Published : 09,Dec 2022 01:02 PM

நீங்க அதிக எக்சர்சைஸ் செய்பவரா? - இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷார் ஆகிடுங்க!

Are-you-a-fitness-freak--Signs-that-you-are-exercising-too-much

தினசரி உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது நல்லதுதான். உடற்பயிற்சி செய்வது உடலின் முக்கிய உறுப்புகளை திறம்பட இயங்கவைத்து, நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் சிறுநீரக பிரச்னைகள் போன்ற உடல்நலக்குறைபாடுகளை தள்ளிவைக்கிறது என்கின்றனர் நிபுணர்கள். இருப்பினும், சமீப காலமாக இதயம் சம்பந்தப்பட்ட திடீர் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே வருவது பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் குறிப்பாக ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் இருக்கிற இளம்வயதினர்கள் மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலியால் மரணமடைவது அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இதயத்தை கொரோனா வைரஸ் பலவீனப்படுத்தி இருப்பதாகவும், இதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கும் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர் நிபுணர்கள். எனவே கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்தாலும்கூட நம்மை நாமே பராமரிப்பது அவசியம்.

அதீத உடற்பயிற்சி ஆபத்து

இளம்வயதில் தங்கள் உடலின் தன்மையைவிட அதீத உடற்பயிற்சி செய்பவர்களுக்கு CAC என்று சொல்லக்கூடிய coronary artery calcification பிரச்னை 40 வயதை எட்டும்போது உருவாகும். CAC பிரச்னையானது டிடி ஸ்கேன் மூலம் கண்டறியப்படுகிறது. அதாவது கால்சியமானது திட்டுக்களாக இதயத்தமனிகளில் படிகிறது. இதுவே இதய நோய்களுக்கு முன்னெடுப்பாக அமைகிறது.

image

ஒரு வாரத்தில் 450 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அதைவிட குறைவாக உடற்பயிற்சி செய்பவர்களைவிட CAC பிரச்னை வரும் வாய்ப்புகள் 27% அதிகம் என எச்சரிக்கிறது அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைத்துறை. மிதமான உடற்பயிற்சி செய்பவர்களுக்கு வாரத்திற்கு 150 நிமிடங்களும், ஏரோபிக் போன்று தீவிர உடற்பயிற்சி செய்பவர்களுக்கு வாரத்திற்கு 75 நிமிடங்களுமே பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் பரிந்துரைக்கப்படும் அளவுக்கும் குறைவாக உடற்பயிற்சி செய்பவர்கள் தங்கள் நடுத்தர வயதை நெருங்கும்போது அவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் டைப் 2 டையாபட்டிஸ் பிரச்னைகள் வரும் வாய்ப்புகள் அதிகம்.

அதீத மற்றும் அளவுக்கதிகமான உடல் உழைப்பு மற்றும் உடற்பயிற்சியிலுள்ள தீமைகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் விளக்கியுள்ளன. கோபன்ஹேகன் சிட்டி இதய ஆய்வு கூறுகையில், மெதுவாக ஜாக்கிங் செய்பவர்களைவிட வேகமாக ஜாக்கிங் செய்பவர்கள் முன்கூட்டியே இறக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்கிறது. தீவிர ஜாக்கிங் செய்பவர்களுக்கு பிரச்னைகள் வரும் வாய்ப்புகள் 9 மடங்கு அதிகம் என்கிறது.

தி மில்லியன் வுமன் இதழ் கூறுகையில், மிதமான பயிற்சி செய்பவர்களைவிட தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடும் பெண்களுக்கு இதய நோய்கள், பக்கவாதம் அல்லது ரத்த கட்டுகள் உடைதல் போன்ற அபாயங்கள் பலமடங்கு அதிகம் என எச்சரிக்கிறது. இருப்பினும் அனைத்து ஆய்வுகளும் ஒரே மாதிரியான கருத்துகளை வெளியிடுவதில்லை.

ஏன் அதீத பயிற்சி இதயத்திற்கு பிரச்னையாக அமைகிறது?

கடுமையான ஓட்டப்பந்தயங்களில் ஓடி முடித்த வீரர்களின் ரத்தமாதிரிகளின் சாம்பிள்களில் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளின் பயோமார்க்ஸர்கள் இருப்பதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். இந்த மார்கர்கள் தானாக குறைந்துவிடக்கூடியவை. அதேசமயம் தொடர்ந்து அதீத உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களுக்கு இதயச்சுவர்களை கடினமாக்கி, இதயத்தில் வடுக்களை உருவாக்கும்.

image

அறிகுறிகள் என்னென்ன?

அதீத உடற்பயிற்சி செய்பவர்களுக்கு கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்படும்.

 • நாள்பட்ட நெஞ்சுவலி
 • அசௌகர்யம் மற்றும் அழுத்தம்
 • எரிச்சல் உணர்வு
 • வீக்க உணர்வு
 • தலைவலி, குளிர் மற்றும் காய்ச்சல்
 • மங்கலான பார்வை
 • இதய துடிப்பு அதிகரிப்பு
 • மூட்டுகளில் வீக்கம் மற்றும் வலி
 • தசை இறுக்கம்
 • உடற்பயிற்சிக்கு பிறகு மூச்சுவிடுவதில் சிரமம்
 • இரவில் வியர்த்தல்
 • உணர்ச்சியின்மை

தொடர் இருமல் மற்றும் மார்பு கனம் போன்றவையும் அதீத உடற்பயிற்சியால் பிரச்னை ஏற்படுவதற்கான அறிகுறிகளே. இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

image

இதய பிரச்னைகளை குறைக்க என்ன செய்யலாம்?

உடற்பயிற்சி செய்வது உடலுக்கு பல்வேறு நன்மை பயக்கிறது. ஆனால் அதுவே அதிகமாகும்போது பிரச்னையும் உருவாகிறது. கீழ்க்கண்ட சில வழிகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

30 நிமிட தொடர் கடின உடற்பயிற்சிக்கு பிறகு சிறிது ஓய்வு தேவை

உடற்பயிற்சியின்போதும், முன்னும் பின்னும் உடலை நீரேற்றத்துடன் வைக்கவேண்டும்.

அதிக குளிர் அல்லது அதிக சூடான வெப்பநிலையில் உடற்பயிற்சி மேற்கொள்ளக்கூடாது.

எப்போதும் உங்கள் உடலின் வலிமை மற்றும் அளவுக்கு ஏற்றவாறே பயிற்சிகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.

எலும்பு அடர்த்தி மற்றும் தசைகளை பாதுகாக்க கார்டியோ முதல் வலிமை தரும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்