களின் இந்த போராட்டத்தால் தென்காசி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.