Published : 08,Dec 2022 06:57 PM

ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ்.. இமாச்சலில் பாஜக தோல்வியடைய 3 முக்கிய காரணங்கள்!

What-seems-to-have-hurt-BJP-most-in-Himachal-Unhappiness-with-CM-factional-fights-yearning-for-change

இந்த தேர்தலின் முடிவு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதால் இமாச்சல் பிரதேச மாநில தலைமைக்கு புத்துயிர் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது பாஜக தேசிய தலைமை.

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ். அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 39 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளை கைப்பற்றியுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது. ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய பாஜக 19 இடங்களுடன் 2-வது இடத்தில் உள்ளது. இது கடந்த முறையை விட 18 தொகுதிகள் குறைவாகும். இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக தோல்வி அடைந்ததற்கு 3 முக்கிய காரணங்களை அலசலாம்.

image

மாறி மாறி ஆட்சியை பிடிக்கும் அரசியல் வரலாறு

இமாச்சலப் பிரதேசத்தைப் பொறுத்தவரை பாஜகவும் காங்கிரஸும் தான் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது. எந்த ஆளும் கட்சியும் அங்கு ஆட்சியை தக்க வைத்துக்கொண்ட வரலாறு இல்லை. இதை முதல்வர் ஜெய்ராம் தாகூர் மாற்றிக்காட்டுவார் என பாஜக சூளுரைத்த நிலையில் மக்கள் அதனை ஏற்கவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதில் இமாச்சல் மக்கள் முனைப்புடனே இருக்கின்றனர் அன்றும் இன்றும்.

image

உட்கட்சிப் பூசல்

இமாச்சலப் பிரதேச பாஜகவில் கடந்த ஓராண்டாகவே உட்கட்சிப் பூசல், குழப்பம் இருந்து வந்தது. இதனால் தேர்தல் பணியில் சற்று சுணக்கம் காணப்பட்டது. இதை உணர்ந்த பிரதமர் மோடி இமாச்சலப் பிரதேசத்துக்கு நேரடியாக வந்து பரப்புரையில் ஈடுபட்டதுடன், ''மக்கள் வேட்பாளர்களை பற்றி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தாமரை சின்னத்தை பார்த்து வாக்களித்தால் போதுமானது. நான் தாமரை சின்னம் சார்பாக இங்கு வந்துள்ளேன். எனவே தாமரைக்கு நீங்கள் செலுத்தும் வாக்கு நேரடியாக எனக்கு ஓட்டு போடுவதை போன்றதாகும். இந்த வாக்குகள் எனது கணக்கில் வந்து சேரும்'' என்றுகூட உணர்ச்சிவசமாக பேசிப்பார்த்தார். ஆனால் மக்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை.

image

வெற்றிக்கு வித்திட்ட பிரியங்கா காந்தி

இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸின் வெற்றியை உறுதி செய்ய உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடினமாக உழைத்தார். அவரது பிரச்சாரம் இமாச்சல் மக்கள் மத்தியில் காங்கிரஸ் மீது ஈர்ப்புவர உதவியதாகக் கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள். இமாச்சலப் பிரதேசம் தனி மாநிலமாக உருவாக இந்திரா காந்தி ஆதரவாக இருந்தது குறித்தும், இந்திரா காந்திக்கும் இமாச்சலுக்கும் இருந்த பிணைப்பு குறித்தும் பிரியங்கா காந்தி தனது பரப்புரையில் நினைவூட்டினார். அவரது பேச்சு மக்கள் மனதில் நன்றாகவே எடுபட்டது.

அதேசமயம் பாஜக தலைவர்களின் பேச்சு இமாச்சல் மக்களை ஈர்க்கவில்லை என்பதும் கலநிலவரமாக இருந்தது. மாநில பிரச்சினைகள், மாநில அரசியல் சூழலை மையப்படுத்தி காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது. ஆனால் பாஜகவோ, ஆட்சிக்கு வந்தால் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்பது உள்ளிட்ட வழக்கமான பிரச்சார யுக்திகளையே கையாண்டது. பாஜக தேசிய தலைவர் நட்டாவின் சொந்த மாநிலம் இமாச்சல பிரதேசம்தான். ஆனாலும் பாஜகவுக்கு ஆதரவாக அலை வீசவில்லை. இந்த தேர்தலின் முடிவு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதால் இமாச்சல் பிரதேச பாஜக தலைமைக்கு புத்துயிர் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது பாஜக தேசிய தலைமை.

15 இடங்கள் வித்தியாசத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்த போதும் இரு கட்சிகளும் சுமார் 43 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளனர். ஆம் ஆத்மியின் பிரசாரம் பெரிய அளவில் இங்கு எடுபடவில்லை. ஒரு சதவீதம் வாக்குகள் மட்டுமே ஆம் ஆத்மி பெற்றது. குஜராத்தில் 12 சதவீதம் வாக்குகளை ஆம் ஆத்மி பெற்றது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அதேபோல் ஹிமாச்சலில் நடைபெறவில்லை. 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்