Published : 08,Dec 2022 06:29 PM

குஜராத்தில் பாஜகவின் மாபெரும் வெற்றிக்கு காரணமான 8 ரகசியங்கள்!

8-reasons-why-BJP-marks-historic-victory-in-Gujarat

2022ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக அசுர வெற்றி பெற்று 7வது முறையாக குஜராத்தில் ஆட்சியமைக்கிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 150க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று மாபெரும் பலத்துடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மீண்டும் மீண்டும் பாஜக வெற்றிபெற காரணமான 6 ரகசியங்களை இங்கு பார்க்கலாம்.

1. பிரதமர் நரேந்திர மோடியின் பாப்புலாரிட்டி

பாஜக சார்பாக பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக பரப்புரையில் ஈடுபட்டார். கட்சி தன்னைவிட மோடியை நம்பிருப்பதை இந்த தேர்தல் பரப்புரையானது எடுத்துக்காட்டியது. 'Modi vs the rest’ என்ற போட்டியே குஜராத்தில் நிலவியது குறிப்பிடத்தக்கது. பாஜக வேட்பாளர்களைவிட பிரதமர் மோடிக்காக பாஜகவுக்கு கிடைக்கிற ஆதரவு குறித்து குஜராத்தின் பல தொகுதிகளை விசிட் செய்த The Quint செய்தி நிறுவனம் பகிர்ந்திருக்கிறது. அஹமதாபாத்தைச் சேர்ந்த கடை உரிமையாளர் லக்‌ஷ்மண் படேல் கூறுகையில், ”பணவீக்கம் மற்றும் வேலை வாய்ப்பின்மை போன்ற மிகப்பெரிய பிரச்னைகளை குஜராத் மக்கள் எதிர்கொண்டிருந்தாலும், பிரதமர் மோடி எங்களை பார்த்துக்கொண்டிருக்கிறார். அது போதும். பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும்” என்று பேசியுள்ளார்.

ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவுக்கு முன்பும் பிரதமர் குஜராத்தில் வீடு வீடாகச் சென்று விரிவான பரப்புரை மேற்கொண்டார். டிசம்பர் 1ஆம் தேதி அகமதாபாத்தில் மாபெரும் சாலைக் கண்காட்சியையும் அவர் நடத்தினார்.

2. கொரோனா பாதிப்பு கட்டுப்பாடு

கொரோனா பொதுமுடக்கத்துக்கு பிறகு குஜராத்தில் நடைபெறும் முதல் தேர்தல் இது. மாநிலத்தில் பதிவான ஏராளமான கொரோனா உயிரிழப்புகளால், கொரோனா தொற்றை கட்டுக்குள் வைக்க தவறிய அரசின் நடவடிக்கைகள் மீது மக்கள் கடும் அதிருப்தியை தெரிவித்தனர். மக்களை திருப்திபடுத்த திட்டமிட்ட பாஜக அப்போதைய முதல்வர் விஜய் ரூபானியை நீக்கி 2012ஆம் ஆண்டு பூபேந்திர படேலை முதல்வராக நியமித்து வாக்காளர்களின் கோபத்தை சற்று தணித்தது.

அதன்பிறகு முதல் 10 முக்கிய தேர்தல் சிக்கல்களின் பட்டியலில் கொரோனா தொற்றை தவறான கையாண்டதுகூட இடம்பெறவில்லை. கருத்துக்கணிப்பில்கூட 27.9 சதவீத வாக்காளர்கள் தேசிய பிரச்னைகளே தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் என்றும், 18 சதவீதம் பேர் மதம் குறித்த பிரச்னைகள் வாக்குகளை பாதிக்கும் என்று கூறியுள்ளனர்.

3. காங்கிரஸின் இயலாமை

2017ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 77 இடங்களில் வெற்றிபெற்றது. கடந்த இரண்டு தசாப்தங்களிலேயே மிகச்சிறப்பாக தேர்தலை கையாண்டு 41.4% வாக்குகளை பெற்றிருந்தது. ஆனால், இந்த ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தனது இடத்தை தக்கவைக்க தவறிவிட்டது. வெறும் 27.04 % வாக்குகளை மட்டுமே பெற்று கிட்டத்தட்ட 20 இடங்களுக்கு கீழாகவே மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.

image

குறிப்பாக குஜராத்தின் பழங்குடியினரிடையே தங்கள் இடத்தை நிலைநிறுத்த தவறிவிட்டது காங்கிரஸ். குஜராத்தில் 27 இடங்கள் பழங்குடியினரை நம்பியிருந்த நிலையில், அனைத்து இடங்களில் பாஜகவே வெற்றிபெற்றுள்ளது காங்கிரஸின் தோல்வியை காட்டுகிறது. குஜராத்தில் 89.17 லட்சம் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் மொத்த மக்கள்தொகையில் 15% என்கிறது 2011ஆம் ஆண்டு சென்சஸ் அறிக்கை.

4. முதன்முறை வாக்களிப்போர் குறைவு

தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறை வாக்களிப்பவர்கள் 16 சதவீதத்துக்கும் குறைவு. ஆனால், 50 வயதை தாண்டிய வாக்காளர்கள் 60% அதிகரித்துள்ளனர். தொடர்ந்து 27 ஆண்டுகள் ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கும் பாஜகவிற்கு இது சாதகமானதாக இருக்கிறது.

5. 2017இல் விட்ட இடங்களின்மீது கவனம்

2012ஆம் ஆண்டு வெற்றிபெற்ற இடங்களான மோர்பி, சுரேந்திரநகர், சோம்னாத் மற்றும் அம்ரேலி போன்ற இடங்களில் 2017ஆம் ஆண்டு தோல்வியை தழுவியது பாஜக. இந்த இடங்களில் தோல்வியடைந்த இடங்களை குறிவைத்து பரப்புரைகளை மேற்கொண்டு வெற்றியும் பெற்றிருக்கிறது.

image

6. வலிமையடையும் பாஜக கட்சி

தங்கள் போட்டியாளர்களான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மியைவிட பாஜக கட்சி நிர்வாகம் பலம் வாய்ந்ததாக திகழ்கிறது. நவம்பரில் முதல் இரண்டுகட்ட வேட்பாளர் பட்டியல்களை வெளியிட்ட பிறகு கட்சியினர் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தியை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி கையாண்டது பாஜக. முதல்வர் பூபேந்திர படேலின் அமைச்சரவையில் உள்ள 5 அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற சபாநாயகர் நிமாபென் ஆச்சார்யா உட்பட 42 க்கும் மேற்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட்டு மறுக்கப்பட்டது. அதேசமயம் காங்கிரஸிலிருந்து பாஜவில் இணைந்தவர்களுக்கு சீட்டுகள் வழங்கப்பட்டது வெற்றிக்கான யுக்தியாக பார்க்கப்படுகிறது.

7. அதிருப்திகளை கட்டுக்குள் கொண்டு வந்த பாஜக!

2017 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக 100 இடங்கள் கூட எட்ட முடியாததற்கு எதிர்ப்பு அலைகள் முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. பட்டேல் சமுதாயத்தினரின் தொடர் போராட்டங்கள் அதற்கு முக்கியமான காரணமாக இருந்தது. அதனை தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளில் ஜிஎஸ்டி வரி விவகாரத்தில் வணிகர்களும், விவசாயிகளும் குஜராத் மற்றும் மத்திய பாஜக அரசு மீது கோபத்தில் இருந்தனர். பல போராட்டங்களையும் நடத்தினர். குறிப்பாக சவுராஷ்டிரா பகுதிகளில் இதன் தாக்கம் இருந்தது. இதனையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்ட பாஜக மாவட்ட அளவில் கவனம் எடுத்துக் கொண்டு எதிர்ப்பு அலைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அதற்காக கட்சி மீது இருந்த அதிருப்தியை போக்க அதிரடியான மாற்றங்களை செய்தது.

8. மண்ணின் மைந்தர்கள் செய்த மேஜிக்

குஜராத் மாநிலத்தில் பாஜகவின் தொடர் வெற்றிக்கு முக்கியமான காரணம் பிரதமர் மோடியும், அமித்ஷாவும்தான். மோடி பிரச்சார பீரங்கி என்றாலும் அதன் வியூகங்களை வகுத்து கொடுப்பவராக அமித்ஷாவே திகழ்கிறார். குஜராத் மூளை முடுக்கெல்லாம் கவர் செய்யும் அளவிற்கு நரேந்திர மோடியின் 35 பேரணிகளுக்கு திட்டம் கொடுத்தார். மாவட்ட அளவில் தொண்டர்களை உற்சாத்தில் தொடர்ந்து வைத்துக் கொண்டிருந்தார். ஒட்டு மொத்தத்தில் மண்ணின் மைந்தர்களான நரேந்திர மோடியும், அமித்ஷாவும் சேர்ந்து இந்த மேஜிக்கை நிகழ்த்தியுள்ளார்கள்.

Courtesy - ‘The Quint’ 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்